//]]>

Wednesday, March 7, 2018

பிற்போடப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீடப் பரீட்சை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை(07) ஆரம்பமாகவிருந்த கலைப்பீடப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாகவே குறித்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன புதிய பரீட்சைத் திகதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் மேலும் கூறியுள்ளார்.

(எஸ்.ரவி-)

Thursday, January 25, 2018

நீங்களும் விண்ணப்பிக்க முடியும்!

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியில் பகுதிநேரக் குறுங்கால அடிப்படை ஆங்கிலப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வருடம் க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும், பயிற்சிநெறியில் இணைந்து கற்க விரும்பும் ஏனைய மாணவர்களும் தொழில்நுட்பவியல் கல்லூரித் தொழில் வழிகாட்டல் அலுவலகத்தில் மேலதிக விபரங்களைப் பெற முடியுமென கல்லூரியின் பணிப்பாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 17, 2018

கல்லூரியின் வளர்ச்சிக்கு கல்வி மாத்திரம் கைகொடுக்காது: யாழ்.அரச அதிபர் அறிவுரை(Video)

ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு கல்வி மாத்திரம் கைகொடுக்காது. மாணவர்களின் ஒழுக்கம் மிக மிக முக்கியம். கல்வியோடு சேர்த்து மாணவர்களின் ஒழுக்க நெறிகளும் வளர்க்கப்படும் போது தான் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜைகள் வாழும் சமூகத்தை எங்களால் கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவுரை கூறியுள்ளார்.

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப்  பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் சிலை திறப்பு விழாவும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(16) காலை கல்லூரியின் ஆ.சி. நடராசா அரங்கில் சிறப்பாக இடம்பெற்ற போது  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் கல்லூரியில் சிறந்த ஒழுக்கம் காணப்படுகிறது. ஆகவே, ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கிப் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இவ்வாறான கல்லூரிகளில் சேர்க்கும் போக்கு நிலவுகிறது. ஒரு பாடசாலையில் கல்வி எவ்வாறான உயர்நிலைகளைப் பெற்றிருந்தாலும் கூட  ஒழுக்கம் காணப்படாத பாடசாலைகள் எவராலும் மதிக்கப்படுவதில்லை. எனவே, மற்றவர்களை மதிக்கின்ற பண்பையும்,  உயர் நெறிகளையும் கல்வியால் உருவாகும் ஒழுக்கம் மூலம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

யாழ். மாவட்டத்திலேயே கடந்தகால யுத்தத்தால் மிக மோசமான பாதிப்புக்களையும், வலிகளையும் சுமந்த பிரதேசமாக வலிகாமம் வடக்குப் பிரதேசம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் இன்னும் பல நூற்றுக்கணக்கான மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. நான் கடந்த 1993 ஆம் ஆண்டு தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியிருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் தனியே மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மாத்திரமே இயங்கிக் கொண்டிருந்தன. ஏனைய பகுதி மக்கள் அனைவரும் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் வயாவிளான் மத்திய கல்லூரியும் சேதமடைந்தது.

இந்தக் கல்லூரி அபரிதமான வளர்ச்சியடைந்த காலப் பகுதியில் தான் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. தற்போது இந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்து வருவதாக அதிபர் பேசும் போது குறிப்பிட்டார். வலிகாமம் வடக்கில் விடுபடாத பகுதிகள் இன்னமும் பலவுள்ளன.  எதிர்காலத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களும் விடுபடும் போது இந்தக் கல்லூரி மீண்டும் பழைய நிலையை அடையுமென நம்புகின்றேன். இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பழைய மாணவர்களும் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

உண்மையான தலைமைத்துவமும், அர்ப்பணிப்பான ஆசிரிய வளமும் காணப்படும் போது எந்தவொரு கல்லூரியும் எத்தகைய சவால்கள் ஏற்பட்ட போதும் தலைநிமிர்ந்து நிற்கும்.

கடந்த வருடமும் அமைச்சுக்களிலிருந்து எங்களுக்கு குறிப்பிட்டவளவு நிதி கிடைக்கப் பெற்றன. இந்த வருடமும் அமைச்சுக்களின் நிதி கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கின்றோம். வலிகாமம் வடக்குப் பிரதேசம் கடந்த கால யுத்தத்தால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டமையால் கடந்த வருடமும் நாம் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைகளுக்கே முக்கியத்துவம் வழங்கியிருந்தோம். எனவே, இவ்வருடமும் அவ்வாறான நிதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் இந்தக் கல்லூரியின் பெளதீக வளர்ச்சிக்கு எங்களாலான உதவிகளை வழங்க முடியும்.

நான் உதவி அரசாங்க அதிபராகவிருந்த போது இந்தப் பாடசாலைக்கு வருகை தருவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. தற்போது அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளமையை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
(செல்வநாயகம் ரவிசாந்-)

Tuesday, January 16, 2018

வயாவிளான் மத்திய கல்லூரியில் நிறுவுனர் உருச்சிலைகள் திறப்பு(Video)

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப்  பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் சிலை திறப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை-09 மணி முதல் கல்லூரியின் ஆ.சி. நடராசா அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் வே. த. ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் முதன்மை விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா. காண்டீபன், ஒட்டிசுட்டான் உதவிப் பிரதேச செயலர் செல்வி- இ. ஜெகநாதசர்மா ஆகியோர் ஏனைய விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இதன் போது யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் நிறுவுனர்களான அமரர்- ஈழகேசரி நா. பொன்னையா,  அமரர்- சட்டத்தரணி வல்லிபுரம் இராசநாயகம் ஆகியோரின் உருவச் சிலைகள் கல்லூரி முன்றலில் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து கல்லூரியின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாள் கேக்கினை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் சம்பிரதாயபூர்வமாக வெட்டியதுடன் மாணவ, மாணவியருக்கு கேக்கும் பரிமாறினார். இதன் போது 'வயவன்' சஞ்சிகையின் 16 ஆவது மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கல்லூரியில் கல்வித்துறை மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.

('தமிழின் தோழன்')

Thursday, January 11, 2018

வறிய மாணவர்களுக்கு வருடாந்தம் உதவி வழங்கும் யாழ்.நல்லுள்ளங்கள்(Photos)

யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மறைந்த ஊழியர்களின் நினைவு கூரலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(07) முற்பகல்-10 மணி முதல் யாழ். திருநெல்வேலியிலுள்ள நல்லூர் கால்நடை வைத்திய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவரும், உடுவில் கால்நடை வைத்திய அதிகாரியுமான வைத்தியகலாநிதி சி. க. விமலகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி- வத்சலா அமிர்தலிங்கம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் திணைக்கள ஊழியர்களாகச் சேவையாற்றி வரும் போது கடந்த வருடம் அகால மரணமடைந்த ஊழியர்களான கிருஷ்ணமூர்த்தி லவகஜன் மற்றும் இராசையா பத்மநாதன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக மெழுகு திரியேற்றி மெளன அஞ்சலிப் பிரார்த்தனை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள 15 வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து தனித் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ். மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ஊழியர் நலன்புரிச் சங்க நிர்வாகம் தனது அங்கத்தவர்களிடம் சேகரித்த நிதியில் வருடாவருடம் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் கற்றலுக்கு உதவி வருகின்றமை பலருக்கும் முன்னுதாரணமாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



Tuesday, January 9, 2018

மாணவர்களின் சீருடைகளை பெறுவதற்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்களுக்குச் சீருடைகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் செல்லுபடியாகும் கால எல்லை எதிர்வரும் ஜனவரி-30 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக இலங்கை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சில காரணங்களால் வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கமைய சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சு மேலும் கூறியுள்ளது.

Saturday, January 6, 2018

பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு......

நாடாளாவிய ரீதியில் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும்- 26 ஆம் திகதி வரை பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

இந்நிலையில் விண்ணப்பம் உள்ளடங்கிய கையேடு நேற்று(05) முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையின் மூலம் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இவ்வருடம்  பல்கலைக்கழகத்திற்கு 30 ஆயிரத்து 500 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 3, 2018

யாழில் மாணவர்கள், பெற்றோர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி(Photos)

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம்  தரம் -10 வகுப்பை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து இரு நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் இன்று(03) முடிவுக்கு வந்தது.

மேற்படி பாடசாலையில் இதுவரை தரம்-09 வரையான வகுப்புக்கள் இயங்கி வந்த நிலையில் க.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பல வருடங்களாக பாடசாலைச் சமூகம் கோரிக்கை விடுத்துவந்தது.

இந்த விடயம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம்- 28 ஆம் திகதி வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம்  கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இவ்வருடம் தரம் -10 வகுப்புக்கு அனுமதி வழங்க முடியாது என டிசம்பர் மாதம்- 28 ஆம் திகதி வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் பதில் வழங்கினார்.

அவரது இந்த அசமந்தப் போக்கான, காலங்கடந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(02) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்பாடசாலையில் தரம்- 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் வரை தாங்கள் போராட்டத்தை தொடர்வோம் எனக் கூறிய அவர்கள் இன்று புதன்கிழமை காலையும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தினால் மாணவர்கள் எவரும்  கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடாததுடன் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் போராட்டத்தைக் குழப்புவதற்கு முயன்றதுடன்  போராட்டக்காரர்களை வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அழைத்துச் சமரசம் செய்வதற்குப் பல்வேறு  முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஒரு கட்டத்தில் போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களில் ஒருவரான தன்னைப் பொலிஸாரைக் கொண்டு கைது செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபரூடாக அச்சுறுத்தினார் என பழைய மாணவர் சங்கச் செயலாளர் ந.பொன்ராசா தெரிவித்தார்.

எனினும், மாணவர்களுடன் இணைந்து பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில் இன்றைய தினம் வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.
சம்பவத்தைக் கேள்வியுற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.சுகிர்தன் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட மேற்படி பாடசாலைக்குச் சென்று போராட்டக்காரர்களுடனும், அதிபர், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார். இந்தப் பாடசாலை தரம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவரும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வலயக் கல்விப் பணிமனையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தையடுத்து பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம் தரம் -10 வகுப்பை ஆரம்பிப்பது எனவும், அடுத்த வருடம் தரம்- 11 வகுப்பை ஆரம்பிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு மாகாணக் கல்வி அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கடிதத்தின் பிரதி போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று மதியம்-01 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினமே தரம்-10 மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வகுப்புக்கள் ஆரம்பமாகின. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Tuesday, January 2, 2018

யாழில் மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் போராட்டம் (Photos)

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் பத்தாம் தரத்தை ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (02) பாடசாலை முன்பாக வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி பாடசாலையில் தற்போது தரம்- 09 வரையான வகுப்புக்களே நடைபெற்று வருகின்ற நிலையில் இங்கு க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வருடத்திலிருந்து தரம்- 10 ஐ ஆரம்பித்து அடுத்த வருடம் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை நடாத்துமாறு வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு கடந்த- 28 ஆம் திகதி தாங்கள் கடிதம் சமர்ப்பித்தனர் எனவும், ஒரு மாதம் தாமதித்து டிசம்பர் 28 ஆம் திகதி, இவ்வருடம் தரம்- 10 வகுப்பை ஆரம்பிக்க முடியாது என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார் எனவும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் தெரிவித்தார்.

பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாடாசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்தே மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தனர் எனவும், தமது கோரிக்கைக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலையில் தரம்-09 இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகுகின்றனர். இதனால், இக்கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து வருகின்றது என மாணவர்களின் பெற்றோர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
தமது பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இன்று  ஆரம்பித்த போராட்டம் நாளையும் தொடரும் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.


யாழ். சாதனை மாணவனுக்கு சித்தார்த்தன், கஜதீபன் வழங்கிய கெளரவம்(Photo)

உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்றுச் சாதனை நிலைநாட்டிய யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான சிறிதரன் துவாரகனுக்கு இன்றைய தினம்(02) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்பணப் பரிசில் வழங்கிக் கெளரவித்துள்ளனர். 

இன்று செவ்வாய்க்கிழமை(02) முற்பகல் யாழ். பருத்தித்துறையிலுள்ள மாணவனின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற மேற்படி உறுப்பினர்கள் மாணவனின் சாதனையைப் பாராட்டிப் பணப்பரிசில் கையளித்ததுடன், கைகுலுக்கி வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். 

இதேவேளை, மேற்படி மாணவனின் கல்விச் சாதனையைப் பாராட்டித் தினமும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.