//]]>

Wednesday, September 13, 2017

காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி


காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்துவதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 14 ஆம் இலக்க காணாமல் போனோர் பணியக சட்டம், 2017ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்துக்கு அமைய, செப்ரெம்பர் 15ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, காணாமல் போனோர் பணியகம் உருவாக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள், கடமைகள், ஆணை என்பன, செப்ரெம்பர் 15ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளன.

ஜெனிவாவில் நேற்று முன்தினம் தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடரில், உரையாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக செயற்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகி, 24 மணிநேரத்தில், சிறிலங்கா அதிபர் காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்தும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment