//]]>

Saturday, December 24, 2016

வவுனியாவில் தமிழ் இளைஞர் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களுக்குப் பிணை

வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் நேற்று வெள்ளிக்கிழமை(23) வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரப் பேரூந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற இளைஞன் உணவகம் நடத்தி வருகின்றார்.கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா கொழும்பு பகுதியில் பயணிக்கும் தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் குறித்த இளைஞரின் கடைக்குச் சென்று தேநீர் கேட்டுள்ளனர். இதன்போது குறித்த இளைஞரால் வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லாத காரணத்தினால், தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் ஆகியோர் குறித்த இளைஞருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் புதன்கிழமை இரவு  10.30 மணியளவில குறித்த இளைஞன் உணவகத்தில் தனியாக நிற்பதை அவதானித்த குறித்த தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் முதல்நாள் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை மறந்து சமாதானமாகுவதற்கு அழைத்துள்ளனர்.

சமரசம் செய்வதற்காக அழைப்பதாக நினைத்துச் சென்ற குறித்த இளைஞன் மீது, இரும்புக் கம்பியால் அங்கிருந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சற்றும் எதிர்பாராத தாக்குதல் சம்பவத்தினால் மயக்கமடைந்த குறித்த இளைஞனை தமது பேரூந்தில் ஏற்றி மதவாச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த விடயம் உணவகத்திலிருந்த ஏனையவர்களுக்குத் தெரியவரவே  சந்தேகத்திற்கிடமான தனியார் பேரூந்தை மோட்டார்ச் சைக்கிளில் பின்தொடர்ந்தனர்.

தம்மைப் பின்தொடர்வதை அறிந்து உஷாரடைந்த தனியார் பேரூந்துச் சாரதியும், நடத்துனரும் குறித்த இளைஞனை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வீசிவிட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இளைஞன் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியாப் பொலிஸார்  தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர், கடையின் காசாளர், சமையல்கார்கள் உள்ளிட்ட ஏழு பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனையடுத்து ஆறுபேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment