தமிழ்மக்கள் பேரவையின் கிழக்கு எழுக தமிழ் பிரகடனம் கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளைச் சரியாக அணுகவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று 13.02.2017 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் பேரவையினால் அண்மையில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியில் தமிழ்மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான் பேசுபொருளாக இருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுடன் நான் இணங்கவில்லை. நீங்கள் தமிழ்மக்களுடைய பிரகடனத்தை எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை விடயங்களை எவ்வாறு கையாள்வது?, எவ்வாறு தீர்ப்பது? போன்ற விடயங்கள் தான் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையே உண்மையில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தித் தான் உருவாகியிருக்கிறது.
போருக்குப் பின்னர் கடந்த 55 வருடகாலமாகத் தென் தமிழ்தேசமான கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் வடக்கு மாகாணத்திலும் உருவெடுத்துள்ளது.
தமிழ்மக்கள் பேரவை ஒட்டு மொத்தமாகவிருக்கக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலேயே எங்கள் அரசியலமைப்பு முன்மொழிவையும், எழுக தமிழ் பிரகடனத்தையும் தயாரித்துள்ளோம் என்றார்.
தமிழ்மக்கள் பேரவை ஆரம்பித்த காலம் முதலே பெண்களின் பிரதிநித்துவம் இல்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தக் கருத்துடன் நாங்கள் முழுமையாக இணங்கிறோம். தமிழ்மக்கள் பேரவையின் முதலாவது அமர்விலேயே பெண்களின் பிரதிநித்துவம் இல்லாமலிருந்தமை தொடர்பாக என்னுடைய ஆரம்ப ஒன்றுகூடல் உரையின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன்.
இதன் பின்னர் சில பெண்கள் அமைப்புகளுக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டுத் தற்போது தமிழ்மக்கள் பேரவையில் பெண் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுடைய பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவேயுள்ளது.
நாங்கள் கடமைக்கு மாத்திரம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை வைத்திருக்காமல் இவ்வாறான பிரதிநிதித்துவமூடாக காட்டமானதொரு செயற்பாட்டை முன்னெடுப்பதன் ஊடாகத் தமிழ்மக்கள் பேரவை ஏனைய தரப்பினருக்கு முன்னுதாரணமாகவிருக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகவுள்ளது.
0 comments:
Post a Comment