நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டுச் செயல் திறன் அரங்க இயக்கத்தினரால் சிறுவர்களுக்காக விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொம்மைகள் மற்றும் நிழற்பாவை நாடகங்கள் நல்லூரில் மேடையேறவிருக்கின்றன.
இந்த நாடகங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம்- 26ஆம் திகதி ஆரம்பமாகிப் புதுவருட தினத்தன்று முடிவடையவுள்ளன. சிறுவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவங்களை நாடகங்கள் மூலம் வழங்கிவருகின்ற செயல் திறன் அரங்க இயக்கம் இந்த ஆண்டு புதிதாக முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் சிறுவர்களுக்கான நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றுகின்றது.
வருடாந்தம் நல்லூர் திருவிழாக்காலத்தில் சிறுவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வருகின்ற செயல் திறன் அரங்க இயக்கம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் 'மழைக்காலத்தில் மழலைகளுக்கான பாவைகள் அரங்கு' எனும் தொனிப் பொருளில் இந்த நிகழ்வை ஒழங்கு செய்திருக்கின்றது.
பொம்மைகளும் நிழற்பாவைகளும் விசேடமான மேடையில் நாடகமாடவுள்ளன.’பாட்டி’, ‘கொண்டைச் சேவலார்’’,’பசுவும் புலியும’, ‘நாங்கள் காற்று’ ஆகிய நாடகங்கள் இந்த விழாவில் ஆற்றுகை செய்யப்படவுள்ளன. ஒரு நாளில் இரண்டு நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படுகின்றன. சிறுவர்களின் மகிழ்விற்கு ஏற்றதான கதைகள் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.
தொடர்ச்சியாக ஏழுநாட்கள் நடைபெறுகின்ற இந்த நாடக விழா சிறுவர்களுக்கான அரிய வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ள செயல்திறன் அரங்க இயக்கம் இந்த நாடகங்களைக் கண்டு களிக்க விரும்புவோர் முன்பதிவுகளை 0212216061 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment