யுத்தம் நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஐக்கியநாடுகள் சபையின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் மங்கள சமரவீர காணாமல் போனவர்களின் உண்மை விபரங்களைத் தொகுத்தல், இழப்பீடு வழங்கல், காணாமற் போனவர்களைக் கண்டறியும் அலுவலக நிர்மாணம் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்தினார்.
இவ்வாறான விடயங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட போதும் எவ்வித பயனும் எமக்குக் கிட்டவில்லை எனக் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான விடயங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட போதும் எவ்வித பயனும் எமக்குக் கிட்டவில்லை எனக் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடமாகாணத்தின் உண்மையை அறியும் குழுவின் ஏற்பாட்டில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் கடந்த கால உள்நாட்டு யுத்தம் காரணமாகக் காணாமல் போனவர்களின் விபரங்களைக் கேட்டறியும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(29) முற்பகல் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிக்கு அண்மையிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் யாழ். உயர்நீதிமன்ற ஓய்வு நிலை நீதிபதி இ. வசந்தசேனன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாகக் காணாமல் போன எமது உறவுகளுக்கு வழங்கப்படும் மரணச்சான்றிதழ்கள் எமக்கானதொரு தீர்வாக அமையாது. இது எங்களுக்குப் பலவித துன்பங்களை ஏற்படுத்தும். நல்லிணக்க அரசாங்கத்தின் மீது எமக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம்,மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சர்வ மதக் குழுக்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் காணாமல் போனவர்களின் உறவுகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டனர். இந்த நிகழ்வில் யுத்தத்தால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வில் சமாதானச் செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், யாழ்.பல்கலைக் கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம், யாழ்.பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஜி.தில்லைநாதன், மதத்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட வளவாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைச் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்.
0 comments:
Post a Comment