//]]>

Sunday, December 10, 2017

வட்டுக்கோட்டையில் கஜேந்திரகுமார் அறைகூவல் (Video)

தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்த வட்டுக்கோட்டை மண் அதே உறுதியுடன் தொடர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகப் பயணிக்கவேண்டும். எங்களைப் பொறுத்தவரை அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றோம் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல் விடுத்துள்ளார். 

தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்றுச் சனிக்கிழமை (09) பிற்பகல் தமிழ்க் காங்கிரசின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் இடம்பெற்றது.  

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தனது கொள்கைகளைக் கைவிட்டு ஒற்றையாட்சித் தீர்வுக்கு இணங்கியிருக்கின்ற ஒரு தருணத்தில் தாம் உள்ளூராட்சித் தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம்.

இது வெறும் உள்ளூராட்சித் தேர்தலல்ல. தாங்கள் கஸ்ரப்பட்டு அரசுடன் பேசி கொண்டுவந்திருக்கின்ற அரசியலமைப்புக்கு இது ஒரு கருத்துக் கணிப்பு எனச் சுமந்திரன் பலவிடங்களில் கூறியிருக்கின்றார்.  

எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். எங்கள் கொள்கையோடு உடன்படும் தரப்புக்களை இணைத்துச் செயறப்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்த அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றோம். 


ஏனெனில், தமிழ் அரசியலின் திருப்புமுனையாக மிக முக்கியமான கட்டங்களில் வட்டுக்கோட்டை இருந்திருக்கிறது. வட்டுக்கோட்டை மக்கள் ஒரு கொள்கையுடன் மிகத் தீவிரமாக இருந்த மக்கள். இந்த மண்ணில்தான் தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்தது. அந்தக் கோட்பாடுகளை நாங்கள் கைவிட்டுவிடக்கூடாது. எல்லோரையும் விட அந்தக் கோட்பாடுகளை முன்கொண்டுசெல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த மண்ணுக்கே இருக்கிறது. 

எனவே தான், இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை இந்த வட்டுக்கோட்டை மண்ணிலிருந்து தொடங்கியிருக்கின்றோம். 

எனவே, இந்த மண் பிழையான தரப்புக்களின் கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதைக் கூறிக்கொள்கின்றோம். இந்தத் தேர்தல் பலருடைய கணக்குகளை மீறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்  என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment