//]]>

Friday, February 3, 2017

யாழில் உள்ள பாடசாலையொன்றின் சீர்கேடுகளுக்கு எதிராக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)


வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்பட்ட யாழ்.சுன்னாகம்  நாகேஸ்வரி வித்தியாசாலையில் புதிதாகப் பெண் அதிபர் கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு முறைகேடுகளும்,நிர்வாகச் சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாகப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவலையும், ஆதங்கமும் வெளியிட்டுள்ளனர்.  

இவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய அதிபரை உடனடியாகப் பதவி நீக்க வலியுறுத்தியும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை-09.30 மணி முதல் யாழ்.வலிகாமம் கல்வி வலயத்திற்கு முன்பாக அமைதி வழிக் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டனர். 

இது தொடர்பாகப்  போராட்டம் மேற்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 

எமது பாடசாலையில் தரம்-01 முதல் தரம்-05 வரையான 350 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். 

வலிகாமம் கல்வி வலயத்தில்  ஆரம்பக் கல்விப் பிரிவில் எமது பாடசாலை கடந்த வருடம் வரை கல்வியில் முன்னணியிலிருந்தது. இதன் காரணமாகச் சுன்னாகம் பிரதேசத்திலிருந்து மாத்திரமல்லாமல் அயற்கிராமங்கள் பலவற்றிலிருந்தும் பல மாணவர்கள் எமது பாடசாலையில் இணைந்து கொண்டார்கள்.  

எமது பாடசாலையில் அதிபர் மாற்றத்தின் பின்னர் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் மிகவும் பின்னடைந்து செல்கிறது. பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளித்த பின்னரே அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை வருகை தருகிறார்கள். அதுமாத்திரமல்லாமல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாணவர்கள் பாடசாலையினை விட்டுச் செல்ல முன்னரே அதிபர், ஆசிரியர்கள் வீடு செல்கிறார்கள். இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் பிரச்சினைக்குரியதாகவுள்ளது. 

அதனை விடப் பாடசாலையின் ஆசிரியர்கள் பாடசாலை பாட வேளைகளில் தமது சொந்தத் தேவைகளுக்காகப் பாடசாலையை விட்டு அதிபரின் அனுமதியுடன் வெளியேறுகிறார்கள். 

முன்னைய வருடங்களில் தரம்-01 இற்குப் புதிதாக மாணவர்களை உள்வாங்கியவுடனேயே பாடசாலையை இனங்காணும் வகையிலான கழுத்துப் பட்டிகள் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த வருடம் புதிதாக மாணவர்களை உள்வாங்கிப் பலநாட்களாகியும் இன்னமும் மாணவர்களுக்கான கழுத்துப்பட்டிகள் கூட வழங்கப்படவில்லை. 

வலிகாமம் கல்வி வலயத்தின் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்த போதிலும் எமது பாடசாலையில் இன்னமும் விளையாட்டுப் போட்டி இடம்பெறவில்லை.

பாடசாலைக்கென உள்ள தண்ணீர்த் தாங்கியின் மேலுள்ள நீர்க் குழாய் உடைக்கப்பட்டுக் காணப்படும் நிலையில் மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் புதிய நீர்க் குழாய் பொருத்தப்படாத காரணத்தால் மாணவர்கள் தமக்குத் தேவையான சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். தற்போது தண்ணீர்த் தாங்கியின் மேலுள்ள மூடி திறந்த நிலையில் காணப்படுவதால் அதற்குள் பூச்சிகள் மற்றும் மாசுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தத் தண்ணீரைச் சில பிள்ளைகள் அறியாமல் குடிக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதனால், அந்தப் பிள்ளைகள் நோய்வாய்ப்பிற்குள்ளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.  

அத்துடன் பாடசாலை முடிவடைந்த பின்னரும் சில வேளைகளில் பாடசாலையின் வாயில் திறந்த நிலையில் காணப்படுகிறது. 

தான் தூரவிடத்திலிருந்து வருவதால் பாடசாலையின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை எனத் தற்போதைய அதிபர் தெரிவிக்கிறார். அதிபர் இவ்வாறு எமக்குக் கூறுவது முறையன்று. இது தொடர்பில் தான் பதவியேற்பதற்கு முன்னர் அவர் சிந்தித்திருக்க வேண்டும். 

முன்னைய அதிபர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எமது பாடசாலையில் அதிபராகப் பதவி வகித்துள்ளார். அவர் பதவி வகித்த காலங்களில் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த மாணவர்கள் கூட அவரது திறமையான நிர்வாகச் செயற்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்டு பரீட்சைகளில் சிறந்த புள்ளிகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இந்த வருடம் புதிதாகப் பாடசாலையில் இணைந்து கொண்ட பல மாணவர்களின் கொப்பிகள் இன்னமும் வெறுமையாகத் தானிருக்கிறது. 

முன்னர் ஒரு பிள்ளை பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லாது விடில் வகுப்பாசிரியர் இது குறித்து உடனடியாக அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்வார். அதிபர் குறித்த பிள்ளை பாடசாலைக்கு வராமைக்கான காரணங்களை ஆராய்ந்து பிள்ளைகளை ஒழுங்காகப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோர்களுக்கு கண்டிப்பான முறையில் கூறுவார். இதன் காரணமாகப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளைத் தவறாது பாடசாலைக்கு அனுப்பி வந்தார்கள். ஆனால், தற்போது பாடசாலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்காத மாணவர்கள் தொடர்பில் அதிபர் உரிய கவனம் செலுத்துவதே இல்லை. 

தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலதிக வகுப்புக்களுக்காக மாதாந்தம் ஒரு ஆசிரியருக்கு 500 ரூபா தர வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஒரு பிள்ளையிடம் 500 ரூபா வாங்கினால் அனைத்துப் பிள்ளைகளிடம் அறவிடும் பணம் பெரும் தொகையாகவிருக்கும். நாங்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் பாடசாலையில் இலவசக் கல்வியை நம்பியே எமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புகிறோம். அங்கும் கல்விக்குப் பணம் அறவீடு செய்தால் நாம் யாது செய்வோம்? இவ்வாறான செயற்பாடுகளிலிருந்தே பாடசாலை அதிபர் , ஆசிரியர்களின் கல்விச் செயற்பாடுகளை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும். 

தற்போதைய அதிபரின் செயற்பாடுகளால் மாணவர்கள் அவர் மீது மிகவும் வெறுப்படைந்த நிலையிலுள்ளார்கள். எமது பிள்ளைகள் இப்போதைய அதிபர் எமக்கு வேண்டாம். நாங்கள் வேறொரு அதிபர் வந்தால் தான் பாடசாலை செல்வோம் என அடம்பிடிக்கிறார்கள். 

வலிகாமம் கல்வி வலயத்தின் ஊடாகப் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்கென வழங்கப்படும் அரிசி, பருப்பு, தேங்காயெண்ணை என்பன சுன்னாகத்திலுள்ள பல சரக்கு விற்பனை நிலையமொன்றில் வியாழக்கிழமை பிற்பகல் இந்தப் பாடசாலையின் ஆசிரியை ஒருவரால் கொண்டு சென்று விற்கப்பட்டிருப்பது பெற்றோர்களாகிய எம்மாலும், ஊரவர்கள் சிலராலும் கண்டறியப்பட்டுள்ளது. அதிபர் பாடசாலையில் இல்லாத வேளையில் இடம்பெற்ற இத்தகைய செயற்பாட்டிற்குப் பாடசாலை அதிபரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என நாம் சந்தேகிக்கிறோம்.  

அதிபரின் பொறுப்பற்ற செயற்பாடுகளாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏனைய பாடசாலைகளுக்கு மாற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆகவே, இவ்வாறான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் தற்போதைய அதிபரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.எமது பிள்ளைகள் கல்வியில் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதே பெற்றோர்களாகிய எம்மனைவரதும் விருப்பமாகும். 

ஆகவே, எமது பாடசாலை சிறப்பாக இயங்க  திறமையான ஆண் அதிபரொருவரை அதிபராக உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறான பல கோரிக்கைகளை வலியுறுத்தியே நாம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த மாதம்-21 ஆம் திகதி எமது பல கோரிக்கைகளை வலியுறுத்தி மருதனார்மடத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக்  கல்விப் பணிப்பாளர், செம்மணி வீதியிலுள்ள மாகாணக் கல்வியமைச்சு, பத்தரமுல்லையிலுள்ள இராஜாங்கக் கல்வியமைச்சு என்பவற்றிற்குப் பாடசாலையின் பெற்றோர்களது கையொப்பத்துடன் கூடிய மகஜரைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளோம். அத்துடன் மீண்டும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இது சம்பந்தமாகச் சுட்டிக் காட்டி மகஜர் அனுப்பிய போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றனர். 

இன்றைய தினம் முற்பகல்-11 மணியளவில் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துப் பேசிய வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த வருடத்தின் முதலாம் தவணை முடிவடையும் மாத்திரம் கால அவகாசம் வழங்குமாறும், அதுவரை, அதிபரின் மேலதிக செயற்பாடுகளைக் தொடர்ச்சியாகக் கண்காணித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை விற்றமை தொடர்பில் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.    

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜே-199 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் மேற்கு கிராம அலுவலரின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment