//]]>

Wednesday, October 4, 2017

தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரின் சகோதரியான யாழ். பல்கலைக்கழக மாணவியின் வேண்டுகோள்


பத்தாவது நாளாகவும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. எங்கள் அண்ணாவுக்கு ஏதாவது உயிராபத்து ஏற்பட்டால் நாங்கள் வாழ்வதா? அல்லது சாவதா? என இறுதி முடிவெடுக்க வேண்டிவரும்.  எனவே,இவ்வாறான நிலைக்கு எங்களைத் தள்ளாமல்  எங்கள் அண்ணாவை உடனடியாக விடுவிக்க அரசியல் தலைமைகள் உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீருடனும், வேதனையுடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவியான கிரிசாந்தி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், பல்கலைக்கழக  ஊழியர் சங்கம் ,ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து மேற்கொண்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை(04) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தங்களுடைய வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் எனவும், வவுனியா நீதிமன்றத்திலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பத்தாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரின் சகோதரியே மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தங்களுடைய வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் மூன்று அரசியல் கைதிகளில் எனது அண்ணாவும் ஒருவர்.

கடந்த-2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் எனது அண்ணா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நான்கு வருடங்களாக எந்தவித விசாரணைகளுமின்றி அவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

எனினும், 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் இந்தச் சந்தர்ப்பத்தில் குற்றப் பத்திரிகை வராததன் காரணமாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பிற்போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த செப்ரெம்பர் மாதம்-25 ஆம் திகதி இந்த வழக்கின் விசாரணை வவுனியா நீதிமன்றத்தில் நடைபெறுவதாகவிருந்த நிலையில் சாட்சிகளுக்கு உயிராபத்து இருக்கிறது எனத் தெரிவித்து வழக்கு விசாரணைகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த-2015 ஆம் ஆண்டு எனது தந்தையார் இறந்த நிலையில் என் அம்மாவின் உடல் நிலையும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நானும், இரண்டு தங்கச்சிமார்களும் அம்மாவுடன் தனித்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைகள் வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகச் சொல்லப்பட்ட போதே நாம் மிகுந்த கவலையடைந்தோம். எங்களால் சட்டத்தரணிக்கான செலவினைக் கூட வழங்க முடியாத நிலை. இதனால், நாங்கள் என்ன செய்வதென்று தெரியாது வாடுகின்றோம் எனவும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment