//]]>

Saturday, February 18, 2017

தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் மூத்தோர்களைப் பராமரிப்பதற்காக இரு புதிய கட்டடங்கள் திறப்பு (Photos)


யாழ்.சுழிபுரம் தொல்புரம் சிவபூமி முதியோரில்லம் ஆரம்பமாகிப் பத்தாவது ஆண்டு  பூர்த்தியாவதையொட்டிப் புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(16) முற்பகல்-09.30 மணி முதல் சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் மூத்தோர்களைப் பராமரிப்பதற்காகப் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.  

புதிதாக அமைக்கப்பட்ட மகேஸ்வரி அம்பாள் மண்டபத்தை அமைப்பதற்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய அவுஸ்திரேலியா மேல்போனைச் சேர்ந்த திருமதி-ஜெயலக்ஸ்மி சாரட் தம்பதிகள் குறித்த மண்டபத்தையும், யோக சுவாமிகள் மண்டபத்தை அமைப்பதற்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய நீர்கொழும்பைச் சேர்ந்த எஸ்.பி.ஏஞ்சல் இந்த மண்டபத்தையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர். 

விழாவில் சிவபூமி அறக் கட்டளையின் உபதலைவர் க.சிவாஜி வரவேற்புரை நிகழ்த்தினார். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர்  ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் ஆசியுரைகளை நிகழ்த்தினர். சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது. 

விழாவில் முதியோர்கள், சிவபூமி மன விருத்திப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

குறித்த முதியோர் இல்லத்தில் தற்போது 79 முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இல்லத்தில் மேலும் பல முதியவர்கள் இணைவதற்கு ஆவலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment