தியாக தீபம் திலீபனின் 30 ஆவது நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(26) யாழ். நல்லூரில் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழ். கைதடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து நல்லூரிலுள்ள தியாக திலீபனின் நினைவிடம் வரை முன்னாள் போராளியான இளைஞரொருவர் பறவைக்காவடி எடுத்துத் திலீபன் மீது கொண்ட உண்மையான அபிமானத்தையும், தேசப்பற்றினையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தைத் தாங்கி, 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்' ' இணையட்டும் வடகிழக்கு' என்ற வாசகத்தைத் தாங்கி குறித்த பறவைக்காவடி கைதடியிலிருந்து நல்லூரை நோக்கிச் சென்றது.
வீதிகள் தோறும் குறித்த இளைஞனின் செயற்பாட்டினைக் கண்டு மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும், திலீபனின் நினைவிடம் முன்பாகவும் தேங்காய் உடைத்து, திலீபனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினார்.
குறித்த இளைஞரின் செயற்பாடு பொதுமக்கள் பலரதும் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. திலீபனின் நினைவுகளைச் சுமந்து குறித்த இளைஞர் பறவைக்காவடி எடுத்து நீண்ட தூரம் பயணித்து அஞ்சலி செலுத்தியமை தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment