//]]>

Wednesday, December 28, 2016

பேர்ல் துறைமுகத்தில் ஜப்பான் பிரதமர் அஞ்சலி



இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

ஜப்பான் பிரதமரின் இந்த வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ளது பேர்ல் துறைமுகம். இங்கு கடந்த 1941-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி ஜப்பான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஜப்பான் மீது அமெரிக்கா போர் பிரகடனத்தை வெளியிட்டது. பேர்ல் துறைமுக தாக்குதலுக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா களம் இறங்கியது.

பேர்ல் துறைமுக தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களை நினைவுகூரும் வகையில் ஹவாய் தீவில் யுஎஸ்எஸ் அரிசோனா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவகத்துக்கு ஷின்ஷோ அபே புதன்கிழமை வந்தார். அவரை அதிபர் ஒபாமா கைகுலுக்கி வரவேற்றார்.
இருவரும் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து சிறிது நேரம்
மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்த ஷின்ஷே அபே, இதுபோன்ற கொடூரமான போரில் இனி ஒருபோதும் நாம் ஈடுபடக் கூடாது என்றார்.

ஒபாமா கூறுகையில், "போரினால் வெல்ல முடியாததை அமைதியின் மூலம் வெல்லலாம் என்பதை இந்த உலகுக்கு நாம் இருவரும் கூறலாம். தண்டனையைவிட சமரசம் செய்துகொள்வது அதிக வெகுமதிகளைத் தரும்' என்றார்.



முன்னதாக, ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு கடந்த மே மாதம் ஒபாமா பயணம் மேற்கொண்டார். அந்நகரில்தான் அமெரிக்கா முதல் முறையாக அணு குண்டுகளை வீசி இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்தப் பயணத்தை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் அமெரிக்கா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment