//]]>

Saturday, February 18, 2017

புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றக்கோரி வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயம் முன்பாக போராட்டம் (Photos)


யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட வலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் நேற்று 17.02.2017 காலை போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டநிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் ஆகியோருக்கு மகஜர்  அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பாடசாலை நலன்விரும்பி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எமது பாடசாலையில் உள்ள பழைய அதிபர் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிபர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆயினும் பழைய அதிபர் பாடசாலைக்கு பல  அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த வருடத்தில் வலிகாமம் கல்வி  வலயத்தில் சிறந்த அதிபர் மற்றும் சிறந்த பாடசாலைக்கான விருது இப் பாடசாலைக்கு கிடைத்துள்ளது. அவ்வாறு இருக்கையில் அதிபரை திடீரென மாற்றுவது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆகக் குறைந்தது மூன்று வருடங்களுக்கேனும் பழைய அதிபரை மீண்டும் இப்பாடசாலைக்கு நியமிக்குமாறு கேட்டுகொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

இப்போராட்டத்தின் இடையே புதிய அதிபருடன், மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாக அதிகாரி, கிராம சேவையாளர், ஊர்ப் பிரமுகர்கள், பாடசாலைக் சமூகத்தினர் கதைத்தபோது, தனக்கு பொருத்தமான பாடசாலையொன்று அமைந்தால் தான் அங்கு மாற்றலாகிச் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்று அவர் கூறினார்.

இதன்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய, வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்கள்,
பெற்றோர் சிலரை அழைத்துச் சென்று மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் திரு. ரவீந்திரன் அவர்களுடன் இதுபற்றி பேசுவதாக கூறியதோடு, புதிய அதிபர் பொருத்தமான பாடசாலை அமைந்தால் அங்கு செல்வதற்கு ஒப்புக்கொள்கின்றமையாலும், பொருத்தமான பாடசாலையை அவருக்கு வழங்கத் தயாராகவிருப்பதாக வலிகாமம் கல்விப் பணிப்பாளர் கூறுகின்றமையாலும் அவர்களுடன் பேசி பொருத்தமான, தற்போது வெற்றிடம் நிலவுகின்ற ஒரு பாடசாலையை புதிய அதிபருக்கு வழங்கவும், பழைய அதிபரை இங்கு மீண்டும் நியமிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment