வவுனியாவில் நான்காவது நாளாகப் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மையைக் கண்டிறியவும், அவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவினைத் தெரிவிக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகக் கரிசனை கொள்வதாகவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் கூறி தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசும், தமிழர்களுக்குத் தனது இனவாத முகத்தையே காட்டி நிற்கின்றது. இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் கடந்தகால அரசாங்கங்களே இருந்துள்ளன. நல்லாட்சி எனக் கூறி ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழர்களுக்கான தீர்வில் அக்கறையற்ற இனவாத செயற்பாடுகளையே இன்றைய அரசும் அரங்கேற்றி வருகின்றது.
கடந்தகால அரசு இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டி நின்றது. ஆனால் இன்று நல்லாட்சி எனக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய அரசு ஒரு புறம் நல்லிணக்க முகத்தைக் காட்டுவது போன்று தமிழர்களுக்கு நடித்து இனவாத சக்திகளுடனேயே செயற்பட்டு வருகின்றது.
காணாமற்போன தமது உறவுகள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தாலும் ஏமாற்றப்பட்ட நிலையில் உண்ணாவிரதமிருக்கும் நிலைக்கு அவர்களின் உறவுகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதோடு, அவர்களின் உறவுகள் நீதியைப் பெறுவதற்குச் சகல மட்டங்களிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். இதற்குச் சகல ஒத்துழைப்புக்களையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கத் தயாராகவுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment