//]]>

Wednesday, September 13, 2017

பனை அபிவிருத்திச் சபையின் தீவிர முயற்சியால் உதயமான சர்வதேச பனைசார் சங்கம் (Photos)


தற்போதைய பனை அபிவிருத்திச் சபையின் தலைவரான வைத்திய கலாநிதி ஆர். சிவசங்கர் அவர்களின் இடைவிடாத முயற்சியின் பலனாக சர்வதேச பனை சார் சங்கம் உதயமாகியுள்ளது. சர்வதேச அளவில் பனையின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்லும் வகையில் செயல்பட இந்த சங்கம் உறுதி பூண்டுள்ளது.

“பனை வளத்தின் மகிமையை உலகறியச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் காலிமுகத்திடல் ஹோட்டலில் சர்வதேச கருத்தரங்கு 2017 ஆகஸ்ட் 25ம் திகதியன்றும், சர்வதேச கண்காட்சி 2017 ஆகஸ்ட் 25,26 மற்றும் 27ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கும் கண்காட்சியும் பனை வளமிக்க நாட்டிலுள்ள துறைசார் வல்லுனர்கள், ஆர்வலர்கள், பயனாளிகள், உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் ஒன்றுகூடிய கருத்துப் பரிமாற்றல்களுக்கான களமாக அமைந்திருந்தது.


2017 ஆகஸ்ட் 25ம் திகதியன்று காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கினை பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி ஆர்.சிவசங்கர் அவர்களின் தலைமையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கௌரவஅமைச்சர் தனது உரையில், 
பனை அபிவிருத்திச் சபை வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறான சர்வதேச ஆய்வரங்கை சிவசங்கர் அவர்கள் முன்னெடுத்து நடாத்தி பனை அபிவிருத்திச் சபையை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்கின்றமை பாராட்டுக்குரியது என்றும் தற்போதைய தலைவர் பதவி ஏற்று மிக குறுகிய காலத்தில் பல புதிய திட்டங்கள் அணுகுமுறைகள் மூலம் பனை அபிவிருத்திச்சபையின் விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும், பனை சார் உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத்தரத்திலும் குறித்து நோக்கத்தக்க முன்னேற்றத்தினை உருவாக்கியுள்ளமைக்காக தனது வாழ்த்துக்களையும் பனை அபிவிருத்திச்சபை பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் அன்றைய தினம் பனை அபிவிருத்திச் சபையின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உற்பத்தி பிரிவினால் புதிதாக சந்தைக்கு விடப்பட்ட பனம் பானத்தின் நவீன சுகாதார முறையிலான பொதியிடல் (Tetra Packaging) அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன் தனது உரையில் பனை அபிவிருத்திச் சபையானது எதிர்பார்ப்புகளை மீறி தீவிர வளர்ச்சிப்போக்கை காட்டி வருகின்றமைக்காக தலைவர் வைத்திய கலாநிதி ஆர் சிவசங்கரின் வழிகாட்டலுக்கும் பணியாளர்களின் அற்பணிப்பான சேவைக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

இக்கருத்தரங்கில் உள்ளூர் துறைசார் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பனைசார் ஏற்றுமதியாளர்கள், பயனாளிகள் வருகை தந்ததுடன் இந்தியாவிலிருந்து பனை வளம் சார் வல்லுனர்கள் மூவரும், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பிரதிநிதிகள், மலேசியாவிலிருந்து ஏற்றுமதியாளர்கள் பங்குபற்றியதுடன் அவர்கள் தங்களின் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

இதில் முதல் அமர்வாக  யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறைசார் முன்னாள் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரத்தினம் அவர்களின் தலைமையுரையுடன் இந்தியாவிலிருந்து வருகைதந்த பெங்களுரிலுள்ள  Pro B Products  இன் தொழிலதிபர் திரு.எச்.ஆர்.நாகராஜா அவர்களின்“Industrial Application in Palmyrah Industry”  எனும் தலைப்பிலான உரையும், இந்தியாவிலிருந்து வருகைதந்த பொறியியல் வல்லுனர் மற்றும் உணவு மற்றும் உணவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி பி.சி. வெங்கையா அவர்களின் “Palmyrah Cultivation, Utilization and Value addition in India – Present status and scope”  எனும் தலைப்பிலான உரையும், இந்தோனேசிய தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ Dwatmaji Hanomanresi  அவர்களின் “Cultivation of Palmyrah in Indonesia”  எனும் தலைப்பிலான விளக்கவுரையும் இலங்கையில் நாடாளவிய ‘சிமெக்’ மென்பான உற்பத்தியாளர் திரு. தர்மசிறி அலஹகோன் அவர்களின் “Traditional Palmyrah Products in Modern Packaging”  எனும் தலைப்பிலான கருத்துக்களையும் வழங்கியதுடன் மேலும் அவர்களுடனான கலந்துரையாடலில் பல காத்திரமான விடயங்கள் பரிமாறப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இரண்டாவது அமர்வாக யாழ். முன்னாள் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் தலைமையுரையுடன் இந்திய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர், ICAR Emeritus  விஞ்ஞானி மற்றும் பேராசிரியர்; ஃ கலாநிதி வி. பொன்னுச்சாமி அவர்களின் “Palmyrah status on its value addition of edible and non-edible products for scaling up from cottage to industrial status vision”  எனும் தலைப்பிலான உரையும், பனை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் கலாநிதி அனுலக்ஷி பாலசுப்ரமணியம் அவரினால் “Contribution of Palmyrah Research Institute towards the growth of Palmyrah sector in Sri Lanka” எனும் தலைப்பிலான உரையும், மலேசியாவின் ஏற்றுமதிக்கான இணைப்பாளர் திரு. சுரேஸ்கண்ணா கிருஸ்ணன் அவர்களின் “Palmyrah Industrial Application in Malaysia”  எனும் தலைப்பிலான விளக்கவுரையும் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.

இவர்களின் கருத்துக்களின் பின்னர் விடயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இறுதியாக அங்கு வருகை தந்திருந்த வல்லுனர்களின் வட்ட மேசை ஒன்றுகூடல் பனை அபிவிருத்திச் சபை தலைவர் வைத்தியகலாநிதி ஆர். சிவசங்கர்  அவர்களினால் நடாத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வல்லுனர்கள்  இந் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியமைக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். மேலும் வட்ட மேசை ஒன்றுகூடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இது போன்ற பனை வளம்சார் சர்வதேச கருத்தரங்குகள் பனை வளமிக்க சகல நாடுகளிலும் வருடத்திற்குகொருமுறை நடைபெறவேண்டுமெனவும், அந்நாட்டின் பனைவளம்சார் வல்லுனர்கள் சுழற்சிமுறையில் அதற்கு தலைமைத்துவம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
பனை வளம்சார் நாடுகளிலுள்ள வல்லுனர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கிடையே தொடர்பாடலை மேற்கொள்ளும் விதமாக ஒர் இணையதளம், சமூகவலைத்தளங்களான Facebook மற்றும் Whatsapp  ஆகியன வருகையடைதல் வேண்டும்.

சர்வதேச பனைசார் சங்கம் (International Palmyrah Association)  எனும் ஒரு அமைப்பினை உருவாக்குவதுடன் அதற்கான சட்ட வரையறைகள், உபசட்ட வரையறைகள் என்பன வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் (ERD) மூலம் ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.

இதன் ஆரம்பகட்டமாக சர்வதேச பனைசார் சங்கம் (International Palmyrah Association)  எனும் அமைப்பினை ஆரம்பிப்பதற்கு தலைவராக இலங்கையிலிருந்து பனை அபிவிருத்திச் சபையின் பிரதி பொதுமுகாமையாளர் திரு.எம்.பி.லோகநாதன், செயலாளராக இந்தியாவின் பொறியியல் வல்லுனர் பி.சி. வெங்கையா, உப தலைவராக இந்தோனேசிய தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ Dwatmaji Hanomanresi, உதவி செயலாளராக மலேசியாவின் Dato’ Ariffin Antony  மற்றும் இலங்கையின் சர்வதேச இணைப்பாளராக பனை அபிவிருத்திச் சபையின் உள்ளக கணக்காய்வாளர் திரு.இரா.இராமேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

