தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தளையிலுள்ள அவரது இல்லத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (29) முற்பகல்- 10.45 மணியளவில் நேரடியாகச் சென்று வாழ்த்தினார். அத்துடன் வடமாகாண ஆளுநர் பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலையினையும் குறித்த மாணவனுக்கு வழங்கிக் கௌரவித்தார்.
இதன் போது வடமாகாண ஆளுநருடன் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாள் எக்ஸ்.செல்வநாயகம், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,
தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்கும், அவரது குடும்பத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.யாழ். குடாநாடு மீண்டும் கல்வியில் உயர்ந்து இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏனைய மாணவர்களும் இவரைப் போன்று கல்வியில் அதிகளவில் அக்கறை செலுத்துமாறும் வேண்டிக்கொண்டார்.
மேலும், முன்னொரு காலம் கல்வியில் சிறந்து விளங்கிய யாழ். குடாநாடு சிறிது காலம் கல்வியில் பின்தங்கிய நிலையிலிருந்து வந்தது. எனினும், தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த மாணவன் தேசிய ரீதியில் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளமை மீண்டும் கல்வியில் வடமாகாணம் முன்னேறி வருகின்றது என்ற செய்தியினை வெளிக்காட்டி நிற்கின்றது என்றார்.
0 comments:
Post a Comment