//]]>

Sunday, March 11, 2018

அல்லிப்பூ பறிக்க படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் அல்லிப்பூ பறிப்பதற்காக படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படகு கவிழ்ந்ததில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்குப் பூப் பறிப்பதற்காக குடும்பத் தலைவருடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் படகில் சென்றுள்ளனர். இதன் போது படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நிலாவெளிப் பிரதேச வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்:வெளியானது புதிய தகவல்!

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இனப்பதற்றம் தீவிரமடைந்ததையடுத்துக் கடந்தவாரம் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியத்துடன் இந்தத்  தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்குமெனத் தெரிவித்திருந்தது. எனினும், இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என என்னால் தற்போது கூற முடியாது. அது நிலைமைகளைப் பொறுத்த விடயம்.

இதேவேளை,அவசர காலச்சட்டத்தின் கீழேயே சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை தொடரும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, March 10, 2018

சமூக வலைத்தள ஊடகங்கள் மீதான தற்காலிக கட்டுப்பாடு தொடரும்!

இலங்கையில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வன்முறைகள் தூண்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து முகநூல், கீச்சகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது  அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்திருந்தது. இந்தத் தடை இன்று(10) நீக்கப்படுமென நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்தப்படவுள்ள பாதுகாப்பு நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தின் பின்னரே தடையை நீக்குவது தொடர்பான முடிவெடுக்கப்படுமெனவும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தென்மாகாண சபை உறுப்பினரும், மனைவியும் வீதியில் செய்த மோசமான வேலை!(Video)

கொழும்பு கொஸ்வத்த பத்தரமுல்லையில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கியமை தொடர்பில் தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.கசுன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப் ரக வாகனத்தில் பயணித்த தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசும் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் குறித்த பேருந்து சாரதிக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதையடுத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு குறித்த பெண் பேருந்துச் சாரதியைத் தாக்குவதையும், தென்மாகாண சபை உறுப்பினர் தனது கைகளால் கடுமையாகத் தாக்குவதையும் வேறொருவர் தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாகத் தலங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கில் இன்று மின்தடைப்படவுள்ள பகுதிகளின் விபரம்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம்,  இன்று (10) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் வரணி கரம்பைக் குறிச்சிப் பகுதியிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்குத் தொடுவாய், பூதன் வயல், முறிப்பு, தண்ணி முறிப்பு, குமுழமுனை, செம்மலை,கருநாட்டங்கேணி, கொக்கிளாய், குமுழமுனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு கிராமம், கற்பகபுரம் கிராமம், அரசமுறிப்புக் கிராமம், பஸார் வீதி, மில் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ராஜ் மீன்பிடி வலைத் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-) 




பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை:பலரும் ஆதரவு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரொருவரும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஆதரவாக கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினரொருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் முக்கிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்து வந்த போதும் அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, மோதல்களைத் தடுக்கத் தவறியதாகவும் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.



சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து இலங்கை முழுவதும்  முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று சனிக்கிழமை(10) முதல் மீண்டும் செயற்பட ஆரம்பிக்குமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்றைய தினம் நீக்கப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மோசமான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான் சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள காரணத்தால் அந்தத் அந்த தடை நீக்கப்படும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Friday, March 9, 2018

திம்புள்ளயில் உயிருடன் பிடிபட்ட சிறுத்தைக்குட்டிகள்!(Photos)


திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை கிறேக்லி தோட்டத்தில் இரண்டு சிறுத்தைக்குட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(09) மாலை-05 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்துக் குறித்த சிறுவர்கள் இது தொடர்பாக அப்பகுதிப் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடி வருவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)

ஆறுமணிநேர விசாரணையின் பின் முன்னாள் அரசியல்கைதி விடுதலை!

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று(09) நண்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி முருகையா கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார். எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அவருக்குப்  பணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது விமான நிலையப் பொலிஸாரால் இன்று நண்பகல்- 12 மணியளவில் கைது செய்யப்பட்ட கோமகன் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தவறாமல் விசாரணைக்கு சமூகமளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் மாலை-06.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை,அவருக்கான பயணத் தடையை நீதிமன்று தளர்த்தியிருந்த போதிலும் அது தொடர்பாக குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்திற்கு எந்த அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தே பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தொடர்ந்தும் தடை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த  விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும்(09)  அமுலிலிருக்குமென தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

இதன்பிரகாரம், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், இன்ஸ்டரகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் இதில் உள்ளடங்குவதுடன் இது குறித்தான தொடர்ச்சியான  கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

எவ்வாறாயினும், மாற்று வழிகளைப் பயன்படுத்தி பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாதக் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகின்றவர்கள், பரிமாறுகின்றவர்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.