//]]>

Tuesday, January 24, 2017

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று


திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளராக பணியாற்றியவந்த சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. மட்டக்களப்பு - குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

 சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்ரோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்திருந்தார்.

 வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய புனை பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற புனை பெயரிலும் அவரின் எழுத்தாக்கங்கள் வெளிவந்திருந்தன. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மிகவும் தெளிவாக சுகிர்தராஜன் அறிக்கையிட்டிருந்தார்.

 குறித்த மாணவர்கள் கைக் குண்டு தாக்குதல் ஒன்றிலேயே உயிரிழந்ததாக அன்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணையை திசை திருப்ப முயற்சித்த போது அந்த மாணவர்கள் துப்பாக்கி சுடப்பட்டே படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மையை துல்லியமான நிழற்படங்கள் ஊடாக வெளிக்கொண்டுவந்திருந்தார்.

 இந்த சம்பவம் அப்போதிருந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையும் மாணவர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்திருந்தனர். இந்த செய்தி அறிக்கையிடலே அவரின் உயிரை பறிப்பதற்கு காரணமாக அமைந்ததாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

 இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகிர்தராஜன், தனது 36 ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முடங்கிப் போன ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு, இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், சுகிர்தராஜன் போன்ற ஏனைய பல ஊடகவிலாளர்களின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படாமை அனைவர் மத்தியிலும் அதிருப்தி தரும் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment