//]]>

Tuesday, February 28, 2017

தமிழீழ தேசியமும் மறுசீரமைப்பும் : மு. திருநாவுக்கரசு


ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் ஈழத் தமிழர்களின் அரசியலானது தோல்விகளின் வரலாறாகவும், இழப்புக்களினதும், அழிவுகளினதும், துயரங்களினதும், சீர்குலைவுகளினதும் தொகுப்பாகவும் காணப்படுகிறது.

இத்தகைய தோல்விகளுக்கும் அவலங்களுக்கும் முழுச் சமூகமும், இதுவரை தலைமைதாங்கிய அனைத்து தலைமைகளும அறிவியற் சமூகமும் பொறுப்பேற்றாக வேண்டும்.

இத்தகைய தோல்விகளையும் துயரங்களையும், அழிவுகளையும் முதற்கண் நாம் ஒப்புக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் கூடவே இதற்கான பொறுப்புக்களை அதற்குரியவர்கள் ஏற்றுக்கொள்ளும் பண்பாட்டையும் நாம் வளர்த்தாக வேண்டும்.

நாம் தொடர்ந்தும் நூற்றாண்டுக் கணக்கில் தோல்வி அடைகிறோம் என்றால் எம்பக்கம் அதற்கான பெரிய தவறுகளோ அல்லது பிழைகளோ இருக்க வேண்டும்.

தோல்விகளை ஒப்புக்கொண்டும் அதற்கான காரணங்களை கண்டறிந்தும் எம்மை சரிசெய்யத் தவறுவோமானால் அடுத்த தலைமுறையையும், எமது இனிய பண்பாட்டையும் பலியிடும் குற்றத்திற்கு ஆளாகுவோம்.

எமது முன்னையோர் செய்த குற்றங்களையும், தவறுகளையும் எலும்பு மாலைகளாய் கோர்த்துக்கட்டி எம் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் அவலம் எமக்கு வேண்டாம்.

மாறாக களைய வேண்டியவற்றைக் களைந்து ஒரு புதிய மறுசீரமைப்பிற்கு முதலில் நாம் தயாராக வேண்டும்.

கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஒரு தமிழ் மகனிடமோ அல்லது ஒரு தமிழ் மகளிடமோ உனது இலட்சியம் என்ன என்று கேட்டால் சிறிதும் தயக்கமின்றி கல்விசார் துறையுடன் கூடிய இலட்சியங்களை முன்வைப்பார்கள்.

முதலாவதாக உயர்கல்வியைச் சார்ந்து அவர்களினது எண்ணம் இருக்கும். எடுத்தவுடன் ஒரு டாக்டராக வேண்டும் அல்லது ஒரு பொறியிலாளராக வேண்டும் அல்லது ஒரு கணக்காளராக வேண்டும் அல்லது ஒரு வழக்கறிஞராக வேண்டும் என இவ்வாறாக அவர்களது இலட்சியப் பட்டியல் நீளும்.

இப்போது அப்படியாக உன் இலட்சியம் என்ற கேள்வியை ஒரு தமிழ் மகனிடமோ அல்லது ஒரு தமிழ் மகளிடமோ அல்லது பெற்றோரிடமோ அல்லது பாட்டன்- பாட்டியிடமோ கேட்டால் எல்லோரது பதிலும் ஒன்றாக இருக்கும். அது 'வெளிநாடு செல்வது' என்பதுதான்.

இதனை வெறும் வெளிநாட்டு மோகம் என்று நாம் எழுமாத்திரத்தில் குறைகூறிட முடியாது. இது ஓர் அரசியல் சமூக நிர்பத்தந்தின் விளைவு. அனைத்துவகையான அரசியல் தோல்விகளினது விளைவு, தமிழ்த் தேசிய கட்டமைப்பை மெருகிடத் தவறியதன் விளைவு.

அதாவது ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஈழத் தமிழர்கள் இன்று எதிரிகளின் காலடிகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள், அந்நியர்களின் கைகளில் விடப்பட்டிருக்கிறார்கள்.

தம் தலைவர்களால் கைவிடப்பட்டவர்களாய் இருக்கிறார்கள், கடற் சாதாளைகளென வேரின்றி கண்டம் விட்டுக் கண்டம் அலைபவர்களாய், அலைகளால் அங்கிங்கென அடித்துச் செல்லப்படுபவர்களாய் உள்ளார்கள்.

தனக்கென ஒரு தாயம் இல்லையென்றால் பூமியின் எப்பகுதியிலும் அவனுக்கென்று ஒரு மதிப்பு இருக்க மாட்டாது.

advertisement
சவால்களும் துயரங்களும் ஏற்படும் போது அங்கிருந்து நிகரற்ற ஆளுமைகள் தோன்ற வேண்டிய அவசியம் உண்டு. நெருக்கடிகளுக்குள் மாண்டு போபவன் வரலாற்றை படைப்பதில்லை. ஒத்தோடுபவனால் ஏஜமானின் சேவகனாக இருக்க முடியுமே தவிர வரலாற்றின் நாயகனாக இருக்க முடியாது.

பிரச்சனைகளைக் கண்டு விட்டோடுபவனாலும் வரலாற்றை படைக்க முடியாது. அதோ, இதோ, ஏதோ என அங்கிங்காய் ஓடிப்பாயும் ஓடுகாலிகளாலும் வரலாற்றைப் படைக்க முடியாது.

ஒரு புலியை வெற்றிகொள்ள ஐந்து கழுதைப் புலிகள் கூட்டுச் சேரும். இது கழுதைப் புலிகள் எமக்குக் கற்றுத் தரும் பாடம். ஐந்து கழுதைப்புலிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள வீரம் செறிந்த புலி புறமுதுகிட்டோடும். இது புலி எமக்கு கற்றுத் தரும் பாடம்.

இப்போது நாம் கடந்த ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட எமது தொடர் தோல்விகளின் அனுபவத்தை கருத்தில் கொண்டு மனிதக்குல வரலாற்றிலிருந்தும், பிராணிகளினது வாழ்விலிருந்தும், இயற்கையின் விதிகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொண்டு எம்மை நாம் அரசியல் சமூக ரீதியாக ஒரு தேசிய மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய காலகட்டத்தில் நிற்கின்றோம்.

காலத்தின் இந்த கட்டளையை ஏற்று எம்மை சரி செய்து முன்னேறத் தவறினால் தொன்மையும், செழுமையும், பண்பாட்டு மெருகுமிக்க ஈழத் தமிழ் நாகரீகத்தை பலியிட்ட குற்றத்திற்கு ஆளாவோம்.

எம் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்தம் பிள்ளைகளும் வரப்போகும் அனைத்து தலைமுறையினரும் மகிழ்ந்திருக்கவல்ல ஒரு மேன்மையான தேசிய பண்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தி அதனை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினரின் தோள்களிலும் தலைகளிலும் உண்டு.

இந்த பூமிப் பந்தில் காலத்திற்குக் காலம் ஆங்காங்கே தீர்க்கதரிசிகளும், மகா புருஷர்களும், பேரரறிஞர்களும், மகான்களும் தோன்றியிருக்கிறார்கள். அதிக தீர்க்கத்தரிசிகளையும், ஞானிகளையும் பூமிக்கு பரிசளித்தோராக கிரேக்கர்களும், யூதர்களும் உள்ளார்கள்.

அவர்கள் வாழ்ந்த புவியியல் சூழலும் அதனடிப்படையிலான அவர்களின் பாரம்பரியங்களும் இத்தகைய உன்னதங்களுக்கு வழிவகுத்தன.

முள்ளிவாய்க்கால் பேரவலமும், பெருந்துயரமும் ஈழத் தமிழர்களின் கடந்த ஆயிரக்கணக்கான வாழ்வை மறுமதிப்பீடு செய்யுமாறு கட்டளையிடுகின்றன. நெருப்பு ஆக்கத்திற்கும் உதவும் அழிவிற்கும் உதவும். நெருப்பின் அளவுப் பரிமாணந்தான் அதனை ஆக்க சக்தியாகவோ அல்லது அழிவு சக்தியாகவோ வடிவமைக்கிறது.

நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை' என்றொரு கூற்றுண்டு. முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் பூத்த மலர்களாகப் போகிறோமா அல்லது அதில் எரிந்த சாம்பலாகப் போகிறோமா என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தலைவர்களும், சமூக நன்நோக்கம் கொண்டோரும், பொறுப்புணர்வு உள்ளோரும் தக்க பதில் காணவேண்டும்.

பெருநெருப்பில் பூர்த்தெழுந்த புது மலர்களாய் எழுந்த மாந்தர்களே நாகரீகங்களை படைத்துள்ளனர். காலத்தை வென்றும் காட்டியுள்ளனர். தீர்க்கதரிசி என்பவன் காலத்தை வென்றவனாவான்.

அப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் தோன்றுவதற்கான புறநிலை அனுபவங்களையும், அகநிலை உணர்வுகளையும், ஆழமான கேள்விகளையும் முள்ளிவாய்க்கால் தந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் எமக்கு அழிவைமட்டும் தரவில்லை கூடவே அது காலத்தை வென்ற சிந்தனைகளையும், மனித நேயங்களையும், உன்னத நாகரீகங்களையும் தோற்றுவிக்கவல்ல அனுபவங்களையும் தந்திருக்கிறது.

இப்போது ஈழத் தமிழ்த் தேசியத்தை மறுசீரமைக்க வேண்டும் என்ற முடிவை வரலாறு எம்மிடம் ஒப்படைத்துள்ளது என்பதை முதலில் ஏற்றுக் கொள்வோம்.

எம்மையொத்த இன அழிப்புக்கு உள்ளான யூதர்களின் படிப்பினையை ஒருகணம் மீட்போம். அதில் நல்லவற்றை மட்டும் எடுப்போம்.

advertisement
நீ எங்குதான் சென்றாலும் இறுதியில் உனது தாயகத்தில் வந்து அரசமைப்பாய்' என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூதர்களுக்கு தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. இதன்படி இஸ்ரேல் தமக்கென இறைவனால் வாக்களிக்கப்பட்ட பூமி என்ற முடிவுக்கு யூதர்கள் வந்தனர்.

ஐரோப்பாவில் யூதர்கள் இன அழிப்பிற்கு உள்ளாகினர். இதில் இட்லம் பேர் ஒரு கூர்முனை புள்ளியேயானாலும் முழு ஜேர்மனியர்களும், ஐரோப்பியர்களும் இதற்குப் பொறுப்பாவர். 1930களின் இறுதியிலிருந்து 1940களின் மத்திவரை இந்த இன அழிப்பு பரந்தளவில் அங்கு அரங்கேறியது.

அப்போது அவர்களுக்கு ஐரோப்பாவில் வாழ்வளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை ஐரோப்பியர்கள் யாருமே கொண்டிருக்காது ஆபிரிக்காவில் அல்லது தென் அமெரிக்காவில் எங்காவது ஓர் ஒதுக்குப்புறத்தில் யூதர்களுக்கு அரசமைக்க நிலம் ஒதுக்கலாமென ஐரோப்பியர்கள் சிந்தித்தனர்.

ஆனால் இதில் எந்த ஒரு தெரிவையும் யூதத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர்.

கட்டாந்தரையேயானாலும், புற்பூண்டுகள் முளைக்க மறுக்கும் கடும் பாறைகளேயானாலும் தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்டது போல தமக்கு வாக்களிக்கப்பட்ட பூமிக்குச் செல்வோம் என்ற முடிவுக்கு வந்தனர்.

யூதர்கள் மீதான ஐரோப்பியர்களின் அந்த இன அழிப்பு பாரீய அளவில் நிகழ்வதற்கு முன்னான காலங்களில் 'தானுண்டு, தன்வாழ்வுண்டு' என்று இருந்த யூதர்கள் புது மெருகுடன் நிமிர்ந்தெழுந்து யூத தேசியம் பாடத் தொடங்கினர்.

அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தனவந்தர்களும், பாமரர்களும் ஆண்களும், பெண்களும் ஒரு முடிச்சென திரண்டனர்.

தங்கள் பிள்ளைகளும், கர்ப்பிணித் தாய்மார்களும், காதலர்களும், முதியோர்களும், சிறுவர்களும், ஆண்களும், பெண்களுமென கொன்று குவிக்கப்பட்ட அனைவரின் பேராலும் சத்தியம் செய்து திடசங்கற்பம் பூண்டனர். பல்வேறு அணிகளை அமைத்தனர்.

இனப்படுகொலை செய்யப்பட்ட இடங்களில் தகவல்களை திரட்டினர். கொல்லப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவராவது மிஞ்சியிருந்தால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை பேணி சந்ததி விருத்தி செய்ய முற்பட்டனர்.

படுகொலையாளிகளையும், அவர்களுக்கு உதவியவர்களையும் கண்டறியும் அமைப்புக்களை உருவாக்கினர். அவர்களை நீதியின் முன் நிறுத்தவும், தண்டிக்கவும் புறப்பட்டனர்.

பலவேளைகளில் உயிருடன் எஞ்சியிருந்த ஹிட்லரின் கையாட்களை அடையாளங்கண்டு இஸ்ரேலுக்கு கடத்தி வந்து விசாரணை செய்து தண்டித்தனர்.

அப்படி கடத்தப்பட முடியாதவர்களை அந்தந்த நாடுகளில் வைத்தே ஏதோ ஒருவகையில் அவர்கள் தண்டித்துள்ளனர் என்பதை மொசாட் போன்ற அமைப்புக்களின் அதிகாரிகள் தாம் ஓய்வு பெற்றபின் அதுவும் பிற்காலத்தில் அவர்கள் எழுதிய குறிப்புக்களின் வாயிலாக அறியமுடிகிறது.

அவர்கள் மேற்படி நாஸிப்படையினரையும், அவர்களுக்கு துணைபுரிந்தோர்களையும், பழிவாங்கியதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறதேயானாலும் பிற்காலத்தில் பாலஸ்தீனியர்களுக்கு அவர்கள் இழைக்கும் அநீதிகளை நாம் ஏற்கமுடியாது.

யூதர்கள் பேரழிப்பில் இருந்து தம்மை மீட்டெடுக்கவும், மீள்நிர்மாணம் செய்யவும் ஐரோப்பாவில் உணர்வு பூர்வமாகவும் உயிர்த்துடிப்புடனும், புத்திபூர்வமாகவும் உயர்ந்த இராஜதந்திர மெருகுடனும் செயற்பட்ட விதங்கள் வரலாற்றில் அதிசயிக்கத் தகுந்த சாதனைப்படைத்த ஒரு அனுபவத்தை உலகிற்கு வழங்கியுள்ளது.

இனப்படுகொலைக்கு உள்ளான கருவிலிருந்த சிசுக்கள் முதல், கர்ப்பிணித் தாய்மார், பாலகர்கள், முதியோர்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைத்துவகை தகவல்களையும் திரட்டுவதில் வெற்றி பெற்றார்கள் எப்படி கொல்லப்பட்டார்கள், எவ்வகையான துன்பங்களுக்கும், சித்தரவதைகளுக்கும் உள்ளானார்கள் என்பதுடன் கூடவே யார் கொன்றார்கள், யார் அவற்றை ஆதரித்தார்கள் என்பது வரையான தகவல்களை அவர்கள் திரட்டுவதில் பெரும் கவனம் செலுத்தினார்கள்.

இத்தகைய தகவல் திரட்டல்களில் ஈடுபட்ட அனுபவங்களுக்கு ஊடாக அவர்களது உளவுத்துறையான மொசாத் வளர்ச்சியடைந்ததையும் இங்கு பதிவு செய்ய வேண்டியதுள்ளது.

யூதர்கள் இந்தப் பூமியின் எப்பகுதியில் வாழ்ந்தாலும், வேறொரு நாட்டின் குடிமகனாக இருந்தாலும் அவன் யூத தேசத்தின் நினைவுடனும், அதன் மீதான விசுவாசத்துடனும் வாழ வேண்டும் என்பதே அவர்களது பிரதான போதனையாகும். இதனை அவர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்கிறார்கள்.

நவீன சிந்தனைகளுடனும், விஞ்ஞான அறிவியல் வளர்ச்சிகளுடனும் தம்மை இணைத்து தேசிய உருவாக்கத்தை மேற்கொண்டார்கள். அவர்களிடம் காணக்கூடிய தேசிய பரிமாணம் கொண்ட பக்கத்தில் தவறில்லை. ஆனால் அவர்களிடம் காணப்படக்கூடிய தேசிய வெறிகொண்ட ஆக்கிரமிப்பு பக்கம் தவறானது.

நாம் இதில் சரியானதை மட்டும் படிப்பினையாக எடுத்துக் கொள்வோம். முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் நிர்வாணமாக்கப்பட்டு, கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கிகளால் சுடப்படும்காட்சிகளை சேனல்-4 ஆவணப்படத்தின் மூலம் காணும் போது மனிதகுலத்தின் இருதயமே நடுநடுங்கிப் போனது.

இப்படி காட்சிக்கு வந்தவை சொற்பம் ஆனால் காட்சிக்கு வராதவை கற்பனைக்கும் எட்டாதளவு உள்ளது.

இத்தகைய துயர் தோய்ந்த நிலையானது ஒரு நூற்றாண்டுகால தமிழ் தலைவர்களினது தவறுகளின் மொத்த விளைவாகும் என்பதையும் நாம் கருத்தில் எடுக்கத் தவறக்கூடாது.

பொழுது போக்கு அரசியலினதும், பகுதிநேர அரசியலினதும், பொறுப்பற்ற அரசியல் போக்குக்களினதும் விளைவும் இதற்கு பங்களித்திருக்கிறது.

ஒரு போதும் தமிழ்த் தலைவர்களிடம் ஓர் அறிஞர்படை இருந்தது கிடையாது. அப்படி ஒன்றை வைத்திருக்க அவர்கள் விரும்பியதும் கிடையாது. தமிழ் மண்ணில் கால்படாத தலைவர்கள், மண்வாசனை அறியாதவர்கள், மக்களின் பண்பாட்டு மனங்களை தெரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் நலன்கள் கருதி ஆடிய அரசியல் நாடகங்களின் துயர் தோய்ந்த நீழ்ச்சியை இன்றைய தமிழ்ச் சமூகம் அனுபவிக்கின்றது.

ஏன் இப்போதுகூட எமது தலைவர்களிடம் பொதுவாக தமிழ் மக்கள் பற்றிய, அவர்களின் அழிவுகள் பற்றிய புள்ளிவிவரங்களோ அல்லது அதற்கான ஆளணி அமைப்புக்களோ கிடையாது.

படுகொலைக்கு உள்ளான சிறுவர்களைப் பற்றிய கணக்கு யாருக்கும் இதுவரை தெரியாது. இத்தகைய புள்ளிவிவரங்களைத் திரட்ட பதவி வகிக்கும் தலைவர்கள் யாரும் முற்பட்டதும் இல்லை.

இப்படித்தான் முன்பும் தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை கட்டமைப்புக்களை சுதந்திரக் காலத்திற்குப் பின்னோ முன்னோ தமிழ்த் தலைவர்கள் உருவாக்கியதும் இல்லை.

இப்படிப்பட்ட உதாரணங்களில் இருந்து எமது வெறுமை நிலையையும், கையறு நிலைகளையும் புரிந்து கொள்ளலாம். இவற்றை மனதில் கொண்டு இப்போது எமது ஏனைய வெற்றிடங்களையும், அசமந்த அரசியல் யதார்த்தங்களையும் புரிந்து கொள்ளலாம்.

இப்பின்னணியில் இன்றைய யுகத்திற்குப் பொருத்தமாக தமிழ்த் தேசியத்தை எவ்வாறு அரசியல் சமூக ரீதியாக மறுசீரமைக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் பொறுப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகம் என்பது வெறுமனே 'புள்ளடி' போடும் ஓர் உடற்பயிற்சியல்ல. ஜனநாயகம் என்பது ஒரு பண்பாடு, அது ஒரு வாழ்க்கைமுறை. அனைவருக்கும் அரசியலிலும், தீர்மானம் எடுத்தலிலும் பங்கு கொடுப்பதற்கான ஒரு முறைமை. ஆனால் பிரிதிநிதிகளை தெரிவு செய்யும் ஒரு பயிற்சி மட்டும் ஜனநாயகம் என்றவாறே பலவேளைகளில் தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

தமிழ் மக்களின் அரசியலில் புள்ளடி போடும் கலாச்சாரம் உண்டே தவிர ஜனநாயகப் பண்பாடோ அதற்கான பாரம்பரிங்களோ இல்லை. இதுசார்ந்த பொறுப்புணர்வுகளும் தலைவர்களிடம் இல்லை.

அப்படி பொறுப்புணர்வு இருந்தால் தலைவர்கள் எனப்படுவோர் பகுதிநேர அரசியல்வாதிகளாக இருக்க மாட்டார்கள்.

பகலில் நீதிமன்றங்களும், வழக்குரைத்தல் தொழிலும் அல்லது நிறுவனங்களும் அதுசார்ந்த வர்த்தகங்களை பராமரித்தலும் அல்லது ஏதாவது பக்கவாட்டு பணம் தேடும் தொழிகள் என தமிழ்த் தலைவர்கள் பொறுப்பற்று இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த பொறுப்பற்ற நிலைதான் பெருமளவு காணப்படுகிறது.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும், கட்சி செயலாளர்களும், பொருளாளர்களும் முற்றிலும் முழுநேர அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். வேறு எந்தத் தொழிலும் அவர்கள் பார்க்கக்கூடாது என்பதிலிருந்து தமிழ் அரசியலை மறுசீரமைப்பு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

தனிமனித தீர்மானம் எடுக்கும் முறைமைக்கு கட்சிகளில் இடமிருக்கக்கூடாது. தீர்மானங்கள் கூட்டு பொறுப்புள்ளவையாக இருக்கக்கூடிய வகையில் கட்சிகளின் கட்டமைப்புகளும் அதற்கான மரபுகளும், சம பரதாங்களும் வடிவமைக்கப்பட வேண்டும்.

தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் பாரம்பரியம் வேண்டும். இந்த மறுசீரமைப்பு வெறுமனே மேற்கண்ட தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல.

அது சிந்தனை மாற்றத்தைக் கொண்டதாகவும், உயர்ந்த பண்பாட்டையும், பண்பாட்டு விழுமியங்களை முதன்மைப்படுத்தவதாகவும் பூகோள அரசியல் வளர்ச்சிக்கு முகம் கொடுக்க வல்லதாகவும், குழந்தையிலிருந்து முதியோர்வரை இளைஞர்கள், யுவதிகள் உட்பட அனைவரின் நலன்களையும் மேன்மைப்படுத்தவல்ல ஒரு தேசிய கட்டமைப்பை வடிவமைக்க வேண்டும் அது அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் அமைய வேண்டும்.

இவற்றைப்பற்றி பொறுப்புணர்வுடனும், நீண்டகால சமூகப் பற்றுடனும், மனித நேயத்துடனும் எமது குழந்தைகளையும், குழந்தைகளின் குழந்தைகளையும் நேசிக்கவல்ல மனப்பாங்குடனும் அரசியல், கல்வி, அறிவியல், கலை, பண்பாடு, வாழ்க்கை முறையென அனைத்தையும் இணைத்து புதிய தமிழீழ தேசிய மறுசீரமைப்பைப் பற்றி ஆழமாக சிந்திக்க முயலவேண்டியது அவசியம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment