முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்த பொதுமக்களின் 42 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
பிலக்குடியிருப்பு மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி, கடந்த ஜனவரி 31ஆம் நாள் தொடக்கம், கேப்பாபிலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், இன்று காலை, பிலக்குடியிருப்பு மக்களின் 42 ஏக்கர் காணிகளையும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஊடாக சிறிலங்கா விமானப்படையினர், உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று காலை விமானப்படை முகாமின் கதவுகள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டதையடுத்து, பெரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் உட்சென்று தமது காணிகளைப் பார்வையிட்டனர்.
பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து, ஒரு மாதமாக பிலக்குடியிலுப்பு மக்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
அதேவேளை, கேப்பாப்பிலவில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும், அங்குள்ள படை முகாம்கள் தொடர்ந்து செயற்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டாலும், அந்தப் பகுதியில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படாது என்றும், கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment