சலூன் கடைக்குச் சென்று தமது தலைமுடியை இறக்கி விட்டுப் பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை இரு சிறுவர்கள் ஏமாற்றிச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்.ஊரெழுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுப் பிற்பகல்-05 மணியளவில் குறித்த சலூன் கடைக்குச் சென்ற 10 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட இரு சிறுவர்களும் சலூன் கடை உரிமையாளர் மூலம் தமது தலைமுடிகளை இறக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களில் ஒரு சிறுவன் தலைமுடியை இறக்கியதற்கான பணத்தைச் செலுத்திய போதும் மற்றைய சிறுவன் பணம் தன்னிடம் இல்லையெனக் கூறியுள்ளான். குறித்த சிறுவர்கள் ஏற்கனவே அறிமுகமில்லாத போதும் தாங்கள் ஊரெழுப் பகுதியிலேயே வசிப்பதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து முடி இறக்கியதற்கான பணத்தைச் செலுத்தாத சிறுவனை வீடு சென்று பணம் எடுத்து வருமாறும், அதுவரை அவனுடன் வந்த நண்பனான சிறுவனை அங்கேயே நிற்குமாறும் சலூன் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
இருவரும் இந்தக் கூற்றுக்குத் தலையாட்டியுள்ளனர். பின்னர், பணம் கொடுக்காத சிறுவன் வீடு சென்று பணம் எடுத்து வருவதாகக் கூறிச் சென்றுள்ளான். எனினும், அவன் சென்று சில நிமிடங்களில் சலூன் கடை உரிமையாளர் தனது வேலையில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு நின்ற சிறுவனும் அங்கிருந்து வேகமாக ஓடி மறைந்துள்ளான்.
சிறுவர்களின் இத்தகைய ஏமாற்றுச் செயல் குறித்துச் சலூன் கடை உரிமையாளர் இன்று ஆதங்கம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment