//]]>

Saturday, March 10, 2018

வடக்கின் போரில் வென்றது யாழ். மத்தியக்கல்லூரி அணி (Photos)


வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.

இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு சென்ற இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல் போராடித் தோல்வியைத் தழுவியது.

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.

 எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் களமிறங்கினர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.

பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.

109 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.

போட்டி நிறைவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

படங்கள்  – ஐ.சிவசாந்தன்  ​ ​























பேஸ்புக்கால் ஏற்படும் பிரச்சினைகளே அதிகம்!:யாழில் பெண் பொலிஸ் அதிகாரி காட்டம்(Photo)

தற்போதைய காலகட்டத்தில் அதிகளவு பிரச்சினைகள் பேஸ்புக்காலேயே ஏற்படுகின்றன என யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி- சிந்துபாமினி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம்  தலைமையில் இடம்பெற்ற போது  "பெண்களுக்கான பாதுகாப்பும் சட்ட நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்தப்  பேஸ்புக் என்பது ஒரு அலைவரிசை. இலங்கையில் பேஸ்புக் அலைவரிசை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைத் தொடர்ச்சியாக நிறுத்துவதன் மூலம் நாங்கள் வன்முறைகளை அரைவாசிக்கும் மேலாக குறைத்துக் கொள்ள முடியும்.

ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளாக பதியப்படுகின்றன.

 தொலைபேசி அழைப்பின் மூலம் ஒருவரை கடுமையாக ஏசினாலோ அல்லது ஆபாசப்படங்களை குறுந்தகவல்கள் மூலம் அனுப்பினாலோ அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பது இலகுவானதாகவுள்ளது.

குறிப்பாக கைத்தொலைபேசிகளின் சிம்மிற்குரிய நிறுவனங்கள் பொறுப்புக் கூற வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதன் மூலம் தொடர்பு கொள்ளும் இலக்கத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆனால், பேஸ்புக் இயக்குபவர்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமமானதாகவிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-)



Tuesday, March 6, 2018

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைந்து பெறும் நோக்குடன் எதிர்வரும்-14 ஆம் திகதி கொழும்பிலுள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு முன்பாக விசேட கலந்துரையாடல் நடாத்தப்படவுள்ளது.

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அனைத்துப் பட்டதாரிகளினதும் கையெழுத்துக்கள் உள்ளடங்கிய மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்பவர்கள் தங்கள் மாவட்ட/ ஆண்டு பிரதிநிதிகள் ஊடாக உங்கள் வரவை உறுதிபடுத்துவதுடன்  இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வரவுத் தகவலை எதிர்வரும்- 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குதல் வேண்டும் எனவும்  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(தமிழின் தோழன்-)

Friday, March 2, 2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்-11 ஆம் திகதி


யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை( 11-03-2018) முற்பகல்-10 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.  

புதிய நிர்வாகத் தெரிவு,யாப்புச் சீர்திருத்த அறிக்கை முன்மொழிதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது இடம்பெறுமெனப் பொதுச் செயலாளர் ச.லலீசன் அறிவித்துள்ளார். 

மேலும், ஆயுள் அங்கத்தவர்களுக்கும் நடப்பு ஆண்டில் உறுப்புரிமைக்கு உரித்துடைய வருட அங்கத்தவர்களுக்குமான  கூட்ட அழைப்புக் கடிதம் அஞ்சலிடப்பட்டு விட்டதாகவும், கடிதம் கிடைக்காதோரைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.  

Saturday, February 24, 2018

திருநெல்வேலியில் சிறப்பாக இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு(Photos)

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(24) பிற்பகல்-01 மணி முதல் பாடசாலை மைதானத்தில் அதிபர் யோகதயாளன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த விளையாட்டு நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் யாழ்.மாவட்ட முகாமையாளர் செ.கோகுலதாஸ் சிறப்புவிருந்தினராகவும், திருநெல்வேலி இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி. யாமளை தனேஷ் கெளரவவிருந்தினராகவும் கலந்துகொண்டார்.

இதன் போது மாணவர்களின் மெய்வன்மை நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால்  பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


Friday, February 23, 2018

மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய நூல் நாளை வெளியீடு

ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய "பூகோளவாதம் புதிய தேசியவாதம்" நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை சனிக்கிழமை(24) பிற்பகல்-03 மணி முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல், சமூக ஆய்வாளர் ம. நிலாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த நூலின் கெளரவப் பிரதியை குழந்தை மா. சண்முகலிங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் க. அருந்தாகரன் நூல் வெளியீட்டுரையையும், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி- கே. ரி. கணேசலிங்கம், அரசறிவியல், சமூக விஞ்ஞானத் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி- ரி. கிருஷ்ணமோகன், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் நூலாய்வு உரைகளையும் ஆற்றவுள்ளனர்.

Sunday, February 18, 2018

எழுத்தாளர் தேவகாந்தனோடு கிளிநொச்சியில் நாளை சந்திப்பு:நீங்களும் பங்கேற்கலாம்!(Photos)

கனடாவிலிருந்து வருகை தந்திருக்கும் எழுத்தாளர் தேவகாந்தனோடு சந்திப்பும் அவர் அண்மையில் எழுதிய “கலிங்கு” நாவல் பற்றிய அறிமுக நிகழ்வும் 754- கனகராசா வீதி, கிளிநொச்சி திருநகர் வடக்கு எனும் முகவரியில் நாளை திங்கட்கிழமை(19) இடம்பெறவுள்ளது. 

எழுத்தாளரும், கிளிநொச்சி சாந்தபுரம் வித்தியாலய அதிபருமான பெரு கணேசன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கோணேஸ், விமர்சகர் சி.ரமேஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் வாசகர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு எழுத்தாளர் கருணாகரனின்  077087168 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
(எஸ்.ரவி-)

யாழில் இன்று ஊடகச் செயலமர்வு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இணையவும் வாய்ப்பு

"நவீன ஊடக கலாசாரத்தை நோக்கிய பயணம்" எனும் தலைப்பிலான கலந்துரையாடலும், ஊடகத் துறைசார் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(18)  இல- 125, பிரதான வீதி, தனி நாயகம் அடிகளார் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ள குடும்ப மருத்துவ நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

காலை-09 மணியிலிருந்து நண்பகல்-12 மணி வரை கலந்துரையாடலும், நண்பகல்- 12 மணி முதல் பிற்பகல் -03 மணி வரை ஊடகத் துறைசார் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இடம்பெறும்.

தமிழ் ஊடகத்துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கலந்துரையாடல் அடிப்படையிலான ஊடக பயணமாக இந்த ஊடகச் செயலமர்வு அமையவுள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனம் என்பன இணைந்து இந்த  ஊடகச் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் தம்மைப் பதிவு செய்ய விரும்பும் வடமாகாண ஊடகவியலாளர்கள் இந்தச் செயலமர்வின் போது 500 ரூபா செலுத்தித் தமக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற முடியுமென சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் யாழ். தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-)

Saturday, February 17, 2018

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை

யாழ். மாவட்டத் தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) முற்பகல்- 10 மணி முதல் யாழ். இணுவில் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சங்கத் தலைவர் செ. சண்முகலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்று 'கல்' நூல் வெளியீட்டு விழா

சித்திரபாட ஆசிரியர் பா. இராமணாகரனின் 'கல்' சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை(17) பிற்பகல்-03 மணி முதல் யாழ். கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்நாடு தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், கவிஞருமான கோ. வாமனன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியை திருமதி- மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளனர்.