//]]>

முக்கிய செய்தி

பிரதான செய்திகள்

Sunday, March 11, 2018

அல்லிப்பூ பறிக்க படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் அல்லிப்பூ பறிப்பதற்காக படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படகு கவிழ்ந்ததில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்குப் பூப் பறிப்பதற்காக குடும்பத் தலைவருடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் படகில் சென்றுள்ளனர். இதன் போது படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நிலாவெளிப் பிரதேச வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவனில் இன்று முன்பள்ளி விளையாட்டுப் போட்டி(Photo)

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை(11) பிற்பகல்-02 மணி முதல் முன்பள்ளி முன்றலில் நடைபெறவுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேச சனசமூக நிலையத் தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முல்லைத்தீவு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார் கயந்தன் முதன்மை விருந்தினராகவும்,புன்னாலைக்கட்டுவன் தெற்கு கிராம அலுவலர் பே. மயூரதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(எஸ்.ரவி-)

இலங்கையில் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்:வெளியானது புதிய தகவல்!

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இனப்பதற்றம் தீவிரமடைந்ததையடுத்துக் கடந்தவாரம் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியத்துடன் இந்தத்  தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்குமெனத் தெரிவித்திருந்தது. எனினும், இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என என்னால் தற்போது கூற முடியாது. அது நிலைமைகளைப் பொறுத்த விடயம்.

இதேவேளை,அவசர காலச்சட்டத்தின் கீழேயே சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை தொடரும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டோம்!:மனம் திறந்த ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி கோலாலம்பூரில் நேற்றுச் சனிக்கிழமை(10) அங்கு இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மைப் பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எப்படியோ அதனை முற்றிலும் மன்னித்து விட்டோம்.

பிரபாகரன் இறந்து கிடப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குள் இரு உணர்வுகள் எழுந்தன. ஏன் இந்த மனிதனை அவர்கள் இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பது முதலாவது, இரண்டாவதாக அது அவருக்கும், அவரது பிள்ளைகளுக்கும் உண்மையில் கெட்டது என உணர்ந்தேன்.

இந்த அனுபவத்திலிருந்து வந்த நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Saturday, March 10, 2018

உரும்பிராயில் சைக்கிள் மோதி விபத்து:நடந்தது இதுதான்!(Video)

யாழ்.உரும்பிராய்ச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் இன்று சனிக்கிழமை(10) பிற்பகல்- இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகியதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரும்பிராயிலிருந்து கோண்டாவில் சந்தி நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை அதே பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரொருவர் பின்புறமாக மோதியதாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வேகமாக வந்த குறித்த குடும்பஸ்தர் அப்பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் மதுபானம் வாங்குவதற்காக சடுதியாகத் துவிச்சக்கர வண்டியைத் திரும்பியுள்ளார்.

இதன் போது பலாலி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளின் பின்புறம் கடுமையாக மோதியதில் இருவரும் சடுதியாக வீதியில் விழுந்ததுடன் துவிச்சக்கர வண்டியில் சென்ற சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அவரது மூக்கால் இரத்தமும் வழிந்துள்ளது. அத்துடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞனும் சிறுகாயங்களுக்குள்ளானார். சம்பவத்தில் இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் கடும் சேதமடைந்தது.

42 வயதான குறித்த குடும்பஸ்தர் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் உரும்பிராய்ப் பகுதியிலுள்ள உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்று அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வருவதாகப் பொய் கூறி உறவினரொருவரின் துவிச்சக்கர வண்டியைப் பெற்று வந்த போதே குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.   

துவிச்சக்கர வண்டி செலுத்திய குடும்பஸ்தரின் கவனயீனமே குறித்த விபத்துக்கான காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-) 


சமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி



உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்' என்று கூறுவார்கள்..சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிடப் பொய்யான செய்திகளே மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில், மக்கள் உண்மையான செய்தியை விடப் பொய்யான செய்தியை அதிகமாக நம்புவதாகவும், இதனால் அவர்கள் பொய்யான செய்தியைச் சமூக ஊடகங்களில் மிக விரைவாகப் பகிர்வதும் தெரியவந்துள்ளது. ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையான செய்திகள் 1000 பேரைச் சென்றடைகின்றன. அதே நேரத்தில் பொய்யான செய்திகள் 1,00,000பேரை சென்றடைகின்றன. உண்மையை விடப் பொய்யான செய்திகள் 70% அதிகமாகப் பகிரப்படுகின்றன.

மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாகச் செய்திகளை விரும்புவதே பொய்யான செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அவர்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை அவர்கள் பகிர்ந்து விடுகின்றனர். அரசியல் செய்திகள் பொய்யாகப் பகிரப்படுகிறது. இது போன்ற பொய்யான செய்திகளில் அரசியல் செய்திகள் அதிகளவில் உள்ளது. அது தவிர, நகர்ப்புற கதைகள், வணிகம், பயங்கரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்துப் பொய்யான செய்திகள் பகிரப்படுகிறது.

ஆராய்ச்சியின் சக ஆய்வாளரான பேராசிரியர் சினான் ஆல், “தவறான செய்தி மிகவும் சுவாரஸ்யமான கதை போன்றது. எனவே அது மக்களால் அதிகம் பகிரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கோமகன் கைது:கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி(Video)

முன்னாள் தமிழ்அரசியல் கைதி கோமகனின் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமானதொரு செயற்பாடு. சிங்களவர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்க வேறொரு  நீதி என்பதனை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு. இந்தச் செயற்பாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று சனிக்கிழமை (10) எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அரசியல் கைதியான கோமகன் இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுக் கடுமையான துன்புறுத்தல்களின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கான தடைகளும் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும், நேற்று வெளிநாடு செல்வதற்காகச் சென்ற போது கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு பலமணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராகவே தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த-2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான போதும் தற்போது வரை குறித்த சட்டம் நீக்கப்படவில்லை.

இதற்கான அழுத்தத்தைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உரிய வகையில் வழங்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கையைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகிறது எனவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

(தமிழின் தோழன்-)

வடக்கின் போரில் வென்றது யாழ். மத்தியக்கல்லூரி அணி (Photos)


வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.

இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு சென்ற இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல் போராடித் தோல்வியைத் தழுவியது.

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும்.

 எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் களமிறங்கினர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.

பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.

109 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.

போட்டி நிறைவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

படங்கள்  – ஐ.சிவசாந்தன்  ​ ​























சமூக வலைத்தள ஊடகங்கள் மீதான தற்காலிக கட்டுப்பாடு தொடரும்!

இலங்கையில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வன்முறைகள் தூண்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து முகநூல், கீச்சகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது  அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்திருந்தது. இந்தத் தடை இன்று(10) நீக்கப்படுமென நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்தப்படவுள்ள பாதுகாப்பு நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தின் பின்னரே தடையை நீக்குவது தொடர்பான முடிவெடுக்கப்படுமெனவும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டு மக்களுக்கு ஓர் அறிவித்தல்:பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பலபகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08 .30 மணி முதல் மாலை-05.30 மணி வரை குடாநாட்டின் பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, மானிப்பாய் வீதி, கைதடி வீதி, இருபாலைச் சந்தி, இருபாலை பழைய வீதி, வட்டக்குளம், கட்டைப்பிராய், கல்வியங்காடு, இலங்கைநாயகி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டு, இராமலிங்கம் வீதி, முடமாவடி, கிளிகடைச் சந்தி, GPS வீதி, கோப்பாய்ப் பொலிஸ் நிலையம், திருநெல்வேலி பாற்பண்ணை, திருநெல்வேலிச் சந்தை, கலாசாலை வீதி, பலாலி வீதியின் ஒருபகுதி, துணைவி, பண்டத்தரிப்பு, மாதகல், இளவாலை, சங்கானை, சாந்தை, சில்லாலை, சீரணி, சண்டிலிப்பாய், வட்டுக் கோட்டையின் ஒரு பகுதி, தொட்டியாலடி, பிரான்பற்று, மாரீசன்கூடல், சேந்தான்குளம், பெரியவிளான், மெய்கண்டான், சுழிபுரம்,தொல்புரம், யம்புகோளப் பட்டிணம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(எஸ்.ரவி-)