யாழ். சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை கடும் மழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அடுத்தடுத்து இரு கடைகள் உடைக்கப்பட்டுப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. உணவகம், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவையே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அருகாமையில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் இயங்கி வரும் உணவகத்தின் முன் கதவையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் பிஸ்கற் வகைகள், மைலோ பைக்கற்றுக்கள்,சோடாப் போத்தல்கள் உட்படப் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு திருட்டுப் போயுள்ள பொருட்களின் பெறுமதி சுமார்-50 ஆயிரம் எனவும், அத்துடன் இரு பெரிய போத்தல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார்-25 ஆயிரம் ரூபா பணமும் திருட்டுப் போயுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் பால் மா, உழுத்தம் பருப்பு உட்படப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் முன்கதவுடைத்துத் திருடப்பட்டுள்ளன.
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறு
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரான எனக்கு அங்கு சிவப்பு ரீசேர்ட் அணிந்து சிவில் உடையில் நின்ற பொலிஸ் அதிகாரியினால் இடையூறு ஏற்பட்டது. மேற்படி பொலிஸ் அதிகாரி என்னைச் செய்தி எடுக்க வேண்டாம் எனப் பொதுமக்கள் பலரும் பார்த்திருக்கக் கடும் தொனியில் எச்சரித்தார். ஊடகவியலாளர் என என்னை அறிமுகப்படுத்திய பின்னரே மேற்படி அதிகாரி அவ்வாறு நடந்து கொண்டார். இதனால், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை என்னால் அறிந்து கொள்ளமுடியவில்லை.
திருட்டுத் தொடர்பான எழுத்து மூலமான முறைப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்காகச் சுன்னாகம் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் மற்றும் உணவக உரிமையாளர் ஆகியோர் தற்போது பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணம் திருட்டுப் போயிருந்ததுடன் அதேநாளில், இதே பகுதியிலுள்ள ஐஸ்கிறீம் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டது. கந்தரோடைப் பகுதியில் அண்மைக் காலமாக அடுத்தடுத்து இடம்பெறும் திருட்டுக்களால் அப் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment