முதியவர்கள் இளையவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். அரசியலிலும் சரி, ஏனைய சமூக நிறுவனங்களிலும் சரி இளையோரை அங்கீகரித்து அவர்களுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முதியவர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்.
ஏழாலை வடக்கு விவேகானந்தர் இளைஞர் கழகத்தின் ஆண்டு விழாவும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(26) ஏழாலை வடக்கு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
விவேகானந்தர் இளைஞர் கழகத் தலைவர் சைவப்புலவர் க.கனகதுர்க்கா தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய ச.லலீசன் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 13 வயது தொடக்கம் 29 வயது வரை உள்ளவர்களை இளைஞர் என அழைக்கின்றோம். இப்பருவம் சாதனைகளைச் செய்யத்துடிக்கின்ற பருவமாகும். தனக்கென ஓர் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் பருவம் ஆகும். இப்பருவத்தில் சமூகப் பணிகளில் ஈடுபட ஓர் இளைஞர் குழு முன்வருகின்றது எனில் அவர்களை ஊக்கப்படுத்தி அங்கீகரிப்பது வளர்ந்தவர்களின் கடமையாகும்.
இதனை விடுத்து, இளைஞர்கள் வாள் வெட்டுக் கலாசாரத்திற்குச் சென்று விட்டார்கள் என்றோ போதையில் கிடக்கிறார்கள் என்றோ ஒப்பாரி வைப்பதால் பயனில்லை. சில அமைப்புக்களில் வாழ்நாள் தலைவர்களாக இருக்க விரும்புகின்ற முதியவர்கள் தமக்குப் பின் யார் வருவார்? என அழுதுவடிவதையும் பார்க்கின்றோம்.
இளைஞர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உயர்வடைய வேண்டுமானால் ஒரு கொள்கையை பின்பற்றுங்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதனைத் தளர்த்தி விடாதீர்கள். நேரமுகாமைத்துவத்தை வாழ்வில் கைக்கொள்ளுங்கள்.
தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான நிகழ்வுகள் குறித்த நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை. அதேபோல அதனை முடித்து வைப்பதற்கும் நேர வரையறை இடப்படுவதில்லை. இன்றைய இளைய சமூகமே இதனை மாற்ற வல்லது. நேரம் என்பது மிகப்பெறுமதியான வளம் என்பதை உணருங்கள். சுவாமி விவேகானந்தர் நேரத்தைப்பற்றிக் குறிப்பிடும் போது ஓடுவது முள் அல்ல உன்னுடைய வாழ்க்கை என்கின்றார்.
உங்களுக்கென சில வரையறைகளை ஆக்கிச் செயற்படுவது ஆரம்பத்தில் கடினத்தன்மை வாய்ந்ததாகவிருந்தாலும், நாளடைவில் உங்கள் கொள்கைப்பற்றால் நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள் என்றார்.
விழாவில் சிறந்த பெறுபேறுகள் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் பதக்கங்கள் சூட்டப்பெற்றுக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments:
Post a Comment