//]]>

Friday, February 17, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னப் படுத்துவதற்கான மூலகாரண ஹர்த்தா சம்பந்தன்: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதில் எம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. ஆகவே,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டியவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிழையான வழியில் கொண்டு செல்பவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? எனச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்துவதற்கான மூல காரண ஹர்த்தாவாக சம்பந்தன் இருக்கிறார் என்கிற நிலைமையை அவரே உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆகவே, அவர் எதிர்வரும் காலங்களிலாவது சரியான பாதையில் கூட்டமைப்பை வழிநடாத்திச் செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். இது தொடர்பில் திட்டவட்டமான முடிவுகளை நாங்கள் உரிய வேளையில் மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்மக்கள் பேரவையில் உங்கள் கட்சியும் இணைந்து செயற்படுகிறது.  இந்த நிலையில் தமிழ்மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் பங்காளிக் கட்சிகளாகக் காணப்படுகின்றன. இந்த நிலையில் குறித்த கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பதை மீளாய்வு செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளரொருவர் வினாவினார். இதற்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,  

தமிழ்மக்கள் பேரவை என்பது ஒரு அரசியல் கட்சியல்ல. மாறாக ஒரு அழுத்தக் குழுவாக செயற்பட்டு வருகிறது என்பதும், அவ்வாறு தான் செயற்படும் எனவும் அதனுடைய இணைத் தலைமைகளால் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டு வருகிறது. தமிழ்மக்கள் நலன் சார்ந்து அரசாங்கமும், தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களும் எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைத் தமிழ்மக்கள் பேரவையூடாக அழுத்தமாகக் கொடுத்து வருகிறோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதொரு அமைப்பாகும். இந்த அமைப்பு உருவாகி நீண்டகாலமான போதும் அந்த அமைப்பிற்குள் நிறைய முரண்பட்ட தன்மைகள் காணப்படுகின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவாறே நாங்கள் அதிலுள்ள தவறுகள் தொடர்பாக மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம். ஆனாலும், தமிழ்மக்களைப் பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற பரவலான அபிப்பிராயம் காணப்படுகின்றது. 

தற்போது சம்பந்தன் மாத்திரம் ஏமாற்றப்படவில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்த இலங்கை அரசாங்கத்தால் தமிழ்மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் காணாமற் போனவர்கள் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தி வந்தனர். அந்த உண்ணாவிரதப் போராட்டம் வலுவடைந்த போது கொழும்பிலிருந்து வேறு வழியின்றி அரசாங்க அமைச்சர்கள் வவுனியா வருகை தந்து அவர்களுடன் பேச வேண்டியேற்பட்டது. இந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்ததா? அல்லது தோல்வியில் முடிந்ததா? என்பது வேறு விடயம்.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பிலிருந்து  அமைச்சர்களை வவுனியாவுக்கு வர வைத்தார்கள். 

தற்போது முல்லைத் தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தங்கள் காணிகளை விடுவிப்பதற்காக இரவு பகல் பாராது தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அந்தப் பகுதி மக்களைக் கொழும்பிற்கு வருகை தருமாறு  கூறினார்கள். ஆனால், அவர்கள் நாங்கள் கொழும்பிற்கு வரமாட்டோம். அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நாடாத்துவதற்கு இங்கு வரட்டும் எனக் கூறியுள்ளனர். இன்று 17 நாட்களுக்கும் மேலாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிப் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறித்த போராட்டத்தைத் தீர்த்து வைப்பதற்காக அமைச்சர்கள் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை நிச்சயமாக உருவாகும்.  இதிலிருந்து கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தின் வலுவை உணர முடிகிறது. 

தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ்மக்களின் நலன்கள் பால் நின்று போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தின் நலன்கள் பால் நின்று போராட்டங்களை இடைநிறுத்த முயற்சிப்பது அல்லது குழப்புவது, பிழையான வாக்குறுதிகளை வழங்குவது போன்றன தான் தற்போது இடம்பெற்று வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி நாங்கள் இதுவரை காலமும் இராஜதந்திர ரீதியாகப் போராடுகின்றோம். வெளிநாடுகளுடன் பேசுகின்றோம் எனக் கூறி வந்தாலும் தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வேதும் காணப்படவில்லை என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment