பட்டிப் பொங்கல் விழா என்பது சாதாரணமானதொரு விழாவல்ல....எங்களுடைய ஏழேழு தலைமுறைகளும் கொண்டாடி மகிழும் விழா தான் இன்றைய பட்டிப் பொங்கல் விழா என ஓய்வு நிலை அதிபரும், பிரபல இசைச் சொற்பொழிவாளருமான கவிமணி க. அன்னைதாஸன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(15-01-2018) இந்துப் பெருமக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பட்டிப் பொங்கல் விழாவை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு விசேடமாக வழங்கிய இசைச் சொற்பொழிவு நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் கோமாதாவின் சிறப்புத் தொடர்பில் இயற்றி எமது நேயர்களுக்காக இராகத்துடன் மனமுருகப் பாடும் பாடலும், சொற்பொழிவும் காணொளி வடிவிலும், கருத்து வடிவிலும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
பாருக்கு உணவளிக்கும் பசுவின் பெருமையைப் பகர்ந்திடல் எளிதாமோ!- என்னாலே
பாருக்கு உணவளிக்கும் பசுவின் பெருமையை....
ஏழு தலைமுறையும் ஏற்றிப் போற்றியிங்கே
ஏழு தலைமுறையும் ஏற்றிப் போற்றியிங்கே
எளிதான விழாவெடுத்துக் கொண்டாடும் பெருமை கொண்ட...
பாருக்கு உணவளிக்கும் பசுவின் பெருமையைப் பகர்ந்திடல் எளிதாமோ!- என்னாலே
பாருக்கு உணவளிக்கும் பசுவின் பெருமையை....
தயிரோடு பால் நெய்யும் பயிர் வளர்க்கும் கோமயமும்
தயிரோடு பால் நெய்யும் பயிர் வளர்க்கும் கோமயமும்
உயிர்களுக்கு உணவளிக்கும் உரமான கோசலமும்
தாராளமாகத் தந்து தாய்ப்பாலின் மாற்றீடாய்
தாராளமாகத் தந்து தாய்ப்பாலுக்கு மாற்றீடாய்
தரணியில் எம்மைக் காக்கும் தாயான கோமாதாவே!
தரணியில் எம்மைக் காக்கும் தாயான கோமாதாவே!
பாருக்கு உணவளிக்கும் பசுவின் பெருமையைப் பகர்ந்திடல் எளிதாமோ!- என்னாலே
பாருக்கு உணவளிக்கும் பசுவின் பெருமையை....
எமது முன்னோர்கள் தமிழர்களுடைய பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக அருமையான விழாக்களை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தான் நேற்றைய தினம் கொண்டாடிய தைப்பொங்கல் விழாவும், இன்றைய தினம் கொண்டாடப்படும் பட்டிப் பொங்கலும் திகழ்கின்றன.
இந்த இரு விழாக்களும் எங்கள் கண்களைப் போன்ற விழாக்களாகும். பச்சையத்தை வழங்குவதற்கு மூலகாரணமாக ஒளி காணப்படுகிறது. இவ்வாறான சிறப்பு வாய்ந்த ஒளியைப் போற்றுவதற்காகவே நேற்றைய தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்று எங்களுக்கு உயிர் தரும் தாயாம் கோமாதாவைப் போற்றுவதற்காக விழா எடுக்கப்படுகிறது. இன்றைய தினம் கூட கோமாதாவைப் போற்றிப் பசுக்கள் இடபங்களைப் பாதுகாக்கும் அமைப்பினர் யாழ்ப்பாணத்தில் பெருவிழா எடுக்கிறார்கள்.
உண்மையில் தாய் வேறு. பசு வேறு என்று நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. பசுவும் ஒரு மாதா தான்.
நாங்கள் பசுவுக்கும், மாட்டுக்கும் பொங்கலிடுகிறோம் எனக் கூறி வந்தாலும் நடைமுறையில் பசுக்களைப் பேணிப் பார்ப்பது அருகி விட்டது. எனவே, இவ்வாறான விழாக்கள் பசுக்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணை புரிய வேண்டும்.
செயற்கைகளை நாடியதன் விளைவை எமது சமூதாயம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலை மாற வேண்டும். எதிர்கால இளைஞர்களே! யுவதிகளே! எமது முன்னோர்கள் மூடர்களல்ல. விஞ்ஞான தத்துவங்களுடன் இணைந்த வகையில் தான் இவ்வாறான விழாக்களை எமது முன்னோர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, எங்கள் தாய் தந்த பாலுடன் எம் குருதியில் கலந்த இவ்வாறான விழாக்களை எங்கெங்கு சென்ற போதிலும் கொண்டாடுவதை எண்ணி மகிழ்கிறேன்.
தைப்பொங்கல் எங்கள் பண்பாட்டுப் பொங்கல். எங்கள் தாய்மார் எமக்கு பாலுடன் சேர்த்து ஊட்டிய அன்புப் பொங்கல் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் உணர்ச்சிப் பெருக்குடன், கண்களால் கண்ணீர் கசிந்துருக மேலும் தெரிவித்தார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment