//]]>

Saturday, February 18, 2017

1600 ஏக்கர் நிலங்களை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் இராணுவத்தளபதியின் கருத்துக்கு சஜீவன் கண்டனம்


வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள 1600 ஏக்கர் நிலங்களை நிரந்தரமாகச் சுவீகரிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ள கருத்துக்குக்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் ச.சஜீவன்.

குறித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் வினாவிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது,  

இலங்கை இராணுவம் தமிழ்மக்களின் காணிகளைத் தொடர்ச்சியாக அடாத்தாகச் சுவீகரிப்பதும், அந்தக் காணிகளை இராணுவ உறுப்பினர்கள் தங்களுடைய நலன்களுக்காகப் பாவிப்பதும் தொடர் கதையாகவுள்ளது. 

வலிகாமம் வடக்கில் எங்கள் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்ட உரித்துக் காணிகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வழங்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும். நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கம் பெயருக்கு மாத்திரமே அவ்வாறு செயற்படுகிறதோ என எண்ணுமளவுக்கு அதனுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன. 

இலங்கை அரசாங்கத்தால் வலிகாமம் வடக்கில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள 2000 ஏக்கர் நிலப் பகுதியில்  700 ஏக்கர் வரையான காணிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆகவே, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும், ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தங்களுக்கு எதிரான தீர்மானங்கள் வராமலிருப்பதற்காகவே மீள்குடியேற்றம் என்ற போர்வையில் சில பகுதிகளை மாத்திரம் விடுவித்திருக்கிறது. 

ஆகவே, இவ்வாறான சில காணி விடுவிப்புக்கள் சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நாடகமே தவிர இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் முழுக் காணிகளையும் விடுவிக்க வேண்டுமென்பதில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறையில்லை எனவும் அவர் மேலும் சாடியுள்ளார்.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment