//]]>

Monday, February 5, 2018

தமிழரசுக் கட்சிக்கு கஜேந்திரகுமார் கடும் சாட்டையடி(Photos)


சிங்கக் கொடியை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர்கள்தான் அந்தச் சிங்கக் கொடியைக் கையிலே தூக்கிப் பிடித்தவாறு அதனை ஆதரிக்கிறோம் என்கின்றனர். நாங்கள் சிங்கக் கொடியை எதிர்க்கவில்லை எனக் கூறி கடந்த எழுபது வருட காலமாகத் தமிழ்க் காங்கிரஸ் துரோகம் இழைத்து வந்ததாகக் கூறுகின்ற தமிழரசுக் கட்சி இன்று அதே சிங்கக் கொடியை சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து கரங்களிலே ஏந்திக் கொண்டாடுகின்றதே அப்போ நீங்கள் யார்? எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்களைப் பார்த்து என்ன கூறவேண்டும் ?.தமிழரசுக் கட்சி நேர்மையான கட்சியாக அரசியல் செய்வதாகவில்லை சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் எனக் கூறவேண்டும். அதுதான் உண்மை. இன்று ஒரு கதையும் நாளைக்கு இன்னொரு கதையும் கூறுபவர்களல்ல நாங்கள் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சாட்டையடி கொடுத்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(04) இரவு அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை ஆதரித்து யாழ். வதிரியில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்க் காங்கிரஸ் சிங்கக் கொடியை ஆதரித்த கட்சியாம் எனச் சுமந்திரன் இன்னொரு பொய்யைக் கட்டவிழ்த்து வருகின்றார். சிங்கக் கொடியிலே தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் அடையாளம் இல்லாத நிலையில் அதனை ஏற்க மாட்டோம் எனக்கூறி அதனை எதிர்த்த தலைவரும் ஜீ.ஜீ பொன்னம்பலமே. அதன் பின்னர் தான் அந்தச் சிங்கக் கொடியிலே தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளமாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் நாங்கள் அந்தக் கொடியை ஆதரிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை. கையிலே அதனை ஏந்திக் கொண்டாடியதும் இல்லை.

எங்களைப் பொறுத்தவரை எழுபத்து ஏழாம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கின்ற வரையும் தமிழ்க் காங்கிரஸ் இந்த நாட்டினைப் பிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை. இந்த நாட்டிலே பல குறைகளிருந்தன. அதில் மாற்றுக் கருத்தில்லை. இது ஒரு ஐக்கிய நாடு. நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் எனச்  செயற்பட்டு வந்தோம். ஆனால், 1977 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த நாட்டின் கொடியையோ, அங்கீகாரத்தையோ நிராகரிக்கவில்லை. நாமும் தமிழரசுக் கட்சியும் எமது வழிகளிலே பல முயற்சிகள் செய்தும் சிங்கள தேசம் அத்தனை முயற்சிகளையும் நிராகரித்த நிலையில் தான் இந்த இரு தரப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசத்தைக் காப்பாற்ற நாங்கள் எங்களுக்கென ஒரு தனியரசை உருவாக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருகின்றன.

அதனடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி மக்களின் ஆணையினைப் பெற்றோம். அதன் பின்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்தவொரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததுமில்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டாடிதுமில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.
(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment