//]]>

Saturday, December 23, 2017

யாழில் புலம்பெயர் தமிழர்களின் கல்வி, கலைச் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்


அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் செல்வராஜா மோகனராஜா மற்றும் அமெரிக்க பிறின்ஸ்டன்  பல்கலைக்கழக மாணவன் ஞானசேகரன் மகிசன் ஆகியோருடன் புலம்பெயர் தமிழர்களின் கல்வி மற்றும் கலைச் செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்கள் பற்றிய
விசேட கலந்துரையாடல் நாளை  ஞாயிற்றுக்கிழமை(24) காலை- 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை  யாழ்.  கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு  மலர்ச்சிக்  கூடத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக முன்னாள்  நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன்  தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலில் அமெரிக்கக் கல்வி முறையியல்,புலம்பெயர் வாழ் ஈழ மக்களின் வாழ்வியல்  மற்றும் கலை,கலாசாரச் செயற்பாடுகள்  குறித்துப் பேராசிரியர்- மோகனராஜாவும்,  அமெரிக்கப் பல்கலைக்கழக கல்வியியல் முறைமைகள் ,இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் இரண்டாம் தலைமுறையினரின் கலைச்செயற்பாடுகள், பங்களிப்புகள்  குறித்து தாயகத்தில்பிறந்து புலம்பெயர்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஞானசேகரன் மகிஷனும் கருத்துரைகள் நிகழ்த்தவுள்ளனர். 

பேராசிரியர்- மோகனராஜா ஈழத்தில் 1980 களில் யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை மாணவனாகக்  கல்வி பயின்ற காலத்தில்  பல்கலைக்கழகக் கலாசாரக்  குழுவினை தோற்றுவித்தவர்களுள்  ஒருவர்.

தமிழ்த் தேசிய விடுதலை அரங்காக சமூக மாற்றத்திற்கான அரங்கப் பணியில் முத்திரை பதித்துக் கொண்ட யாழ் பல்கலைக்கழக கலாசார குழுவின் " மண் சுமந்த மேனியர்"  ஆற்றுகை மற்றும்  "மாயமான்  தெருவெளி" அரங்கு ஆகிய அரங்குகளில் பங்குபற்றிய தனது அனுபவங்கள் குறித்தும், "சமூக மாற்றத்திற்கான பணியில் அரங்கின் பங்களிப்பு" குறித்தும்   உரையாடவுள்ள பேராசிரியர் மோகனராஜா புலம்பெயர் வாழ் மண்சுமந்த மேனியர் ஆற்றுகையாளர்களின் இணைப்பில் உருவான "" நம்கலை " குழுவைச் சேர்ந்தவர் .

"மண்சுமந்த மேனியர்" ஆற்றுகையாளரான அளவெட்டியைச் சேர்ந்த ஞானசேகரனின்  புதல்வரான மகிஷன்  கடந்த-2016 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மாநிலமான நியூஜெர்சியின் உயர்நிலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களில் கல்வி, சமூகசேவை, மாணவ தலைமைத்துவம் ஆகிய துறைகளில் முதல்நிலை மாணவராக விசேடத் தேர்வு மூலம் தெரிவுசெய்யப்பட்டு அம்மாநிலத்தின் பிரதிநிதியாக அமெரிக்கத் தலைநகர்  வோஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒருவார காலம் தங்கியிருந்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும்  உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து மாணவ தலைமைத்துவம், சமூகநல செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ள முதலாவது ஈழத்தமிழ் மாணவன் ஆவார். அத்துடன் இவரது கல்விச் சமூக, சமயச்  செயற்பாடுகள் குறித்து  ஒபாமாவினால் பாராட்டையும் பெற்றவர்.

எனவே,  குறித்த கலந்துரையாடலில் ஆர்வமுள்ள இளைஞர்கள், கல்வியியலாளர்கள், கலைஞர்கள்  அரங்கத்துறை மாணவர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள்  மற்றும் சமூகநலன் விரும்பிகள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி பண்பாட்டு  மலர்ச்சிக் கூடத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment