//]]>

Saturday, February 18, 2017

எழுவோம் எழுவோம் விழ, விழ எழுவோம்!- சி.அ.யோதிலிங்கம்


கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பு நாவற்குடா விபுலானந்தர் விளையாட்டுக் கழக மைதானத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட “எழுக தமிழ்” எழுச்சி நிகழ்வு எதிர்பார்த்தததை விட சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 6000 வரையிலான பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். கல்லடி மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இருந்து எழுக தமிழ் பேரணி ஆரம்பமானது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கொடியை அசைத்து பேரணியை தொடக்கி வைத்தார்.

இளைஞர்கள் வானதிர கோசங்களை எழுப்பினர்.

“சிங்கள அரசே எமது தாயகத்தைப் பிரிக்காதே”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “எமது கடல் எமக்கு வேண்டும்”, “இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “சமஸ்டி அடிப்படையில் தீர்வு வேண்டும்”, “தமிழர் தாயகத்திலிருந்து படையினரை வெளியேற்ற வேண்டும்”, “பௌத்த விகாரைகளை அமைக்காதே”, “திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்து”,
“காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு”, “அரசியல் கைதிகளை விடுதலை செய்” போன்ற கோஷங்கள் எழுப்பபப்பட்டன.

கோஷங்களை ஏற்பாட்டாளர்கள் எழுதிக் கொடுத்த போதும் இளைஞர்கள் தாங்களாகவும் கோஷங்களை உருவாக்கி எழுப்பினர். அதில் கவர்ந்த கோஷம்

“எழுவோம் எழுவோம் விழ விழ எழுவோம்” என்ற கோஷமே. இந்தக் கோஷத்தை அதனை அவர்கள் உச்சரித்த உடல் மொழிதான் முக்கியமானது. குனிந்து நிமிர்ந்து உணர்வு பூர்வமாக எழுப்பினர்.

பேரணியின் இன்னோர் முக்கியத்துவம் பெண்கள் பேரணியில் அதிகளவில் கலந்து கொண்டமையாகும். யாழ்ப்பாணப் பேரணியில் இவ்வளவு திரளாக பெண்கள் கலந்து கொள்ளவில்லை.

காணாமல் போனவர்களின் உறவுகள் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பேரணியில் கலந்து கொண்டனர்.


நகர்புற மக்களை விட கிராமப்புறத்தவர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை விட திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். சில இடங்களில் மக்கள் பேரணிக்கு செல்லாதவாறும் தடுக்கப்பட்டனர்.

வாகரையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்பாட்டாளர்களினால் அங்கு 6 பஸ்கள் அனுப்பப்பட்ட போதும் முதல் நாளே மோட்டார் சைக்கிளில் வந்து எச்சரிக்கப்பட்டதனால் 2 பஸ்களில் மட்டும் மக்கள் வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ஒரு
பேருந்திலும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஏற்பாட்டில் இன்னோர் பேருந்திலும் மக்கள் வந்தனர். பேரணி 9 மணிக்கு ஆரம்பமாக இருந்த போதும் கலந்து கொள்பவர்கள் வரப்பிந்தியதனால் 10 மணிக்கே ஆரம்பமானது.

பேரணி சென்று கொண்டிருந்த வீதியில் வசித்த பொதுமக்கள், தண்ணீர், குளிர்பானம் என்பவற்றை தாங்களாக வழங்கினர். பொங்கு தமிழ்ப் பேரணிக்கு பிறகு அதிகளவில் மக்கள் கலந்து கொண்டிருக்கும் பேரணியாக இதனையே கூறலாம்.

மக்கள் மைதானத்தில் நின்று கொண்டிருந்ததினால் மேடையில் எவருக்கும் கதிரைகள் போடப்படவில்லை. பேச்சாளர்கள் அனைவரும் வரிசையில் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக நின்றனர். விக்கினேஸ்வரனுக்கு மட்டும் அவரது உடல் நிலையும், வயது நிலையும் கருதி கதிரை போடப்பட்டது.

வெயில் அதிகமாக இருந்ததினால் குடையும் பிடிக்கப்பட்டது. மைதானத்தில்
எழுச்சிக்கூட்டம் பேரணியின் இணைத்தலைவர் வசந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. காயமடைந்த மாற்றுத்திறனாளிப் போராளி ஒருவர் ஈகைச் சுடரை ஏற்றிவைத்தார்.

கிழக்குப்பல்கழைக்கலக மாணவிகள் தமிழ் வாழ்த்துப் பாடினர்.

உரைகளின் போது முதலில் எழுகதமிழ் பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வசந்தராசா வாசித்தார். தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம், பேராசிரியர் சிற்றம்பலம், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினர்.

கடைசியாக விக்கினேஸ்வரன் உரையாற்றினர். அவருக்கே அதிக நேரம்
ஒதுக்கப்பட்டது. 30 நிமிடங்கள் அவர் பேசினார். பின்னர் நன்றியுரையுடன் எழுச்சிக் கூட்டம் 2 மணியளவில் முடிவுற்றது.

எழுக தமிழுக்கான அரசியற் கட்சிகளின் பங்கினைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பங்கு போற்றக் கூடியதாக இருந்தது.

இந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்பவற்றின் பங்கு மகத்தானதாக இருந்தது. அதன் மட்டக்களப்பு தலைவர்கள் மிகவும் முன்மாதிரியாக நடந்து கொண்டனர்.


புளொட் இயக்கத்தின் பிரதிநிதி பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதிநிதி துரைரட்ணம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் முன்மாதிரியாக ஐக்கியத்துடன்
நட்புடனும் நடந்து கொண்டனர்.

பெரிய கருத்து வேற்றுமைகள் எவையும் இவர்களுக்குள் வரவில்லை.

தீர்மானங்களையும் கூட்டாக எடுத்தனர். இவற்றினூடாக தங்கள் தலைமைத்துவ ஆற்றலை தெளிவாகவே வெளிப்படுத்தினர். எழுக தமிழ் முடிவடைந்து இரண்டு நாட்கள் கழியும் முன்னரே கேப்பாப்பிலவு மக்களுக்கான போராட்டத்தையும் வியாளேந்திரன் தலைமையில் ஆனால் கூட்டாக நடாத்தினர்.

இதன் மூலம் தமது கூட்டுத் தலைமை ஆற்றலையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களிலேயே வயதில் குறைந்தவர். ஒரு பிரபல ஆசிரியர். எந்நேரம்
சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்குவார். ஓடிக்கொண்டே இருப்பார்.
அவருக்குப்பின்னால் ஒரு மாணவர் படை எப்போதும் ஒடிக்கொண்டே இருக்கும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் ஒரு முன்னாள் போராளி. கிழக்குப்பிரச்சினைகளை புலமைப்புலத்தில் பார்க்கும் ஆற்றலைப் பெற்றவர். அவரது அறிக்கைகளில் கிழக்கின் குறிப்பாக மட்டக்களப்புப் பிரச்சினைகள் விஞ்ஞான பூர்வமாக வெளிவரும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஒரு ஆங்கில இராசானவியல் ஆசிரியர். யாழ்ப்பாணப்பல்கழைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரி. கிழக்கு சந்திக்கும் பிரச்சினைகளை நுணுக்கக் கண்கொண்டு பார்க்கும் ஆற்றலைக் கொண்டவர். இவர்களின் இணைவு, கூட்டுத் தலைமை கிழக்கின் தலைமைகளில் நிச்சயம் மாற்றங்களை கொண்டு வரும். தமிழ் மக்களின் பேரவையின் இணைத்தலைவர் வசந்தராஜாவும் சட்டத்தரணி விஜயகுமாரும் சிறப்பான ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையின் பங்களிப்புப் பற்றியும் குறிப்பாகக் கூறவேண்டும். அதனைக் கூறாவிடின் கிழக்கின் எழுகதமிழ் ஆய்வு முழுமையானதாக இருக்காது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்திரன், செயற்பாட்டாளர் அரவிந் அலெக்ஸ் ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று 2 மாதங்களாக செயலாற்றினர்.

அவர்களுடன் கூடவே யாழ்ப்பாணத்திலிருந்தும் பல இளைஞர்கள் சென்றனர். மட்டக்களப்பின் பெரும்பான்மையான கிராமங்களுக்கு பயணித்தனர். விழிப்புப் பிரச்சாரங்களை செய்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். 50 க்கும் மேற்பட்ட சிறு கூட்டங்களை 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடத்தினர்.

வாகரை, வாழைச்சேனை, வெல்லாவெளி, கொக்கட்டிச் சோலை, வாகனேரி, கரடியனாறு போன்றவையும் இதிலடங்கும்.

ஒவ்வொருநாளும் காலையும், மாலையும் 6 மணித்தியாலங்கள் வரை கிராமங்களுக்குள் நடந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் விருந்தோம்பல் அவர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அது மருத நிலத்திற்குரிய மிகப் பெரிய பண்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்களுக்கு இது புது அனுபவம். குறைந்தது ஐந்து வீடுகளுக்கு ஒரு வீட்டில் அவர்களுக்கு தேநீர் கிடைக்கும். இது யாழ்ப்பாணத்தில் கிடைக்காத ஒன்று. கஜேந்திரகுமார் ஒரு தேநீர் பிரியர் ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை தேநீர் கொடுத்தாலும் வாங்கிக் குடிப்பார். அதுவும் கிண்ணம் முட்டக் கேட்டு வாங்கி ரசித்துக் குடிப்பார். மட்டக்களப்பு பயணத்தில் அவரது காட்டில் பெரும் மழை. நகைச்சுவையாக நான் யாழ்ப்பாணத்திற்கு வரப்போவதில்லை மட்டக்களப்பிலேயே இருக்கப்போகிறேன் எனக் கூறினார். புல் தரையில் சப்பாணி கட்டி அமர்ந்துகொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

கஜேந்திரன் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர். எழுக தமிழ் காலத்தில்அவருக்கு நெருக்கடிகள் அதிகம் வந்தன. மூன்றாவது குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. அதற்கும் பல உடல் நலப்பிரச்சினைகள். கொழும்புக் கொண்டு சென்று காட்ட வேண்டும் இதற்கிடையில் சிறிய இரண்டாவது மகனுக்கு அவர் மட்டக்களப்பில்
தங்கியிருந்தபோது டெங்குக்காய்ச்சல் வந்தது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவனுக்கு இரு மாதங்களுக்கு முன்னர் தான் வளர்ப்பு நாய் முகத்தில் கடித்து நீண்ட காலம் ஆஸ்பத்திரியில் இருந்தான். அது ஒழுங்காக சுகமடைய முன்னரே டெங்குக் காய்ச்சல் வந்தது. கஜேந்திரன் யாழ் திரும்பி ஒரு வாரம்
மகனுடனேயே யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கி நின்றார். வைத்தியசாலையில் துண்டு வெட்டப்பட்டதும் மகனை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உடனடியாகவே மட்டக்களப்பு திரும்பிவிட்டார். இந்த அர்ப்பணிப்புச் செயற்பாடுகளையெல்லாம் நிராகரித்துவிட முடியாது. அவர்களின் முழு நோக்கமும் எழுக தமிழை எப்படி வெற்றியாக்குவது என்பதாகவே இருந்தது.

கிராமங்களில் அவர்கள் கட்சி அரசியல் செய்யவில்லை. எழுக தமிழையும், தமிழ்மக்கள் பேரவையுமே அவர்கள் முதன்மைப்படுத்தினர்.

தமிழரசுக் கட்சி எதிர்ப்புச் செயற்பாடுகளையே தொடர்ந்தது. இதனால் எழுகதமிழ் நிகழ்வுக்கான மைதானத்தை மட்டக்களப்பு நகருக்குள் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அனைத்து மைதானங்களும் தர மறுத்து விட்டன. நாவற்குடா விபுலானந்த விளையாட்டுக்கழக இளைஞர்கள் மட்டும்
துணிவுடன் தங்கள் மைதானத்தை வழங்க முன்வந்தனர். கடைசி நேரத்தில் ஈரோஸ் பிரமுகர் பிரபா தமிழரசுக்கட்சியின் தூண்டுதலின் பேரில் மட்டக்களப்பு பொலிஸில் தடையினைக் கோரினார்.

மட்டக்களப்பு பொலிஸ் நிகழ்வு நடக்கும் இடம் தங்கள் எல்லைக்குள் இல்லை என்றபடியால் தாம் தர முடியாது என்றனர். பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடை கோரப்பட்டது.

இனங்களுக்குள் மோதல்களை தூண்ட முற்படுகின்றனர் எனக் காரணம் கூறப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதி சட்டத்தரணி விஜயகுமார் தமிழ் மக்கள் தமது தேவைகளையே கூறவுள்ளனர். எந்த மோதலுக்கும் போகப்போவதில்லை எனப் பொலிஸ் அதிபருக்கு

தெரிவித்தார். அவர்களும் தடையை வழங்கவில்லை. ஏற்பாட்டாளர்களிடம் 500 பொலிசார்பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவர் என்று மட்டும் குறிப்பிட்டனர்.

பொலிசாரினால் எந்தத் தொல்லைகளும் இருக்கவில்லை அவர்கள் மிக நாகரீகமாக தங்கள் கடமைகளை மேற்கொண்டனர். மொத்தத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் ஏற்பட்டாலும் பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் “எழுகதமிழ்” சிறப்பாக நடைபெற்றுள்ளது.

எழுக தமிழின் சாதனைகளாக பலவற்றைக் கூறலாம். அதில் முதலாவது வட - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதில் நாங்கள் மிகவும் பற்றுதியாக இருக்கின்றோம் என்பதை கிழக்கு மண்ணிலிருந்து ஆணித்தரமாக வெளிப்படுத்தியமையாகும்.

மேற்குலகம், இந்தியா உட்பட எமது கூட்டமைப்புத் தலைமைகள் கூட அதனை அடக்கி வாசித்த நிலையில் மக்களாகவே இதனை உரத்துக்
கூறியமை மிக மிக முக்கியமான விடயமாகும்.

வட- கிழக்கு இணைப்பை கிழக்குத் தமிழ் மக்கள் விரும்பவில்லை எனப் பிரச்சாரம் ஒரு சிலருக்கும் இது மிகப் பெரிய சாட்டையடியாகும்.

இரண்டாவது, இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் நினைத்தவர்களுக்கு எழுகதமிழ் மூலம் சாட்டையடி கொடுத்தமையாகும். உண்மையில் முன்னரும் கூறியது போல இனப்பிரச்சனை என்பது கிழக்கில் தான் அதிகமாக உள்ளது. அங்கு தான் நேரடி அதிகாரமோ, மறைமுக அதிகாரமோ இல்லாமல் தமிழ் மக்கள் அதிகாரங்களைத் தங்கள் கைகளில் வைத்திருக்கும் சிங்களத்
தரப்பாலும், முஸ்லீம் தரப்பாலும் ஒடுக்கப்படுகின்றனர்.

இவற்றையெல்லாம் தெளிவாக உணர்ந்து கிழக்குத் தமிழ் மக்களை சுற்றி ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்குவதற்கு இந்த எழுக தமிழ் வித்திட்டுள்ளது.

மூன்றாவது எழுக தமிழில் பெண்கள் முன்னரே கூறியது போல திரளாக பங்கு
பற்றியமையாகும். இது வடக்கு எழுக தமிழில் பெரியளவில் காணாத ஒன்று. கிழக்கை தாய் வழிச் சமூகம் என்று கூறுபவர்களும் உண்டு. வலுவான ஆற்றல்களை உடைய பெண்களை அடையாளம் காண்பதற்கு எழுக தமிழ் உதவியது.

நான்காவது வடக்கு- கிழக்கு உறவை இந்த எழுக தமிழ் மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்தமையாகும். வடக்கிலிருந்து எழுக தமிழ்ப்பிரச்சாரத்திற்கு வந்தவர்களில் பலர் முன்னொரு தடவையும் மட்டக்களப்பினைப் பார்த்திராதவர்கள்.

அவர்களுக்கு இங்குள்ளவர்களின் அன்பான உபசரிப்பபுக்களும் நேர்மையான நட்பும் வெகுவாகக் கவர்ந்திருந்தது.

மட்டக்களப்பு பிரதேசத்தின் அழகும் பிடித்திருந்தது. பலர் மட்டக்களப்பிலேயே தங்கியிருக்கப்போகின்றோம் எனக் கூறியதையும் கேட்கக் கூடியதாக இருந்தது. இது பற்றி முன்னரும்கூறப்பட்டது.

ஐந்தாவது கிழக்கின் பிரச்சினைகளை உலகத்திற்குக் கொண்டு செல்ல உதவியமையாகும்.

உண்மையில் இன்றைய தேவை கிழக்கினை உலகிற்கு கொண்டு செல்வதும், உலகத்தைக் கிழக்கிற்குக்கொண்டு வருவதுமே! இலங்கை ஆட்சியாளர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கிழக்கினை இருள்உலகிற்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தின் மீள்

எழுச்சிக்கு கிழக்கின் எழுகதமிழ் பெரும் பங்காற்றியிருக்கின்றது எனலாம்.

கிழக்கின் எழுக தமிழின் போதாமைகளைக் கூறாவிட்டால் இந்த ஆய்வு முழுமை பெற முடியாது. உண்மையில் எழுக தமிழ் நான்கு பெரிய வேலைத்திட்டங்களை உள்ளடக்கியது.

மக்களை அணிதிரட்டக் கூடிய விழிப்புணர்வுப் பிரச்சாரம், ஒழுங்கமைக்கப்பட்ட பேரணி, எழுக தமிழின் நோக்கத்தை பிரதிபலிக்கும் எழுகதமிழ் பிரகடனம், எழுக தமிழ்ப்பிரகடனத்தை மக்களுக்கு தெளிவாக விளக்கும் பொதுக் கூட்டம் என்பவையே இவை நான்குமாகும்.

இந்த நான்கு வேலைத்திட்டங்களிலும் பெரும் போதாமைகள் நிலவியிருந்தன. மக்களை அணிதிரட்டக் கூடிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஆரம்பத்தில் ஒரு கட்சி மட்டும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது. தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் ஏனைய கட்சிகளை கடைசி
நேரத்திலேயே பிரச்சாரத்தில் ஈடுபட்டன. சிவில் நிறுவனங்களின் பங்கு போதியளவு இருக்கவில்லை.

கிழக்குப் பல்கழைக்கழக மாணவர்கள் பங்களித்தமை உண்மைதான். அதுவும்
போதியதாக இருக்கவில்லை. அனைவரும் இணைந்து நன்கு திட்டமிட்ட வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் மக்கள் மத்தியில் அரசியல் தெளிவை கொண்டவர முடிந்திருக்கும்.

எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றும் மக்களையும் பத்தாயிரத்துக்கும்
மேல் அதிகரித்திருக்கலாம். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களையும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம்.

இரண்டாவது பேரணி. இது மிகவும் பலவீனமானதாக இருந்தது. திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படவில்லை. ஜே.வி.பி.யின் ஊர்வலங்களைப் பார்த்தால் அங்கு ஒரு நேர்த்தியிருக்கும் வரிசை ஒழுங்குகள் சீராக இருக்கும்.

இங்கு அவற்றைப் பெரிதாக காணமுடியவில்லை. இதற்கென இளைஞர்கள் சிலரை பயிற்சி கொடுத்து செயற்பட வைத்திருக்க வேண்டும். 100 பேருக்கு ஒரு இளைஞரை பொறுப்பாக்கியிருக்க வேண்டும். கோஷங்களின்
பிரதி பேரணியில் கொடுக்கப்பட்டாலும் அதனை உச்சரிக்கக் கூடிய பயிற்சி போதாமல் இருந்தது.

பேரணியின் வரிசைகள் கூட இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் இருப்பதே அழகானது. இங்கு வரிசைகள் எதுவும் இல்லாமல் கும்பலாகச் செல்லும் நிலமையே இருந்தது.

சுலோக அட்டைகளின் மொழி நீண்டதாக இருந்தது. அதனைச் செம்மைப்படுத்தியிருக்கலாம்.

அடுத்தது பிரகடனம். உண்மையில் இது தமிழ்த் தேசிய அரசியலின் பொதுவான விடயங்களையும், கிழக்கு பிரத்தியேகமாக சந்திக்கின்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும். கிழக்கின் பிரச்சிரனைகளைக் கையாள்வதற்கான முன்மொழிவுகளை கோடு
காட்டியிருக்க வேண்டும். இங்கு கிழக்குப்பிரச்சினைகள் உள்ளடக்கப்படவில்லை.

கிழக்கின் பிரதான பிரச்சினை பாதுகாப்புப் பிரச்சினை தான். இந்தப் பாதுகாப்பு இன்மையால் கிழக்குத் தமிழ் மக்களின் நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன. கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரமில்லை சிங்களத் தரப்பும், முஸ்லீம் தரப்புமே அதிகாரங்களைத் தங்கள் கைகளில் வைத்திருக்கின்றன.

அவை திட்டமிட்டு கிழக்கு தமிழ் மக்களின் மீது தாக்குதல் யுத்தத்தினைத் தொடுத்துள்ளன. கிழக்குத் தமிழ் மக்கள் இதனை எதிர்த்து தற்காப்பு யுத்தத்தினைக் கூட நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.

புலிகள் இருக்கும் வரை கிழக்கு தமிழ் மக்களிடமும் அதிகாரம் இருந்தது. அவர்கள் அழிக்கப்பட்ட பின் எந்தவித அதிகாரமும் இல்லை. சர்வதேசக்கவனிப்பும் இல்லை.

இராஜதந்திரிகள் வடக்கிற்குச் செல்கின்றனரே தவிர கிழக்கிற்கு வருவதில்லை. கூட்டமைப்புத் தலைமையும் கிழக்கிற்கு வரச் சொல்லிக் கேட்பதில்லை. வெளிநாட்டுப் பயணங்களில் கிழக்குப்பிரதிநிதிகளை அழைத்துச் சென்று கிழக்கு விவகாரத்தை பேசுபொருளாக்குவதில்லை.

மொத்தத்தில் அனைத்து தரப்பினராலும் கைவிடப்பட்ட மக்கள் கூட்டமாகவே கிழக்குத் தமிழ் மக்கள் விடப்பட்டனர்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் குறைவாக இருந்தாலும் தமிழ் மக்களின்
போராட்டங்களினாலேயே அது கிடைத்தது. மாகாண சபைகள் என்பது தமிழ் மக்களின் இரத்தமே.

அந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்களுக்கு இடமில்லை. சிறிய விவகாரங்களான மேய்ச்சல் தரை விவகாரம், விகிதாசார வாய்ப்புக்களைப் பெறுதல், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவினை தரமுயர்த்துதல், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கல்வி வலயத்தினை உருவாக்குதல் என்பவற்றைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையிலேயே கிழக்கில் தமிழ்
மக்கள் இருக்கின்றனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தமிழ் மக்கள் சற்றுப்பலமான நிலையில்இருக்கும் மாவட்டமாகும். திருகோணமலையும், அம்பாறையும் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தை பலமான நிலையில் வைத்திருந்தால் தான்திருகோணமலையிலும், அம்பாறையிலும் எஞ்சிய தமிழ்ப் பிரதேசங்களையும் பலமான நிலையில் வைத்திருக்க முடியும்.

இன்று மட்டக்களப்பு மாவட்டம் தன்னைப்பாதுகாக்க முடியாமல் தடுமாறுகின்றது. அங்குள்ள அரசியல் சக்திகள் வெறும் ஒப்பாரிகளை மட்டும்
வைக்கின்றனர். அவர்களுக்கு புற ஆதரவு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளனர். இவற்றை அணுகக் கூடிய புலமை ஆற்றலும், கொள்கை ஆற்றலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலமை வடக்கினை விட மிகவும் வித்தியாசமானது. வடக்குக் கண்ணாடிக்குள்ளால் இவற்றை பார்த்து தெளிவுகளைப் பெறமுடியாது. உண்மையில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் கிழக்குத் தமிழ் மக்கள் நடுவீதியில் விடப்பட்டுள்ளனர்.

வீதியில் நிற்கின்ற மக்களை வீட்டுக்குச் செல்ல வழிகாட்டாமல் கூட்டமைப்புத் தலைமை வேடிக்கை பார்த்துக் கொண்டு
நிற்கின்றது.

இந்த நெருக்கடியை நன்கு உணர்ந்த ஒரேயொரு தமிழ் புலமையாளன் தராகி
சிவராம் தான். கிழக்கு தமிழ்த் தேசியம், உலக ஒழுங்கு என்ற வரிசையில், கிழக்கினைப் பாதுகாக்கும் வியூகங்களை அவன் வகுத்திருந்தான் இன்று இவற்றைக் கூறுவதற்கு அவன் உயிருடன் இல்லை.

தற்போதைய தேவை கிழக்குத் தமிழ் மக்களைச் சுற்றி பாதுகாப்பு வியூகங்களை வகுப்பது தான்.

முதல் அரணில் வடக்குத் தமிழர்களும், இரண்டாவது அரணில் உலக தமிழர்களும், மூன்றாவது அரணில் உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் நிற்கத்தக்கதாக பாதுகாப்புப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இதற்கு கிழக்கில் வலுவான தலைமையைக் கட்டவேண்டும். வடக்கு அங்கு சென்று தலைமை கொடுக்கத்தேவையில்லை. அதற்கான ஆற்றல் உள்ளவர்கள் கிழக்கில் நிறையவே இருக்கின்றனர்.

அதற்குரிய கொள்கைப் பலத்தையும், புலமைப்பலத்தையும் அடிப்படை வளங்களையும், ஏனைய வளங்களையும் கொடுத்தாலே போதுமானது.

இந்த விடயங்கள் ஏதோ ஒரு வடிவில் பிரகடனத்தில் வந்திருக்க வேண்டும். கிழக்கைப் பாதுகாப்போம் என்பதை பிரகடனமாக எடுத்திருக்க வேண்டும். வடக்கு- கிழக்கு நிரந்தரமாக இணையும் வரை இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியமானவை எழுகதமிழ் நிகழ்வில் உரையாற்றியவர்களும் தமிழ்த் தேசிய அரசியலின் பொதுவான விவகாரங்களைப் பேசினார்களே தவிர கிழக்கின் சிறப்பான பிரச்சினைகளைப் பேசவும் இல்லை. அதனைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளினையும் முன்வைக்கவில்லை.

உரையாற்றியவர்கள் அனைவரும் ஒரே விடயங்களைப் பேசாமல் வேறு வேறு விடயங்களைப் பேசியிருக்கலாம். அதற்கான திட்டமிடல்களும் ஒழுங்கமைக்கப்படவில்லை.

இந்தக் குறைபாடுகள் எதிர்கால எழுக தமிழில் நீக்கப்படல் வேண்டும். இவை இருந்தாலும் கிழக்கின் எழுக தமிழ் சாதித்தவை மலையளவு உயரமானது. அதனை எவரும் குறைத்து மதித்துவிடமுடியாது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment