//]]>

Saturday, December 30, 2017

தித்திக்க திருவாசகம் முற்றோதிய யாழ். அடியவர்கள்(Videos)


யாழ்.  ஊரெழு கிழக்கு கிளானைப்பதி பர்வதவர்த்தனி மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்தத் திருவாசக முற்றோதல் நிகழ்வு இன்று சனிக்கிழமை(30) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அதிகாலை-03  மணியளவில் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட பூசைகளும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை-07 மணியளவில் மூத்த ஆன்மீகவாதி சிவதொண்டன் நா. முருகையா தலைமையில் இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபருமான க. ஆனந்தராசா(கவிமணி அன்னைதாஸன்) உள்ளிட்ட அடியவர்கள் கலந்து கொண்டு சைவசமய குரவர்களில் ஒருவராகத் திகழ்ந்த மணிவாசக சுவாமிகள் இயற்றிய திருவாசகம் முற்றோதினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் பண்ணுடன் திருவாசகம் முற்றோதிய காட்சி பரவசத்தில் ஆழ்த்தியது. உருகாத நெஞ்சங்களையும் உருக வைத்தது .
ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ வித்தியாதரக் குருக்களின் ஆசியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு பிற்பகல்- 12.45 மணியளவில் நிறைவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வில் கலந்து கொண்ட அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது. 
(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment