//]]>

Sunday, February 5, 2017

ஆடுகளிற்குக் குழை வெட்டிய குடும்பப் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்: ஏழாலையில் சோகம் (Photo)


யாழ்.ஏழாலை தெற்குப் பகுதியில் ஆடுகளிற்குக் குழை வெட்டச் சென்ற நடுத்தர வயதுக் குடும்பப் பெண்மணியொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த  சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(03) மாலை-03.30 மணியளவில் வழமை போன்று ஆடுகளிற்குக் குழை வெட்டுவதற்காகக் குறித்த குடும்பப் பெண்மணி கொக்கத் தடியை எடுத்துக் கொண்டு சென்று வீட்டு வளவுக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற கிணற்றுக்கருகில் நின்று கொண்டு ஆறுகால் பூவரசமரத்தின் மீது வளர்ந்திருந்த அரசமரக் குழைகளை முறிக்க முற்பட்டுள்ளார். அப்போது கால்தடக்கிப் பின்பக்கமாகக் கிணற்றில் விழுந்துள்ளார். குழை வெட்டி வருவதாகச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் கழித்தும் அவரைக் காணாத காரணத்தால் குறித்த பெண்மணியின் வயோதிபத் தாயாரும், சகோதரியும் இணைந்து வீட்டு வளவினுள்ளும், அயலிலும் தேடியுள்ளனர். 

அப்போது குறித்த பெண்மணியின் சகோதரி தற்செயலாக வீட்டு வளவில் அமைந்திருந்த கிணற்றை எட்டிப் பார்த்த போது சகோதரி இறந்த நிலையில் கிணற்று நீரில் மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரி ஓலச் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அவ்விடத்தில் அயலவர்கள் ஒன்று கூடி உயிரிழந்த நிலையில் குறித்த பெண்மணியின் உடலை மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாகக் கிராம சேவகரூடாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டதுடன், நேற்று முன்தினம் இரவு -10.30 மணியளவில் மல்லாகம் நீதிமன்றப் பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டார். பதில் நீதவானின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உயிரிழந்த பெண்ணின் சடலம் அனுப்பப்பட்டு அங்கு மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து குறித்த பெண்ணின் சடலம் இன்று சனிக்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

திருமணமாகி 15 வருடங்களேயான 49 வயதான குறித்த பெண்மணிக்கு 15 வயதில் ஒரு பெண் பிள்ளையும், 13 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment