//]]>

Tuesday, February 7, 2017

விளையாடச்சென்ற பத்து வயதுச் சிறுவன் இரு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு: யாழில் சம்பவம் (Photo)


யாழ்ப்பாணம் - கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதியில் சனிக்கிழமை 04.02.2017 காணாமல் போன கஜேந்திரகுமார் கஜீபன் (வயது 10) என்றச் சிறுவன் பாதுகாப்பற்ற நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் மறுநாள் 05.02.2017 சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

அருகிலுள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்ற சிறுவன் கடந்த 04.02.2017 காணாமல் போயுள்ளான்.

குறித்த நாள் முழுவதம் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் மறுநாள் குறித்த அம்மம்மாவின் வீட்டின் அருகிலுள்ள நீர்த்தொட்டியில் இருந்து சிறுவனின் சடலம் அவதானிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கபுரத்திலுள்ள வீடுகள் அனைத்தும் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த பாதுகாப்பற்ற நீர்த்தொட்டி மக்கள் இப்பகுதியில் குடியேறுவதற்கு முன்னரே அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலப்பரப்பு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது வாகன சுத்திகரிப்பிற்குப்பயன்படுத்தப்பட்ட இந்த நீர்த்தொட்டி தற்போது மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.

இது தொடரப்பில் பிரதேச செயலகத்தினர் நடவடிக்கை எடுத்தபோதிலும் இராணுவத்தினர் தாம் இந்த தொட்டியை அகற்றித்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தும் அதை இன்று வரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினர் இந்த தொட்டியை அகற்றத்தவறிய காரணத்தினால் இதில் வீழ்ந்து ஒரு உயிர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கும் இம்மக்கள் இது போன்ற பல குழிகள் பாதுகாப்பற்ற பாழடைந்த பல கிணறுகள் இப்பகுதியில் காணப்படுவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அகதி முகாம்களை இல்லாமல் ஆக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வசிப்பதற்கு ஏற்புடையதல்லாத ஒரு பகுதிக்குள் மக்கள் இந்த அரசாங்கம் குடியமர்த்தியுள்ளதாகவும் வீடுகளைத்தவிர குடிநீர் வசதிகூட இன்னும் செய்யப்படவில்லை என்பதையும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லிணக்கபுரத்தில் மொத்தமாக நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வசித்துவருவதாகவும் தமக்கு தகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தி தரவேண்டும் என்றும் இல்லையென்றால் தாம் இங்கு தொடர்ந்தும் வசிக்கமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment