//]]>

Tuesday, February 27, 2018

சங்கானையில் நாளை இலவச மருத்துவ முகாம்:உங்களுக்கும் வாய்ப்பு!


யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சமூதாயத் துறையினரும், சங்கானைப்  பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து சங்கானைப் பிரதேச ஓய்வூதியர் நம்பிக்கை நடாத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை புதன்கிழமை(28) காலை-07 மணி முதல் சங்கானைப் பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் இணைந்து அனைத்துத் தரப்பினரும் பயன்பெற முடியுமெனவும், பயன்பெற விரும்புபவர்கள் 12  மணி நேர இடைவேளையுடன் சமூகம் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(எஸ்.ரவி-)

Sunday, January 21, 2018

மலச்சிக்கல்



பொதுவான காரணங்கள்:
உணவுமுறையில் மாற்றம்
குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது
தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை
இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள்
உடல் உழைப்பின்மை
அதிக மனஅழுத்தம்
பிரயாணம்
மலம் வரும்போது கழிக்காமல் அடக்கி வைத்துக்கொள்வது...
மேற்படி காரணங்களால் பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்வதால், கழிவுப்பொருள்கள் அதிக நேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.

வயிற்றுப் போக்கு:
மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்கு மேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனச் சொல்லலாம். பொதுவாக, ஓரிரு நாளில் இது சரியாகிவிடும். இது அதிகமானால் உடலில் சரியான அளவு நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய நீர்வறட்சி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

வயிற்றுப் போக்கின் அறிகுறிகள்:
வயிற்றுப் போக்குடன், அதன் காரணியைப் பொறுத்து, வயிற்றில் வலி, அசௌகரியம், உப்புசம், குமட்டல் உடனடியாக மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

மருத்துவக் காரணங்கள்:
பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் கோளாறு ஏற்படுவது
தைராய்டு குறைவாகச் சுரப்பது
சர்க்கரை நோய்
பெண்களில் சிலருக்குக் கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.

எவ்வாறு விடுபடுவது:
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலத்தை இளக்கும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும்.
நீர்வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும்.
எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும்.

மருந்துகள்:
இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குடலின் செயல்பாட்டைப் பாதிக்கும்.

ரத்தம் கலந்த அல்லது கறுப்பான மலம்:
மலத்தில் ரத்தம் கலந்திருந்தால், ஜீரண மண்டலத்தில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம். வாயிலிருந்து ஆசனவாய் வரை ரத்தக் கசிவு எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம்.
ரத்தம் கறுப்பு நிறத்திலிருந்தால், ஜீரண மண்டலத்தின் முதல் பாதியிலிருந்தும் சிகப்பு நிறத்தில் இருந்தால், ஜீரண மண்டலத்தின் இரண்டாவது பகுதியிலிருந்தும் வருவதாகக் கொள்ளலாம். வயிற்றுப் புண், ரத்த நாளங்களின் கோளாறுகள் போன்றவை கறுப்பான மலத்தை ஏற்படுத்தும். ஆசன வாயில் வெடிப்பு, ஹெமராய்ட்ஸ், குடலில் ஏற்படும் தொற்று, புற்றுநோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை சிவப்பு நிற ரத்தப் போக்கை ஏற்படுத்தும்.
இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகளும் மலத்தைக் கறுப்பு நிறமாக்கும்.
ஆஸ்பிரின் மற்றும் புரூஃபன் போன்ற வலி மாத்திரைகளைத் தேவைக்கதிகமாக உட்கொண்டால் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ளவும்.

Saturday, September 30, 2017

புற்றுநோய், மாரடைப்பு தவிர்க்கும் ரத்த தானம் என்கிற மகா கொடை


நமது உடலில் திரவ வடிவில், எப்போதும் ஓய்வின்றி உடலுக்குள் நகர்ந்துகொண்டே இருக்கும் ஓர் உறுப்பு... ரத்தம். நீர் உயிர்வாழத் தேவையான அடிப்படை ஆகாரம். அதேபோல் ரத்தம் நாம் உடல் இயங்கத் தேவையான அடிப்படை உறுப்பு. அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் செல்லும் பெரும் பணியை ரத்தம் செய்கிறது. ரத்தம், நம் உடலின் பிக்பாஸ். ரத்தம் இன்றி செயல்படும் உறுப்புகளும் இல்லை; ரத்தம் இல்லாது இருக்கும் உறுப்புகளும் இல்லை.

இன்று தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர் தினம். ரத்தம் ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழத் தேவையான ஒன்று. ரத்தம் கொடையாக பெறுபவர்களின் ஆரோக்கியம், பலன்கள் பற்றி பார்த்திருப்போம். ஆனால், ரத்ததானம் செய்பவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றம், ஆரோக்கியம் குறித்து இங்கே பார்ப்போம்.

இவ்வாறு ரத்தம் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புஉணர்வு  ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ‘தேசிய தன்னார்வ ரத்தகொடையாளர் தினம்’ அக்டோபர் 1-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 'ரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்... எப்போதும்!' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ரத்த தானம் செய்வது குறித்த கேம்ப்கள் மற்றும் விழிப்புஉணர்வு  ஊர்வலங்கள், முகாம்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

ரத்ததானத்துக்கு முன்னும்... பின்னும்... பரிசோதனைகள்!

ரத்ததானம் செய்யும்முன்: ரத்ததானம் செய்ய தானாக முன்வருபவர்களின் ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும்.

ரத்ததானம் செய்தபின்: நாம் கொடையாகக் கொடுத்த ரத்தத்தில் டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பல நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து அவற்றின் பயன்பாடுகள் மாறும்.

ரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

ஒருவர் கொடையாகக் வழங்கும் ரத்தத்தை நான்கு ரத்தக்கூறுகளாகப் பிரித்து, நான்கு உயிர்களைக் காப்பாற்ற  பயன்படுத்தப்படுகிறது.
ரத்தத்தை தானம் செய்வதால், பலன் அடைபவர் ரத்தம் பெறுபவர் மட்டும் அல்ல, ரத்தத்தைத் தானம் செய்தவரும்தான்.

* உடலில் உள்ள பயன்பாட்டு ரத்தம் வெளியேற்றப்படுவதால், உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
* ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், சிவப்பணுக்களின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
* உடலினுள் ரத்த சுழற்சி சீராக இருக்கும். இதய செயல்பாடுகளைச் சீராக்கும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும்.
* உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகளைச் சீராக்கும். குறிப்பாக உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவை சமன் செய்யும்.
* புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
* பல்வேறுவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

ரத்ததானம் செய்பவர்களின் கவனத்துக்கு...

* ரத்ததானம் செய்பவர் 18 முதல் 60 வயது வரை, 45 கிலோவுக்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.
* மதுப்பழக்கம் உள்ளவர்கள் மது அருந்தி 48 மணி நேரம் கழித்தும், புகைப்பழக்கம் உள்ளவர்கள் புகைபிடித்து மூன்று மணி நேரம் கழித்தும் ரத்த தானம் செய்யலாம்.
* ரத்ததானம் செய்பவர் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து அளிக்கும் உணவை உண்ண வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவேண்டும்.
* ரத்தம் கொடுப்பதுக்கு முன்னர் சீரான தூக்கம் அவசியம்.
* ரத்தம் கொடுப்பதுக்கு முன்னர் குறைந்தளவு நீர் அல்லது பழச்சாற்றை அருந்தலாம். ரத்தம் கொடுத்த பின்னர் பழச்சாறு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.
* ரத்தம் கொடுக்கும்போது இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, தளர்வான உடைகளை அணியலாம்.
*  ரத்தம் கொடுத்த பின்னர், அதிக எடை உள்ள பொருள்களைத் தூக்கக்கூடாது. கடுமையான வேலை, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யக் கூடாது. அடுத்த 24 மணிநேரத்துக்கு மது அருந்தக் கூடாது.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது!

* 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள், 45 கிலோவுக்கு குறைவாக எடை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்யக் கூடாது.
* கர்ப்பகாலங்களிலும் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் ரத்தத்தானம் செய்யக் கூடாது.
* தொற்றுநோய் உள்ளவர்கள், மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
* எயிட்ஸ், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வலிப்பு மற்றும் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.

 ச.மோகனப்பிரியா-
நன்றி: விகடன்

Monday, June 5, 2017

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்


ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அம்சமாகதிருமணம் உள்ளது என்று கண்டறிந்த ஆய்வாளர்கள், உடலில் அதிக அளவு கொழுப்பு போன்ற முக்கிய இதய நோய் ஆபத்து காரணிகளால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், திருமணத்தால் அவரின் ஆயுள் அதிகரிப்பு சாத்தியப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதய நலன் தொடர்பான மாநாடொன்றில், பிரிட்டனை சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் வயது வந்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நம் உடல் நலனை நாம் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஒரு அன்பான துணை தூண்டுகோலாக இருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அல்லது நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இந்த ஆய்வில் திருமணமானவர்களின் உடல்நலன் திருமணமாகாமல் தனியாக இருப்பவர்களை விட மேம்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவர் பால் கார்ட்டர் மற்றும் அஷ்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்த அவரின் சகபணியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மாரடைப்பிலிருந்து தப்பித்து உயிர் வாழ்வதற்கும், திருமணத்திற்கும் தொடர்பு இருப்பது இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் இதயநாள நலன் அமைப்பின் மாநாட்டில் ஆய்வாளர்களின் அண்மைய ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.

'நம் உடல் நலனை பேணுவதற்கு அன்பான துணை வேண்டும்'
கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பெரும் இதய நோய் காரணிகளுக்கு எதிராக உடலநலனை தாங்கும் சக்தியாக திருமணம் உதவுவதாக ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வில் சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதய நோய் உள்ளிட்ட அனைத்து காரணங்களினால் ஏற்படும் மரணம் குறித்து இந்த ஆய்வில் அலசப்பட்டது.

அஷ்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட 14 ஆண்டு ஏசிஏஎல்எம் ஆய்வில், உடலில் அதிக கொழுப்பு இருந்த 50, 60 மற்றும் 70 வயதான ஆண் மற்றும் பெண்களில் தனியாக வாழ்பவர்களை விட திருமணமானவர்கள் அதிக காலம் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிலும் திருமணமானவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.

ஆனால், கூடி வாழ்பவர்கள், விவகாரத்தானவர்கள், திருமண பந்தத்திலிருந்து பிரிந்தவர்கள் அல்லது துணையை இழந்தவர்களுக்கு உடல் நலன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இந்த ஆய்வில் கிடைக்கவில்லை.

அதே போல், திருமணமானவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று தங்கள் ஆய்வில் சோதித்து ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.
அனைவரும் திருமணம் செய்து கொள்ள பரிந்துரைக்கிறதா ஆய்வு?
தங்களின் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்து மருத்துவர் கார்ட்டர் கூறுகையில், ''இது குறித்த அடிப்படை காரணங்களை மேலும் அறியவேண்டும். இதய நோயுள்ளவர்கள் மட்டுமல்லாமல் இதய நோய் தொடர்பான ஆபத்து காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் என்ற அம்சம் உடல்நலன் தொடர்பாக பாதுகாப்பாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

''அதற்காக அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை'' என்று மேலும் தெரிவித்த கார்ட்டர், மேலும் குறிப்பிடுகையில், ''திருமணத்தால் உண்டாகும் ஆதாயங்களை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதே போன்று நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூக ஆதரவுதளங்களையும் நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்று மேலும் தெரிவித்தார்.

'நம் உடல் நலனை பேணுவதற்கு அன்பான துணை வேண்டும்'
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனை சேர்ந்த மருத்துவர் மைக் நாப்டன் கூறுகையில், ''இதனால் இறுதியாக நமக்கு கிடைக்கும் செய்தி என்னவென்றால், நமது சமூக தொடர்புகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆயுளுக்கும், உடலுக்கும் ஆபத்து விளைவிக்கும் காரணிகள் நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்'' என்று தெரிவித்தார்.

''நீங்கள் திருமணமானவரோ அல்லது திருமணமாகாதவரோ, இதய நோய் உண்டாக்கும் ஏதாவது ஆபத்துக்கள் உங்கள் உடலில் இருந்தால், அதனை சமாளிக்க உங்களிடம் மிகவும் அன்பாக இருப்பவரை நீங்கள் நாடலாம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Saturday, March 4, 2017

புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழங்கள், மரக்கறிகள் பட்டியல்


தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதி்பபை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இம்மாதிரியான உணவுப் பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும் இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்தை தடுக்கும் குறிப்பிட்ட பழம் மற்றும் காய்கறியையும் அந்த குழு கண்டறிந்துள்ளது.

சிறிய அளவு பழங்களை உட்கொள்வதே உடலுக்கு நலத்தை அளிக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கு என்பது 80 கிராம் பழம் அல்லது காய்கறியை குறிக்கும். அது ஒரு சிறிய வாழைப்பழம், ஒரு பேரிக்காய் அல்லது மூன்று தேக்கரண்டி பசலைக்கீரை அல்லது பட்டாணியை குறிக்கும்.

இரண்டு மில்லியன் மக்களின் உணவு பழக்கங்களை கொண்டு சேகரித்த தகவல்கள், 95 வித ஆய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கும் உணவுகள்

•பச்சைக் காய்கறி
•மஞ்சள் நிற உணவுகள்
•காலிஃப்ளவர் போன்றவை

இதய நோய் மற்றும் வாத நோயை தடுக்கும் உணவுகள்
•ஆப்பிள்கள்
•எலுமிச்சை, தோடம்பழம்
•பழம் மற்றும் காய்கறிகளின் கலவைகள்
•பச்சை இலை காய்கறிகள்
•காலிஃபளவர் காய்கறிகள்

சர்வதேச தொற்றுநோய் குறித்த பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவில், ஆயுட்காலத்திற்கு முன்பாகவே இறக்கும் ஆபத்து குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

எவ்வளவு பழம், காய்கறி சாப்பிட்டால் ஆபத்து எவ்வளவு குறையும்?

•200 கிராம், 13 சதவீதம் வரை இதய நோய் ஆபத்தை குறைக்கிறது; மேலும் 800கிராம், 28 சதவீதம் வரை குறைக்கிறது.
•200 கிராம் 4 சதவீத அளவில் புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது மேலும் 800 கிராம் 13 சதவீத அளவில் குறைக்கிறது.
•200 கிராம், ஆயுட்காலம் முடியுமுன் வரக்கூடிய இறப்பை 15 சதவீத அளவு குறைக்கிறது; மேலும் 800 கிராம் 31 சதவீத அளவில் குறைக்கிறது.
ஆய்வு செய்வதற்கு குறைந்த ஆதாரங்களே உள்ளதால் இதற்கும் அதிகமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் மேலும் அதிகமான ஆரோக்கிய பயன்கள் கிடைக்குமா என்பது ஆய்வாளர்களுக்கு தெரியவில்லை.
•பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது மேலும் ரத்த நாளங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என ஆய்வாளர்களில் ஒருவரான டாக்ஃபின் ஒனா தெரிவிக்கிறார்.
•பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளதால் டிஎன்ஏ சேதங்களை குறைத்து புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.
•உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 400 கிராம் பழம் மற்றும் காய்கறிகளை மக்கள் சரியான அளவில் உட்கொள்வதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.



Wednesday, February 1, 2017

கறிவேப்பிலையில் இவ்வளவு மருத்துவ பயன்களா?


மருத்துவப் பயன்கள் பல கொண்ட கறிவேப்பிலை பயிரிடுவதன் மூலமும் கணிசமான வருவாய் பெறலாம். பெரும்பாலானோர் கறிவேப்பிலையை வாசத்துக்காக பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகின்றனர்.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து.

சத்துக்கள்: அனைத்து வகை சமையல்களிலும் தவறாது இடம் பெற்றிருக்கும் கறிவேப்பிலையில் 0.66 சத நீர்ச் சத்து உள்ளது. 6.1 சதவீத புரதம், 0.1 சதவீத கொழுப்பு, 0.16 சதவீத மாவுப் பொருள், 6.4 சதவீத நார்ப் பொருள் மற்றும் உடலுக்கு மிகவும் தேவைப்படும் தாது உப்புக்கள் 4.2 சதமும் உள்ளது.   இது தவிர குறைந்த அளவில் காணப்படும் சத்துக்களாக 100 கிராம் இலையில் 810 மிலி கிராம் கால்சியம், 600 மிலி கிராம் பாஸ்பரஸ், 3.1 மிலி கிராம் இரும்புச் சத்து, 4.0 மிலி கிராம் வைட்டமின் சி, 2.3 மிலி கிராம் நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

மருத்துவப் பயன்கள்:   பசியைத் தூண்டி, உண்ணும் ஆவலை வளர்க்கும்.  செரிப்பதற்கு துணையாக இருக்கும்.    உடலுக்கு உரமூட்டவல்லது. வெள்ளை அணுக்களின் கிருமியை எதிர்க்கும் ஆற்றலை கறிவேப்பிலையின் சாற்றை அதிகரிக்கச் செய்கிறது.  இலையுடன் பிற மருந்துகளைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுளைச்சல் குணமாகும்.

சாகுபடி முறைகள்: கறிப்பிலை சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் மிகவும் அவசியம்.  வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 5 அடி என்ற இடைவெளியில் நடவு செய்யலாம்.  ஆண்டுக்கு ஒரு செடிக்கு 20 கிலோ சருகு மாட்டுச் சாணம் கலந்த பசளையை பகிர்ந்து இடுதல் வேண்டும்.   ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 கிலோ இலை பறிக்கலாம்.

Tuesday, January 24, 2017

உங்கள் குழந்தை விரைவில் பேச வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்


மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை விரைவில் பேச வைக்க முடியும்.
உங்கள் குழந்தை விரைவில் பேச வேண்டுமா?அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.
இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள்.
குழந்தைகள் பேசுவது அவர்கள் வளரும் மற்றும் வெளிப்படுத்தப்படும் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபாடுகின்றது.
குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது.
மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும்.
உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும்.
இதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும்.
இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும்.
மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும்.
இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.
குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள்.
நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும்.
இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள்.
நல்ல சங்கீதம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கேட்க விடுங்கள். இதை அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் கேட்டதை ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள்.
வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள்.
அது குழந்தையின் பெயராகவும் கூட இருக்கலாம், அந்த பெயரை கொண்டு இரவு நேர கதைகளில் ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம்.
இது அவர்களுக்கு நிச்சயம் புரியும். இதை எல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள்..
- Maalai Malar


Saturday, January 7, 2017

யாழில் மூளைச்சாவடைந்த முதியவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்த குடும்பத்தவர் (Photo)

யாழ்.போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த 65 வயதான முதியவரின் சிறுநீரகங்களைக் கொழும்பிலிருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்றுச் சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் குழுவினர் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அதனை வேறொரு நபருக்குப்  பொருத்துவதற்காகக் கொழும்புக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

மன்னாரைச் சேர்ந்த 65 வயதான தம்பிமுத்து நாகராசா என்ற முதியவர் கடந்த-31 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த முதியவர் கடந்த-03 ஆம் திகதி மூளைச்சாவடைந்தார். 

அவருக்குச் செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய சிறுநீரகங்கள் நல்ல நிலையில் பேணப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த குடும்பத்தவரின் முழுச் சம்மதத்துடன் அவருடையை இரு சிறுநீரகங்களும் தானம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கொழும்புத் தேசிய வைத்தியசாலையிலிருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்றுச் சிகிச்சை நிபுணர் றுவான் திஸ்ஸநாயக்க தலைமையில் வைத்தியர்களான பிரசாட் ஹேரத், ரஜித்தா பெர்னாண்டோ, ஹரிந்ர டீ சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து சிறுநீரக அறுவைச்சிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(05) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். 

வெற்றிகரமாக அகற்றப்பட்ட அவருடைய இரு சிறுநீரகங்களையும் வேறொரு நபருக்குப் பொருத்துவதற்காக விசேட வைத்திய நிபுணர் குழுவினர் கொழும்புக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இறந்த பின்னும் வாழும் பாக்கியம் அவருக்குக் கிடைத்துள்ளமையைப் பெருமையாக உணர்கிறோம் என முதியவரின் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  

Monday, January 2, 2017

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவிற்கு புதிய வைத்திய நிபுணர்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவிற்குப் புதிய வைத்திய நிபுணரொருவர் விசேட வைத்திய நிபுணராகச் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை காலமும் பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவிற்கு வைத்திய நிபுணரொருவர் இன்மையால் நோயாளர்கள் அனுராதபுரம் மாவட்டத்திற்குச் சென்று தமது மாதாந்த வைத்திய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையின் பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் மாதாந்தம் சுற்று அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடமையாற்ற வேண்டியுமிருந்தது. 

இவ்வாறான நிலையிலேயே மேற்படி நியமனம் இடம்பெற்றுள்ளது. 

யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்(Photo)

யாழ். போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூன்றாவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(01)  நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில்  முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டமையால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

யுத்தத்தினாலும், விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின்
அன்றாட தேவைகளுக்குத் தேவையான மருந்துகள் அடங்கிய பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்விற்கான அனுசரணையை அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கம்  வழங்கியுதவியது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியின் நெறிப்படுத்தலில் விசேட வைத்திய நிபுணர்களான  சிவமகாலிங்கம் அரவிந்தன், உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பிறேம கிருஷ்ணா மற்றும் சத்திர சிகிச்சைநிபுணர் டாக்டர் ரி.சர்மா ஆகியோரது வழிகாட்டலில் ஏனைய துறைசார் வைத்தியர்கள் இம் மருத்துவ முகாமிற்கு உதவினர்.

இதன்போது குருதி மற்றும் சலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விசேட சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

அத்துடன் விசேட துறைசார் வைத்திய நிபுணர்களது ஆலோசனைக்கமைவாக மேலதிக பரிசோதனைகளுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.