மூதறிஞர் சிற்பி அமரத்துவம் அடைந்ததன் ஓராண்டு நினைவாக நினைவுகளைக் கையளித்தல் என்ற பெயரில் கடந்த 24.12.2016 யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதறிஞர் சிற்பியின் துணைவி சரஸ்வதி சிவசரவணபவன் சுடரேற்றி வழிபாடாற்றினார். சிற்பியின் புதல்வர் வங்கியாளர் சி.சுந்தரேசன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் இரண்டு நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. சிற்பி குறித்துப் பல்வேறு அறிஞர்களது பார்வையாக அமைந்த நுணுக்கரிய நுண்ணுணர்வே என்ற நூலின் அறிமுகவுரையை கலாபூஷணம் ப.சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம் ) ஆற்றினார். சிற்பி எழுதிய கலைச்செல்விக் காலம் என்ற நூலின் வெளியீட்டுரையை ஞானம் மாத இதழின் ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன் ஆற்றினார். இந்நூலின் நயப்புரையை யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் ஆற்றினார்.
நிகழ்வில் சிற்பி ஐயா ஞாபகார்த்த நினைவுப் பேருரையும் இடம்பெற்றது. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நினைவுக்கான வெளிகளைச் சாத்தியப்படுத்தல் - சில அவதானிப்புக்களும் முன்மொழிவுகளும் என்ற பொருளில் பேருரை இடம்பெற்றது. இதனை யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆற்றினார்.
தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு தொடக்கம் 1966 ஆம் ஆண்டு வரை சிற்பியால் வெளியிடப்பட்ட கலைச்செல்வி இதழ்களில் 69 இதழ்களை உள்ளடக்கியதும் சிற்பி பற்றிய ஆவணப்பதிவாக அமைந்துள்ளதுமாகிய சிற்பிஐயா இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இளைப்பாறிய நூலகர் சௌந்தரராஜன் இதனை ஆரம்பித்து வைத்தார். அதனை அடுத்து 32 ஆயிரம் ஈழத்து நூல்கள் மற்றும் பிரசுரங்களைத் தன்னகத்தே கொண்ட நூலகம் இணையத்தளம் பற்றிய அறிமுகவுரை இடம்பெற்றது. வித்தியாசாகர் சுந்தரேசன் நன்றியுரை நல்கினார்.
நிகழ்வில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, கவிஞர் சோ.ப., கலாநிதி குழந்தை சண்முகலிங்கம், எழுத்தாளர்களான ஐ.சாந்தன், அ.யேசுராசா, பொ.சண்முகநாதன், கவிஞர் துரையர், மூத்த பத்திரிகையாளர் ம.வ.கானமயில்நாதன் ஆகியோருக்குச் சிற்பியின் புதல்வர்கள் சிறப்புப் பிரதிகள் வழங்கி அவர்களிடமிருந்து ஆசிபெற்றனர்.
சிற்பியால் வெளியிடப்பட்ட கலைச்செல்வி சஞ்சிகையின் ஊடாக இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், ம.வ.கானமயில்நாதன், செ.யோகநாதன், அன்னலட்சுமி இராசதுரை உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளில் வெளிவந்த கலைச்செல்வி இதழ்களின் மூலப்பிரதிகள் நிகழ்வில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment