//]]>

Monday, March 13, 2017

சிங்கள மக்களையும் அணிதிரட்டிக் கொழும்பில் ஆரம்பமாகிறது தொடர் சத்தியாக்கிரகம்!- யாழ் ஊடக சந்திப்பில் தகவல்


வடக்கு-கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்கு!, சகல காணாமல் ஆக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!, சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஒரு வார தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. வடக்கு-கிழக்கில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது என சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் ச. கபிலன் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை(13) முற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும்-17 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பாகும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும்-23 ஆம் திகதி வரை இரவு பகலாகத் தொடர் போராட்டமாக நடைபெறவுள்ளது.  அத்துடன் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமவுரிமை இயக்கம் நாளை செவ்வாய்க்கிழமை(14) காலை-10 மணி முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்தவுள்ளது.

வடக்கு-கிழக்கு மக்களுக்கு நாங்கள் ஜனநாயகத்தை வழங்குகிறோம் என ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரை வடக்கு-கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் பிரச்சினை, காணிகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்குத் தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை.

இந்த சூழலில் குறித்த பிரச்சிலைகளுக்குத் தீர்வு வேண்டி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் தன்னெழுச்சியாக மக்கள் தொடர் போராட்டங்களை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த மக்களின் நியாயமான போராட்டங்கள் வடக்கு- கிழக்கிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்காமல் இவர்களுக்கு ஆதரவான குரல் தெற்கிலும் ஒலிக்க வேண்டும் எனும் நோக்குடன் சகோதர மொழி பேசும் சிங்கள மக்களையும், பல்கலைக் கழக மாணவர்கள், கலைஞர்கள், மதகுருமார்கள் ,ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அணிதிரட்டி இந்தத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளோம்.  இந்தப் போராட்டத்தில் வடக்கு ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என இவ்வேளையில் அழைப்பு விடுக்கின்றோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திய சமவுரிமை இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களான லலித் குமாரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் ச. கபிலனுடன் புதிய ஜனநாயக மார்க்சிஷ லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல்,  தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சு. சிறீதரன், சமத்துவ சமூக நீதி மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் அ. அன்பழகன், பிரபல கவிஞரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.கே .கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டு சம உரிமை இயக்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஆதரவாகத் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment