விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி.சாந்தன். அந்தப் போராட்டத்தின் பின்னால் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரட்டுகின்ற மிகப் பாரிய வரலாற்றுப் பணியை ஆற்றுவதற்குப் பாடகர்களுக்கு, கலைஞர்களுக்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது. அந்த வகையில் சாந்தன் அண்ணா தன்னுடைய இனிமையான குரல்களால் மக்களைக் கவர்ந்து மக்கள் மட்டத்தில் அந்தப் பாடல்களூடாக ஒரு தெளிவையும், பற்றையும் ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை இலட்சியத்தின் பின்னால் அணிதிரட்டுகின்றதொரு புனிதமான கடமையை அவர் ஆற்றியிருக்கிறார் எனப் புகழாரம் சூட்டினார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன்.
ஈழத்தின் பிரபல புரட்சிப் பாடகர் எஸ். ஜி. சாந்தன் நேற்றைய தினம் காலமானமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
புரட்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பையும், வரவேற்பையும் பெற்ற ஒரு சிறந்ததொரு பாடகராக விளங்கினார். தமிழ்மக்களுடைய உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த வேளையில் தமிழ்த் தேசத்தின் உரிமைகள் தொடர்பாக எங்களை நாங்களே ஆளக் கூடிய தீர்வு தொடர்பாக, விடுதலை வேட்கை தொடர்பாக எமது மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பேரெழுச்சியை உருவாக்கத்திற்கு அவர் பாடிய பாடல்கள் மிகப் பெரும் பங்காற்றியுள்ளன.
அவ்வாறான புரட்சிகரமானதொரு பாடகர் யுத்தத்தின் பின்னர் ஒரு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதுடன், இராணுவ உளவுத் துறையின் மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உடல், உள ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டமையால் அந்த நோயிலிருந்து மீள முடியாத நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாக அவர் நோயுடன் கடுமையாகப் போராடிய நிலையில் அவரது உயிர் நேற்றைய தினம் எமது மண்ணை விட்டுப் பிரிந்திருக்கிறது.
அவரது இழப்பு எங்களுடைய மண்ணுக்கும், கலையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருக்கு நிகர் அவரே என்று சொல்லப்படும் வகையில் சிறந்த பாடகராகச் சாந்தன் அண்ணா விளங்கினார். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் பிரார்த்திப்பதுடன், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment