திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் அல்லிப்பூ பறிப்பதற்காக படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படகு கவிழ்ந்ததில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்குப் பூப் பறிப்பதற்காக குடும்பத் தலைவருடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் படகில் சென்றுள்ளனர். இதன் போது படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நிலாவெளிப் பிரதேச வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை(11) பிற்பகல்-02 மணி முதல் முன்பள்ளி முன்றலில் நடைபெறவுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச சனசமூக நிலையத் தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முல்லைத்தீவு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார் கயந்தன் முதன்மை விருந்தினராகவும்,புன்னாலைக்கட்டுவன் தெற்கு கிராம அலுவலர் பே. மயூரதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இனப்பதற்றம் தீவிரமடைந்ததையடுத்துக் கடந்தவாரம் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியத்துடன் இந்தத் தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்குமெனத் தெரிவித்திருந்தது. எனினும், இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என என்னால் தற்போது கூற முடியாது. அது நிலைமைகளைப் பொறுத்த விடயம்.
இதேவேளை,அவசர காலச்சட்டத்தின் கீழேயே சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை தொடரும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி கோலாலம்பூரில் நேற்றுச் சனிக்கிழமை(10) அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மைப் பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எப்படியோ அதனை முற்றிலும் மன்னித்து விட்டோம்.
பிரபாகரன் இறந்து கிடப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குள் இரு உணர்வுகள் எழுந்தன. ஏன் இந்த மனிதனை அவர்கள் இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பது முதலாவது, இரண்டாவதாக அது அவருக்கும், அவரது பிள்ளைகளுக்கும் உண்மையில் கெட்டது என உணர்ந்தேன்.
இந்த அனுபவத்திலிருந்து வந்த நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
யாழ்.உரும்பிராய்ச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் இன்று சனிக்கிழமை(10) பிற்பகல்- இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகியதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரும்பிராயிலிருந்து கோண்டாவில் சந்தி நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை அதே பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரொருவர் பின்புறமாக மோதியதாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் வேகமாக வந்த குறித்த குடும்பஸ்தர் அப்பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் மதுபானம் வாங்குவதற்காக சடுதியாகத் துவிச்சக்கர வண்டியைத் திரும்பியுள்ளார்.
இதன் போது பலாலி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளின் பின்புறம் கடுமையாக மோதியதில் இருவரும் சடுதியாக வீதியில் விழுந்ததுடன் துவிச்சக்கர வண்டியில் சென்ற சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அவரது மூக்கால் இரத்தமும் வழிந்துள்ளது. அத்துடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞனும் சிறுகாயங்களுக்குள்ளானார். சம்பவத்தில் இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் கடும் சேதமடைந்தது.
42 வயதான குறித்த குடும்பஸ்தர் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் உரும்பிராய்ப் பகுதியிலுள்ள உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்று அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வருவதாகப் பொய் கூறி உறவினரொருவரின் துவிச்சக்கர வண்டியைப் பெற்று வந்த போதே குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
துவிச்சக்கர வண்டி செலுத்திய குடும்பஸ்தரின் கவனயீனமே குறித்த விபத்துக்கான காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்' என்று கூறுவார்கள்..சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிடப் பொய்யான செய்திகளே மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில், மக்கள் உண்மையான செய்தியை விடப் பொய்யான செய்தியை அதிகமாக நம்புவதாகவும், இதனால் அவர்கள் பொய்யான செய்தியைச் சமூக ஊடகங்களில் மிக விரைவாகப் பகிர்வதும் தெரியவந்துள்ளது. ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையான செய்திகள் 1000 பேரைச் சென்றடைகின்றன. அதே நேரத்தில் பொய்யான செய்திகள் 1,00,000பேரை சென்றடைகின்றன. உண்மையை விடப் பொய்யான செய்திகள் 70% அதிகமாகப் பகிரப்படுகின்றன.
மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாகச் செய்திகளை விரும்புவதே பொய்யான செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அவர்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை அவர்கள் பகிர்ந்து விடுகின்றனர். அரசியல் செய்திகள் பொய்யாகப் பகிரப்படுகிறது. இது போன்ற பொய்யான செய்திகளில் அரசியல் செய்திகள் அதிகளவில் உள்ளது. அது தவிர, நகர்ப்புற கதைகள், வணிகம், பயங்கரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்துப் பொய்யான செய்திகள் பகிரப்படுகிறது.
ஆராய்ச்சியின் சக ஆய்வாளரான பேராசிரியர் சினான் ஆல், “தவறான செய்தி மிகவும் சுவாரஸ்யமான கதை போன்றது. எனவே அது மக்களால் அதிகம் பகிரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழ்அரசியல் கைதி கோமகனின் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமானதொரு செயற்பாடு. சிங்களவர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்க வேறொரு நீதி என்பதனை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு. இந்தச் செயற்பாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று சனிக்கிழமை (10) எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அரசியல் கைதியான கோமகன் இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுக் கடுமையான துன்புறுத்தல்களின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கான தடைகளும் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும், நேற்று வெளிநாடு செல்வதற்காகச் சென்ற போது கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு பலமணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராகவே தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த-2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான போதும் தற்போது வரை குறித்த சட்டம் நீக்கப்படவில்லை.
இதற்கான அழுத்தத்தைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உரிய வகையில் வழங்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கையைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகிறது எனவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.
இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு சென்ற இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல் போராடித் தோல்வியைத் தழுவியது.
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.
எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் களமிறங்கினர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.
பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.
109 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.
போட்டி நிறைவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.
இலங்கையில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வன்முறைகள் தூண்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து முகநூல், கீச்சகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்திருந்தது. இந்தத் தடை இன்று(10) நீக்கப்படுமென நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்தப்படவுள்ள பாதுகாப்பு நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தின் பின்னரே தடையை நீக்குவது தொடர்பான முடிவெடுக்கப்படுமெனவும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பலபகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை- 08 .30 மணி முதல் மாலை-05.30 மணி வரை குடாநாட்டின் பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, மானிப்பாய் வீதி, கைதடி வீதி, இருபாலைச் சந்தி, இருபாலை பழைய வீதி, வட்டக்குளம், கட்டைப்பிராய், கல்வியங்காடு, இலங்கைநாயகி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டு, இராமலிங்கம் வீதி, முடமாவடி, கிளிகடைச் சந்தி, GPS வீதி, கோப்பாய்ப் பொலிஸ் நிலையம், திருநெல்வேலி பாற்பண்ணை, திருநெல்வேலிச் சந்தை, கலாசாலை வீதி, பலாலி வீதியின் ஒருபகுதி, துணைவி, பண்டத்தரிப்பு, மாதகல், இளவாலை, சங்கானை, சாந்தை, சில்லாலை, சீரணி, சண்டிலிப்பாய், வட்டுக் கோட்டையின் ஒரு பகுதி, தொட்டியாலடி, பிரான்பற்று, மாரீசன்கூடல், சேந்தான்குளம், பெரியவிளான், மெய்கண்டான், சுழிபுரம்,தொல்புரம், யம்புகோளப் பட்டிணம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொஸ்வத்த பத்தரமுல்லையில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கியமை தொடர்பில் தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.கசுன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெப் ரக வாகனத்தில் பயணித்த தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசும் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் குறித்த பேருந்து சாரதிக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதையடுத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு குறித்த பெண் பேருந்துச் சாரதியைத் தாக்குவதையும், தென்மாகாண சபை உறுப்பினர் தனது கைகளால் கடுமையாகத் தாக்குவதையும் வேறொருவர் தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாகத் தலங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குளத்தில் சடலத்தைப் பார்த்த சிலர் நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர். குளத்திலிருந்து மீட்கப்பட்டவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைகளிற்காக வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போது அவர் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் (வயது – 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்த நாட்டில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகக் காணப்படுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக அட்டூழியங்கள், அநியாயங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது தான் வரலாறாகவுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான அநீதிகளுக்குச் சரியான நீதி கிடைப்பதிலும் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த- 21.10.2016 அன்று யாழ். கொக்குவில் குளம்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சனின் 26 ஆவது பிறந்தநாள் நிகழ்வு வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ். சுன்னாகத்திலுள்ள நினைவுப் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத இன ரீதியான வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான காரணங்களால் இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களாகவுள்ள நாமும் ஒரு குடிமக்களாக மதிக்கப்படுகின்றோமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், சரியான நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகளை நாம் இன்னமும் இனம் காணாதது துரதிஷ்டவசமானது என்றார்.
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இன்று (10) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் வரணி கரம்பைக் குறிச்சிப் பகுதியிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்குத் தொடுவாய், பூதன் வயல், முறிப்பு, தண்ணி முறிப்பு, குமுழமுனை, செம்மலை,கருநாட்டங்கேணி, கொக்கிளாய், குமுழமுனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு கிராமம், கற்பகபுரம் கிராமம், அரசமுறிப்புக் கிராமம், பஸார் வீதி, மில் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ராஜ் மீன்பிடி வலைத் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவரும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினரொருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் முக்கிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்து வந்த போதும் அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, மோதல்களைத் தடுக்கத் தவறியதாகவும் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து இலங்கை முழுவதும் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று சனிக்கிழமை(10) முதல் மீண்டும் செயற்பட ஆரம்பிக்குமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்றைய தினம் நீக்கப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மோசமான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான் சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள காரணத்தால் அந்தத் அந்த தடை நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் அதிகளவு பிரச்சினைகள் பேஸ்புக்காலேயே ஏற்படுகின்றன என யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி- சிந்துபாமினி தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற போது "பெண்களுக்கான பாதுகாப்பும் சட்ட நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தப் பேஸ்புக் என்பது ஒரு அலைவரிசை. இலங்கையில் பேஸ்புக் அலைவரிசை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைத் தொடர்ச்சியாக நிறுத்துவதன் மூலம் நாங்கள் வன்முறைகளை அரைவாசிக்கும் மேலாக குறைத்துக் கொள்ள முடியும்.
ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளாக பதியப்படுகின்றன.
தொலைபேசி அழைப்பின் மூலம் ஒருவரை கடுமையாக ஏசினாலோ அல்லது ஆபாசப்படங்களை குறுந்தகவல்கள் மூலம் அனுப்பினாலோ அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பது இலகுவானதாகவுள்ளது.
குறிப்பாக கைத்தொலைபேசிகளின் சிம்மிற்குரிய நிறுவனங்கள் பொறுப்புக் கூற வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதன் மூலம் தொடர்பு கொள்ளும் இலக்கத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆனால், பேஸ்புக் இயக்குபவர்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமமானதாகவிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் மற்றும் மேம்பாடு தொடர்பான வேலைப்பாடுகள், செயற்பாடுகள் என்பனவற்றிற்கும் ஒரு முடிவே இல்லையா? .மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகளையும், செயற்திட்டங்களையும் செய்து கொண்டிருக்கின்றோமே! எனச் சிலர் சொல்லுவார்கள். நிச்சயமாக இதுவொரு முடிவுறாப் பயணம் தான். ஆனால், அடைவுகளும் நிச்சயமாகப் பூச்சியமில்லை. ஒவ்வொரு செயற்பாட்டின் அடைவுகளும் வெற்றிகரமானவையே. முன்னேற்றகரமான பாதையில் மகளிர் மேம்பாடு பயணித்துக் கொண்டிருக்கின்றது என ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற போது "மகளிர் மேம்பாடு! சவால்களும் சாதனைகளும்" எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த வருட சர்வதேச மகளிர் தினத்தில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் பால்நிலை சமத்துவத்தை எட்டுவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்குமான எமது செயற்பாடுகள் முடிவுறாதவை என்று குறிப்பிடுகிறார்.
இவை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத்தின் மிகப்பெரிய சவாலாகவும் விளங்குகின்றது. இன்றைய உலகின் யதார்த்தமாகவும் இதுவே காணப்படுகின்றது.
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் எங்கள் பெண்கள் வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வந்து புதுமைகள் படைப்பதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும், அங்கீகாரங்களும் இன்றைய உலகில் மிகக் காத்திரமாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய கல்விச் சூழலில் பெண்களின் கால்த்தடம் மிகத் திடமாகவேயிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி அனைத்துச் சிறுவர்களுக்குமான தரமான கல்வியும், சமமான தொழில் வாய்ப்புக்களும் கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. அதேபோன்று அனைத்துத் தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக இருந்து கொண்டிருக்கின்றது.
அரச, தனியார் சேவை வழங்களில் எவ்வித பாகுபாடோ, பின்னடைவோ இன்றி மகளிர் மேம்பாட்டு நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பெண்கள் முன்னேற்றப் பயணத்தில் எதிர்நோக்குகின்ற தடங்கல்கள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் நாங்கள் சிந்திப்போமானால் என்னுடைய பார்வையில் காணப்படுவது அது எங்கள் ஒவ்வொருவருடைய மனங்கள் தான். இதனை நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் எங்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ள பால்நிலை சம்பந்தமான விம்பங்களே. ஆண்களும், பெண்களும் அவ்வாறானதொரு விம்பத்தை மனங்களில் வைத்திருப்பது தான் அநேகமான பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.
சில நேரங்களில் இது என்னால் முடியுமா? என்னால் இயலாது. நான் பலவீனமானவன் தான். எனக்கு ஆற்றல்கள் குறைவு தானோ!, நான் ஏனையவர்களில் தங்கி வாழவேண்டும் தான் போலும் போன்ற பலவீனமான மன ஓட்டங்கள் ஒவ்வொரு ஆண், பெண் மனங்களிலும் வாழ்க்கையின் ஏதோவொரு காலகட்டத்தில் எதிர்நோக்கியவர்களாகவே இருப்போம். ஆனால், இவ்வாறான பலவீனமான மன ஓட்டங்களை கண நேரத்தில் கடந்து வருபவர்கள் வெற்றியாளர்களாகவும், அந்தப் பலவீனமான மன ஓட்டங்களுடன் தங்கியிருப்பவர்கள் தடுமாற்றத்தைச் சந்திப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆனால், துரதிஷ்ட வசமாக இந்தத் தடுமாறுவோர் கூட்டத்தில் பெண்களின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது.
எதிர்மறையான எண்ணச் சூழல்கள் சுற்றியுள்ளோராலும் உருவாக்கப்படுகின்றன. ஒருவரைப் பார்த்து ஐயோ..உங்களுக்கு ஏதோ வருத்தம் போலிருக்கிறது...உடல் மெலிவாகவிருக்கிறது, களைப்பாகவிருக்கிறது என நான்கைந்து பேர் தொடர்ச்சியாக கூறினால் சுகதேகியாகவுள்ள ஒருவரும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்.
இந்த வருடத்துக்கான ஐக்கியநாடுகள் சபையின் தொனிப் பொருளாக "இது தான் நேரம்" அமைந்துள்ளது. கிராமம், நகரம் ஆகியவற்றிலுள்ள அனைத்துச் செயற்பாட்டாளர்களும் இணைந்து பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் அங்கு ஆற்றிய உரையின் முழு வடிவத்தையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(13) முற்பகல் யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பட்டமொன்றைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்குச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட எம்மை மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன.எனவே, இத் திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று(09) தெரிவித்துள்ளது.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை கிறேக்லி தோட்டத்தில் இரண்டு சிறுத்தைக்குட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(09) மாலை-05 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்துக் குறித்த சிறுவர்கள் இது தொடர்பாக அப்பகுதிப் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடி வருவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.