யாழ். சுன்னாகம் ரொட்டியாலடியில் கடந்த செவ்வாய்க்கிழமை(19) இரவு மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த நான்கு இளைஞர்கள் வீதியோரமாகத் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் பின்புறமாக மோதியதில் இளைஞரொருவர் உயிரிழந்ததுடன், மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதியை ஆட்பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் சோ. தேவராஜா அனுமதியளித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நான்கு இளைஞர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மோட்டார்ச் சைக்கிளில் யாழ். நகரத்திலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்தனர். மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் மது போதையிலிருந்துள்ளார். இந்நிலையில் கவனயீனமாக மோட்டார் ச் சைக்கிள் செலுத்தியமையால் சுன்னாகம் ரொட்டியாலடிப் பகுதியில் வீதியோரமாகத் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின்புறமாக மோட்டார்ச் சைக்கிள் கடுமையாக மோதுண்டுள்ளது.
இரவு- 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச் சேர்ந்த கேசரலிங்கம் ரஜிதரன்(வயது-29) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். அத்துடன் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடை ந்த இளைஞர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்திலுள்ளார். மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திய இளைஞர் உட்பட மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த ஏனைய மூன்று இளைஞர்களும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் தரித்து நின்ற யாழ். ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த டிப்பர் வாகனச் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புதன்கிழமை(20) மல்லாகம் நீதிமன்றத்தில் மல்லாகம் நீதிமன்றப் பதில் நீதவான் சோ.தேவராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
இதன் போது வாகனச் சாரதி சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி நா. பார்த்தீபன் குறித்த விபத்துச் சம்பவத்துக்கு வாகனச் சாரதி காரணமல்ல எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இதனையடுத்து வாகனச் சாரதியை 75,000 ரூபா ஆட்பிணையில் செல்ல பதில் நீதவான் அனுமதியளித்தார். சாரதியை ஆட்பிணையில் விடுவிக்கப் பொலிஸாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
0 comments:
Post a Comment