சர்வதேச கருத்தரங்கு இனிதே நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து 2017 ஆகஸ்ட் 25 தொடக்கம் 27ம் திகதி வரையிலும் காலிமுகத்திடல் மைதானத்தில் சர்வதேச கண்காட்சியானது மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இக்கண்காட்சியில் பனை அபிவிருத்திச் சபையினால் வடிவமைக்கப்பட்ட பிரதான கூடத்தில் பனையோலையிலான புதிய வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் ஆராய்ச்சி பிரிவு, அபிவிருத்திப் பிரிவு, விரிவாக்கல் பிரிவின் கண்காட்சிக்கூடங்களில் காட்சிப் பொருட்களுடன் செயல்முறை விளக்கங்களும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் உற்பத்திப் பிரிவினதும், சந்தைப்படுத்தல் பிரிவினதும் விற்பனைக்கூடங்கள், உணவுச்சாலைகள் மூலம் வருகைதந்தவர்களின் வரவேற்பினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

மேலும் யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள பனை வளத்தினை நம்பி வாழும் பயனாளிகள், புனர்வாழ்வு அதிகார சபைக்கு கீழ் வாழ்வாதாரம் மேற்கொள்ளும் பயனாளிகள், மாவட்டரீதியான மகளீர் குழுவினர் மற்றும் வேறு பனைசார் உற்பத்தி விற்பனையாளர்களின் 20க்கு மேற்பட்ட கண்காட்சி விற்பனை கூடங்கள் மூலம் பார்வையிட வருகைதந்தவர்கள் சிறந்த பலனை பெற்றுக்கொண்டனர்.

இக்கண்காட்சிக்கு வருகைதந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
முக்கியமாக இவ்வாறான கண்காட்சியானது கொழும்பு மாநகரத்தில் மேற்கொள்ளப்பட்டமை பனை வளத்துறையில் தங்களுக்கு ஓர் புதிய அனுபவத்தினை வழங்கியுள்ளதையும், பனைசார் உற்பத்திகளின் பாரம்பரியரீதியான முழுமையான உற்பத்தித் தரத்தினை உணர்ந்தமையினையும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்முறை பனை அபிவிருத்திச் சபையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையிலான நவீன கண்டுபிடிப்பான பனம்பானத்தின் Tetra packaging  பொதிமுறையிலான வடிவமைப்பு, பனங்களியிலான யோகட் உற்பத்தி மற்றும் இலங்கை வாழ் மக்களால் இதுவரை காலமும் சுவையிடப்படாத பனங்களியிலான ஐஸ்கிரீம் ஆனது மிகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவுள்ளதென சிறியவர் முதல் பெரியவர்கள் வரையில் அதிகளவில் விரும்பப்பட்டு குறைந்த சில்லறை விலையில் கொள்வனவு செய்யப்பட்டது.

அத்துடன் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான கேள்வியினை கொண்ட பனைசார் உற்பத்திப் பொருட்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைவாய்ப்புகளை பெற்றுத்தர முன்வந்தனர். அதாவது குறிப்பாக பனங்களி, பனங்கட்டி, பனம்பானத்தின் வுநவசய pயஉமயபiபெ பொதிமுறையிலான வடிவமைப்பு, பனங்களியினாலான யோகட் உற்பத்தி, பனங்களியிலான ஐஸ்கிரீம் மற்றும் கல்லாக்காரம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளமை அறியக்கூடியதாக காணப்பட்டது.

இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சில பனையோலையிலான புதிய வடிவமைப்புகள் பொதுமக்களிடையே மிகவும் விரும்பத்தக்கதாக காணப்பட்டது. அவற்றிற்கான முன்பதிவுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு இறுதிநாளில் அவை முழுமையாக விற்றுத்தீர்க்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தென்பகுதியிலும் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களிலும் இது போன்ற கண்காட்சி நிகழ்வுகள் நடைபெறவேண்டுமெனவும் வருகை தந்தவர்களால் இறுதியாக கருத்து தெரிவிக்கப்பட்டது.



மேலும் இவ்வாறான ஒன்றுகூடல்களும் கண்காட்சியும் அடிக்கடி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

பனை வளத்தின் மகிமையை உலகறியச் செய்த இச்சர்வதேச கருத்தரங்கும் கண்காட்சியும் பனை அபிவிருத்திச் சபையின் அபிவிருத்தி முன்னேற்ற
பாதைக்கு வழிகோலும் விடயங்கள்:

சர்வதேச பனைசார் சங்கம் (International Palmyrah Association) எனும்  அமைப்பிற்கான தலைமைத்துவத்தினை பல்வேறு நாட்டின் உறுப்பினர்களை வகிக்கச் செய்வதால் உலகளாவிய ரீதியில் ஓர் பனைசார்ந்த ஒருங்கிணைப்பினை உருவாக்கியுள்ளது.

“பாரம்பரிய பனை உற்பத்தியின் நவீன பொதிமுறை” என்ற தொனியில் உருவாக்கப்பட்டு மிகவும் சாத்தியமான விதத்தில் சந்தைக்கு விடப்பட்ட பனம் பழச்சாற்றின் Tetra Packaging  முறைமை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் வரலாற்றில் ஓர் மைல்கல்லாக அமைந்தது.

சர்வதேச கருத்தரங்கில் பனை வளம்சார் வெளிநாட்டு வல்லுனர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களின் ஒத்துழைப்பான பங்குபற்றுதலினால் பனைவளம் சார்ந்த பல தொழில்நுட்ப பரிமாற்றங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இச் சர்வதேச கண்காட்சியின் மூலமாக பனை அபிவிருத்திச் சபையின் நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளின் பின்னர் பல புதிய உணவு வகைகள் மற்றும் நவீன வடிவமைப்பிலான பனையோலை உற்பத்திகள் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய சாத்தியக்கூறாக அமைந்தது. (உ+ம்: பனம் குக்கீஸ், பனம் குளுக்கோரச, பனம் மாஸ்மெலோ, பனங்களி கேக், பால்மி யோகட் மற்றும் பால்மி ஐஸ்கிரீம்)
அத்துடன், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உணவு உற்பத்திப் பொருட்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தன்மையினை உறுதியாக கொண்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டமையால் வாடிக்கையாளரின் முழு நம்பிக்கை தன்மையான கொள்வனவினை மேற்கொள்ள வழிவகுத்தது.

இக்கண்காட்சியினூடாக வித்தியாசமான சந்தைப்படுத்தல் நடைமுறையின் மூலமாக கணிசமான அளவில் விற்பனை அதிகரிக்கச் செய்தது.
சந்தைப்படுத்தல் நடவடிக்கையின்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களை இலகுவாக இணங்காண வழிசெய்ததுடன், அவர்களின் ஒத்துழைப்பில் பனைசார் துறையில் புதியதோர் விற்பனை பரிணாம வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்நிகழ்வு வித்திட வழிகாட்டியது.

அதிமுக்கியமாக உலகத்தையே இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பிளாட்டிக் உற்பத்திப் பொருட்களுக்கு மாற்றீடாக எமது சூழலுக்கு எவ்வித பாதிப்பினையும் உருவாக்காத வகையில் வாடிக்கையாளர் மற்றும் நாட்டின் நலன்கருதி மிகவும் மலிவான விலையில் பனையோலையிலான சந்தைப்பையொன்று அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட விதத்தில் பல்வேறு வகையில் 2017ம் ஆண்டில் இச் சர்;வதேச கருத்தரங்கும் கண்காட்சியும் கோலாகலமாக நிறைவு பெற்றிருப்பினும், நாம் “பனை வளத்தின் மகிமையை உலகறிகச் செய்வோம்” எனும் தொனிப்பொருளை மனதில் கொண்டு பனை வளத்தின் அபிவிருத்தி பாதையில் என்றென்றும் முன்னிற்போம்.

பனை வளம் எம் வாழ்வையும், தேசத்தையும் வளப்படுத்தும்...!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment