//]]>

Saturday, March 10, 2018

தென்மாகாண சபை உறுப்பினரும், மனைவியும் வீதியில் செய்த மோசமான வேலை!(Video)

கொழும்பு கொஸ்வத்த பத்தரமுல்லையில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கியமை தொடர்பில் தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.கசுன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப் ரக வாகனத்தில் பயணித்த தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசும் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் குறித்த பேருந்து சாரதிக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதையடுத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு குறித்த பெண் பேருந்துச் சாரதியைத் தாக்குவதையும், தென்மாகாண சபை உறுப்பினர் தனது கைகளால் கடுமையாகத் தாக்குவதையும் வேறொருவர் தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாகத் தலங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கரவெட்டியில் குளத்திலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு(Photo)

யாழ். கரவெட்டியிலுள்ள குளமொன்றிலிருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை(09) நெல்லியடிப்பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியை அண்மித்துள்ள குளம் ஒன்றிலிருந்தே சடலமும், மோட்டார்ச் சைக்கிளும் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

குளத்தில் சடலத்தைப் பார்த்த சிலர் நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர். குளத்திலிருந்து மீட்கப்பட்டவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைகளிற்காக வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போது அவர் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் (வயது – 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

(தமிழின் தோழன்-)




சிறுபான்மை இனங்களுக்கெதிரான அநீதிகளுக்குச் சரியான நீதி கிடைப்பதில் காலதாமதம்!:கஜதீபன் காட்டம்(Video)

இந்த நாட்டில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகக் காணப்படுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக அட்டூழியங்கள், அநியாயங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது தான் வரலாறாகவுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான அநீதிகளுக்குச் சரியான நீதி கிடைப்பதிலும் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த- 21.10.2016 அன்று யாழ். கொக்குவில் குளம்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சனின் 26 ஆவது பிறந்தநாள் நிகழ்வு வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ். சுன்னாகத்திலுள்ள நினைவுப் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத இன ரீதியான வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான காரணங்களால் இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களாகவுள்ள நாமும் ஒரு குடிமக்களாக மதிக்கப்படுகின்றோமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், சரியான நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகளை நாம் இன்னமும் இனம் காணாதது துரதிஷ்டவசமானது என்றார்.

(எஸ்.ரவி-)

வடக்கில் இன்று மின்தடைப்படவுள்ள பகுதிகளின் விபரம்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம்,  இன்று (10) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் வரணி கரம்பைக் குறிச்சிப் பகுதியிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்குத் தொடுவாய், பூதன் வயல், முறிப்பு, தண்ணி முறிப்பு, குமுழமுனை, செம்மலை,கருநாட்டங்கேணி, கொக்கிளாய், குமுழமுனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு கிராமம், கற்பகபுரம் கிராமம், அரசமுறிப்புக் கிராமம், பஸார் வீதி, மில் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ராஜ் மீன்பிடி வலைத் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-) 




பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை:பலரும் ஆதரவு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரொருவரும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஆதரவாக கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினரொருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் முக்கிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்து வந்த போதும் அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, மோதல்களைத் தடுக்கத் தவறியதாகவும் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.



சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து இலங்கை முழுவதும்  முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று சனிக்கிழமை(10) முதல் மீண்டும் செயற்பட ஆரம்பிக்குமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூல், கீச்சகம், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்றைய தினம் நீக்கப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மோசமான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான் சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள காரணத்தால் அந்தத் அந்த தடை நீக்கப்படும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கால் ஏற்படும் பிரச்சினைகளே அதிகம்!:யாழில் பெண் பொலிஸ் அதிகாரி காட்டம்(Photo)

தற்போதைய காலகட்டத்தில் அதிகளவு பிரச்சினைகள் பேஸ்புக்காலேயே ஏற்படுகின்றன என யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி- சிந்துபாமினி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம்  தலைமையில் இடம்பெற்ற போது  "பெண்களுக்கான பாதுகாப்பும் சட்ட நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்தப்  பேஸ்புக் என்பது ஒரு அலைவரிசை. இலங்கையில் பேஸ்புக் அலைவரிசை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைத் தொடர்ச்சியாக நிறுத்துவதன் மூலம் நாங்கள் வன்முறைகளை அரைவாசிக்கும் மேலாக குறைத்துக் கொள்ள முடியும்.

ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளாக பதியப்படுகின்றன.

 தொலைபேசி அழைப்பின் மூலம் ஒருவரை கடுமையாக ஏசினாலோ அல்லது ஆபாசப்படங்களை குறுந்தகவல்கள் மூலம் அனுப்பினாலோ அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பது இலகுவானதாகவுள்ளது.

குறிப்பாக கைத்தொலைபேசிகளின் சிம்மிற்குரிய நிறுவனங்கள் பொறுப்புக் கூற வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதன் மூலம் தொடர்பு கொள்ளும் இலக்கத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆனால், பேஸ்புக் இயக்குபவர்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமமானதாகவிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவி-)



Friday, March 9, 2018

முன்னேற்றகரமான பாதையில் மகளிர் மேம்பாடு:காயத்திரி குமரன் பெருமிதம்(Video)


மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் மற்றும் மேம்பாடு தொடர்பான வேலைப்பாடுகள், செயற்பாடுகள் என்பனவற்றிற்கும் ஒரு முடிவே இல்லையா? .மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகளையும், செயற்திட்டங்களையும் செய்து கொண்டிருக்கின்றோமே!  எனச் சிலர் சொல்லுவார்கள். நிச்சயமாக இதுவொரு முடிவுறாப் பயணம் தான். ஆனால், அடைவுகளும் நிச்சயமாகப் பூச்சியமில்லை. ஒவ்வொரு செயற்பாட்டின் அடைவுகளும் வெற்றிகரமானவையே. முன்னேற்றகரமான பாதையில் மகளிர் மேம்பாடு பயணித்துக் கொண்டிருக்கின்றது என ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற போது  "மகளிர் மேம்பாடு! சவால்களும் சாதனைகளும்" எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த வருட சர்வதேச மகளிர் தினத்தில்  ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் பால்நிலை சமத்துவத்தை எட்டுவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்குமான எமது செயற்பாடுகள் முடிவுறாதவை என்று குறிப்பிடுகிறார்.

இவை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத்தின் மிகப்பெரிய சவாலாகவும் விளங்குகின்றது. இன்றைய உலகின் யதார்த்தமாகவும் இதுவே காணப்படுகின்றது.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் எங்கள் பெண்கள் வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வந்து புதுமைகள் படைப்பதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும், அங்கீகாரங்களும் இன்றைய உலகில் மிகக் காத்திரமாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய கல்விச் சூழலில் பெண்களின் கால்த்தடம் மிகத் திடமாகவேயிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி அனைத்துச் சிறுவர்களுக்குமான தரமான கல்வியும், சமமான தொழில் வாய்ப்புக்களும் கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. அதேபோன்று அனைத்துத் தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக இருந்து கொண்டிருக்கின்றது.

அரச, தனியார் சேவை வழங்களில் எவ்வித பாகுபாடோ, பின்னடைவோ இன்றி மகளிர் மேம்பாட்டு நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பெண்கள் முன்னேற்றப் பயணத்தில் எதிர்நோக்குகின்ற தடங்கல்கள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் நாங்கள் சிந்திப்போமானால் என்னுடைய பார்வையில் காணப்படுவது அது எங்கள் ஒவ்வொருவருடைய மனங்கள் தான். இதனை நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் எங்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ள பால்நிலை சம்பந்தமான விம்பங்களே. ஆண்களும், பெண்களும் அவ்வாறானதொரு விம்பத்தை மனங்களில் வைத்திருப்பது தான் அநேகமான பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.

சில நேரங்களில் இது என்னால் முடியுமா? என்னால் இயலாது. நான் பலவீனமானவன் தான். எனக்கு ஆற்றல்கள் குறைவு தானோ!, நான் ஏனையவர்களில் தங்கி வாழவேண்டும் தான் போலும் போன்ற பலவீனமான மன ஓட்டங்கள் ஒவ்வொரு ஆண், பெண் மனங்களிலும் வாழ்க்கையின் ஏதோவொரு காலகட்டத்தில் எதிர்நோக்கியவர்களாகவே இருப்போம். ஆனால், இவ்வாறான பலவீனமான மன ஓட்டங்களை கண நேரத்தில் கடந்து வருபவர்கள் வெற்றியாளர்களாகவும், அந்தப் பலவீனமான மன ஓட்டங்களுடன் தங்கியிருப்பவர்கள் தடுமாற்றத்தைச் சந்திப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆனால், துரதிஷ்ட வசமாக இந்தத் தடுமாறுவோர் கூட்டத்தில் பெண்களின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது.

எதிர்மறையான எண்ணச் சூழல்கள் சுற்றியுள்ளோராலும் உருவாக்கப்படுகின்றன. ஒருவரைப் பார்த்து ஐயோ..உங்களுக்கு ஏதோ வருத்தம் போலிருக்கிறது...உடல் மெலிவாகவிருக்கிறது, களைப்பாகவிருக்கிறது என நான்கைந்து பேர் தொடர்ச்சியாக கூறினால் சுகதேகியாகவுள்ள ஒருவரும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்.

இந்த வருடத்துக்கான ஐக்கியநாடுகள் சபையின் தொனிப் பொருளாக "இது தான் நேரம்" அமைந்துள்ளது. கிராமம், நகரம் ஆகியவற்றிலுள்ள அனைத்துச் செயற்பாட்டாளர்களும் இணைந்து பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் அங்கு ஆற்றிய உரையின் முழு வடிவத்தையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(செல்வநாயகம் ரவிசாந்-) 












இனவாத வன்செயல்களுக்கு எதிராக யாழில் செவ்வாய் கண்டன ஆர்ப்பாட்டம்!

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(13)  முற்பகல் யாழ்ப்பாணத்தில்  கண்டன ஆர்ப்பட்டமொன்றைச்  சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்குச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட எம்மை மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன.எனவே,  இத் திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று(09) தெரிவித்துள்ளது.

(தமிழின் தோழன்-)

திம்புள்ளயில் உயிருடன் பிடிபட்ட சிறுத்தைக்குட்டிகள்!(Photos)


திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை கிறேக்லி தோட்டத்தில் இரண்டு சிறுத்தைக்குட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(09) மாலை-05 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்துக் குறித்த சிறுவர்கள் இது தொடர்பாக அப்பகுதிப் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடி வருவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)