இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய தீர்மானமாகும். அதற்கான சூழலே இல்லை என இலங்கை அரசாங்கத்தால் அழுத்தமாக சொல்லப்பட்டு வரும் நிலையில் காலநிலை நீடிப்பை வழங்கக் கூடாது. இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டுமே தவிரத் தொடர்ந்தும் இலங்கைக்கு க் கால நீடிப்பை வழங்கக் கூடாது என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஐ. நாவுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுபுறம் கால அவகாசத்தை அரசாங்கத்தை வழங்குவதற்குத் தங்களது கட்சி தயாராகவிருப்பதாகவும் நேற்று முன்தினம் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் இன்று வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு அழைப்பது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் அறிவித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்பாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாத்திரமல்லாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஆகியோர் சர்வதேச விசாரணையை அடியோடு நிராகரித்திருக்கிறார்கள்.
இதிலிருந்து சர்வதேச நீதிபதிகள் மூலமாக இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லை என்பது வெளிப்படையாகப் புலப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இராணுவத்தினர் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்ற விடயமும் அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுச் சொல்லப்பட்டு வருகிறது.
இலங்கைக்குக் கால நீடிப்பு வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்திக் கூட்டமைப்பைச் சேர்ந்த எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கியநாடுகள் சபைக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசம் வழங்குவதற்குத் தங்களது கட்சி தயாராகவிருப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து அல்லது தமிழரசுக் கட்சியின் சொந்தக் கருத்துக்களே தவிர ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்ல எனவும் சுட்டிக் காட்டினார்.
0 comments:
Post a Comment