//]]>

Wednesday, February 15, 2017

கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழில் ஆசிரியர்கள் போராட்டம் (Photos)



வடமாகாணக் கல்வியமைச்சினால் ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு  வரும் அநீதிகளைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் ஆரம்பித்த தொடர்போராட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை யாழ்.செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக் கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய நிலையில் குறித்த போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றுச் செவ்வாய்க்கிழமையும்(14) தொடர்ச்சியாக நடைபெற்றது.   

நேற்று முன்தினம் இரவும், நேற்றும் கடும் மழை கொட்டிய போதும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தமது போராட்டத்தை இடைவிடாது  தொடர்ச்சியாக மேற்கொண்டனர். 

எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆசிரியர்களான நாம் சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன், எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிட்டாத பட்சத்தில் எமது போராட்டத்தைத் தீவிரமாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  

இந்தப் போராட்டத்தின் தீர்வுக்குத் தென்னிலங்கை அரசியல் வாதிகளை நாடுவது எமக்கு இலகுவான காரியமாகவிருந்தாலும் நாம் அவ்வாறு செல்ல விரும்பவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையையும், வட-கிழக்கு இணைப்பினையும், மாகாண சபை அதிகாரங்களையும் ஏற்றுக் கொள்கிற அமைப்பு.  அந்த வகையில் மாகாண சபையின் அதிகாரங்களை மதித்து நியாயமான முறையில் எமது கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் எந்தவொரு அரசியல் தலைமைகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை இதுவரை சந்தித்துக் கலந்துரையாடாத நிலையில் எமது போராட்டம் உக்கிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment