ஒரு மாணவனை நல்லதொரு மனிதனாக உருவாக்கும் உயர்ந்த ஸ்தாபனம் பாடசாலை ஒரு மாணவனை உருவாக்க வேண்டிய பிரதான பொறுப்புப் பாடசாலையைச் சார்ந்தது. ஆளுமை மிக்க, முன்னுதாரமான மாணவச் சமூகம் உருவாகப் பாடசாலைச் சமூகம் முன்னிற்க வேண்டும் எனத் தெரிவித்தார் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராஜா.
யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை(29) முற்பகல்-09 மணி முதல் பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பாடத் திட்டங்களை மையப்படுத்திய கல்வியை மாத்திரம் மாணவர்களுக்குப் போதிப்பதுடன் நின்று விடாது மாணவர்களை இணைப்பாட விதானங்களிலும் கவனம் செலுத்த நாம் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான நூலக வசதிகளை உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பாடசாலையின் வளர்ச்சி என்பது ஒரு பாடசாலையின் கட்டட வளர்ச்சியுடன் மாத்திரம் வைத்துக் கணிப்பிடப்படுபவதல்ல. மாணவர்களில் பரீட்சைகளில் சித்தி பெறுவது பாடசாலைக் கல்வியின் வளர்ச்சியின் ஒரு படி.
நான் பல்வேறு பாடசாலை விழாக்களிலும் பங்குபற்றியிருக்கிறேன். பல பாடசாலைகளிலும் அதிபர்கள் மாணவர்களின் ஒழுங்கு விதிகளைச் சரிவரக் கண்காணிப்பதில்லை. மாணவர்கள் ஏதோ பரிசில் பெற வருவார்கள்...வாங்குவார்கள்... போவார்கள்...இவ்வாறான விழாக்களுடன் மாத்திரம் மாணவர்களின் ஒழுங்கு விதிகள் முடிந்து விடப் போவதில்லை. மாணவ சமூதாயத்தின் மனதில் படிகின்ற ஒழுங்கு முறை.
நான் இந்தப் பாடசாலையில் மாணவப் பருவத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போது டின்னர் இடம்பெறும். அப்போது அதிபராகவிருந்த திரு.சுப்பிரமணியம் டின்னருக்கு முன்னர் ஒரு கூட்டம் வைத்து நாங்கள் எவ்வாறு உணவுண்ண வேண்டும்?, உணவு முறைகள் என்ன? என்பது தொடர்பிலே எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவார். அவர் அன்று வழங்கிய அறிவுரைகளை இன்றும் நான் எனது வாழ்விலே பின்பற்றி வருகிறேன் என்றார்.
0 comments:
Post a Comment