தமிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகனராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில் அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் தங்கமும் பிடிபட்டிருக்கிறது.
'முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்குப் பிறகே, வருமான வரித்துறை சோதனை வேகமெடுத்தது' என கார்டன் வட்டாரத்தில் உறுதியாக நம்புகிறார்கள்.
பிரதமரைச் சந்திக்க ஓ.பி.எஸ்ஸுடன் தம்பிதுரையும் உடன் சென்றார். ஆனால், தம்பித்துரை வருவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை. ஓ.பி.எஸ் மட்டுமே பிரதமரை சந்தித்தார். தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தாலும், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் இடையூறுகளைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, கார்டன் தரப்பில் இருந்து வரும் நெருக்குதல்களையும் விவரித்திருக்கிறார். அதன் விளைவாகவே, ராம மோகன ராவ் உள்பட கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை என விவரித்துள்ளார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
0 comments:
Post a Comment