யாழ்.காரைநகர்ப் பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் '2016 ஆம் ஆண்டுக்கான கலாசாரப் பெருவிழா' நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(27) பிற்பகல்- 2 மணி முதல் காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக் கலாசாரப் பெருவிழாவின் சிறப்பு நிகழ்வுகளாக 'கலங்கரை 2016' இதழ் வெளியீடும், காரைநகரின் மூத்த கலைஞர்களுக்கான 'கலைஞானச்சுடர்' விருது வழங்கிக் கௌரவித்தலும் இடம்பெறவுள்ளது.
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இந்த விழாவானது காரைநகர் பிரதேச செயலாளரும், கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை ஆகியவற்றின் தலைவருமான திருமதி- தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெறவுள்ளது.
விழாவில் வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி- வனஜா செல்வரட்ணம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சு. சுந்தரசிவம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விழாவில் வரவேற்புரையினை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு. அகிலன் ஆற்றவுள்ளார். கலை நிகழ்வுகளை காரைநகர் கலாசார மத்திய நிலையம், கிழவன்காடு கலாமன்றம், சக்தி கல்வி மேம்பாட்டு நிலையம் ஆகியவற்றின் மாணவர்கள் வழங்கவுள்ளனர். 'கலங்கரை – 2016' மலருக்கான அறிமுக உரையினை கலாசார உத்தியோகத்தர் ச. தனுஜன் நிகழ்த்தவுள்ளதுடன், நன்றியுரையினை இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி து. ஞானேஸ்வரியும் ஆற்றவுள்ளனர்.
நிறைவாகப் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகள், பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் இடம்பெறும்.
அனைவரையும்இந்தக் கலாசாரப்பெருவிழாவில் கலந்துகொள்ளுமாறு காரைநகர் பிரதேச செயலகம் கேட்டுள்ளது.
0 comments:
Post a Comment