//]]>

Friday, December 22, 2017

இன்றைய யாழ்ப்பாணச் சமூகம் நாவலரை கெளரவப்படுத்தத் தவறிவிட்டது: கலாநிதி- ஆறு. திருமுருகன் கடும் ஆதங்கம்(Photos)

ஒரு காலத்தில் சிங்களவர்கள் தேசிய வீரர்கள் பட்டியலில் நாவலரைச் சேர்த்தார்கள்.  அநாகரிக தர்மபால, ஆறுமுகநாவலர், சித்திலெப்பை ஆகிய மூவரையும் தேசிய வீரர்கள் எனப் பதிவு செய்துள்ளனர்.இலங்கையின் கல்வி நூற்றாண்டு மலரில் மழலசேகர என்ற சிங்கள அறிஞர் நாவலர் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் சுதேசியர்களுக்கான கல்விச் சிந்தனைக்காகப் பாடுபட்ட ஒரு தேசியத் தமிழன் என அவர் போற்றியுள்ளார்.எங்கு சென்றாலும் ஒரு நாட்டின் தேசிய வீரரை மதிப்பார்கள். ஒரு நாட்டின் சுதேசிய விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை மதிப்பார்கள். ஆனால், சுதேசியத்துக்காகப் பாடுபட்ட ஆறுமுகநாவலரை யாழ்ப்பாணச் சமூகம் அல்லது இந்த நாடு இன்றைய காலத்தில் கெளரவப்படுத்தத் தவறிவிட்டது என  சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு- திருமுருகன் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இந்து மத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை விழா கடந்த அண்மையில் யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இவ்விழாவின் தொடக்க வைபவம் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்  செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது. நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  தொடக்க வைபவத்திற்குத் திருமுன்னிலை வகித்ததுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அமரத்துவமடைந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தவத்திரு யோகர் சுவாமிகளினதும், நாவலர் பெருமானுடைய குருபூசையையும் ஆண்டுதோறும் இந்த மண்டபத்தில் நடாத்த வேண்டுமென வேண்டுதல் விடுத்தார். அவரது வேண்டுகோளுக்கமைய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு, குருபூசை நிகழ்வுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்று வருகிறது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக உமாமகேஸ்வரன் பதவியேற்ற காலம் முதல் நாவலர் விழாக்களைப் பக்தி பூர்வமாக நடாத்த வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரைக் கெளரவிக்கும் வகையில் மாபெரும் மாநாட்டை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நல்லூரில் ஏற்பாடு செய்து நடாத்தியது.  இந்த வருடமும் ஆறுமுகநாவலர் மாநாட்டைப் பெரும் எழுச்சி விழாவாக நல்லூரிலும், கொழும்பிலும், மன்னார் மாவட்டத்திலும் ஏற்பாடு செய்து நடாத்துவது மிகுந்த பாராட்டுக்குரியது. இந்தச் செயற்பாடு எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.

நல்லைநகர் ஆறுமுகநாவலர் பெருமான் பிறந்திருக்காவிடில் திருநீற்றுப் பொலிவுடன் நாம் காணப்படுவதற்கு வாய்ப்பில்லை.

1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் எமது நாட்டிற்கு வருகை தந்து அனைத்துப் பெரும் ஆலயங்களையும் இடித்தழித்தார்கள். அந்த வகையில் மிகப் பெரும் ஆலயமாகத் திகழ்ந்த திருக்கோணேஸ்வரர் ஆலயம்,  யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட தெய்வீகத் திருக்கோயில்களான கீரிமலை  நகுலேஸ்வரர் ஆலயம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் போன்ற பெரும் கோவில்கள் இவ்வாறு இடித்து அழிக்கப்பட்டன. மிகுதியாகக் காணப்பட்ட ஆலயங்களை ஒல்லாந்தர்கள் இடித்தழித்தார்கள்.  அழிக்கப்பட்ட ஆலயங்களின் கற்களை எடுத்துத் தேவாலயங்களைக் கட்டியதுடன், சில ஆலயங்களின் கற்களை எடுத்துத் துறைமுகங்களும் அமைத்தார்கள். அதனைத் தொடர்ந்து படையெடுத்த ஆங்கிலேயர்கள் சைவசமயத்தவர்களை வேற்று மதங்களுக்கு மாற்ற வேண்டுமென்பதற்காக மறைமுகமகமான முறையில் பல்வேறு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இவ்வாறு சைவத்தமிழ் மக்கள் அனுபவித்து வந்த தொடர் வேதனைகளைத் துடைப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட பெருமகனே நாவலர் பெருமானாவார்.

56 வருடங்களும் 11 மாதங்களும் சிலநாட்களும் வாழ்ந்த போதும் சாதிக்க முடியாத பல சாதனைகளை அவர் தன் வாழ்நாளில் சாதித்துக் காட்டினார்.

தற்காலத்தில் சமூக சேவை, சமய சேவை செய்யுமாறு யாரிடமாவது கேட்டுக் கொண்டால் ஓய்வு பெற்ற பின்னர் செய்வோம் எனக் கூறுகிறார்கள். ஆனால், நாவலர் பெருமான் ஓய்வு பெற முன்னரே இந்த மண்ணை விட்டு மறைந்த போதும் அவர் சைவத்திற்கும், தமிழுக்கும் செய்த சேவைகள்  அளப்பரியது. நல்லூர்க் கைலாசபிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் வாழ்ந்து வரும் நாவலர் பெருமானின் உறவினர்களான மூத்தவர்கள் தம்முடைய பேரன், பேர்த்தி முறையிலான உறவுகள் சொல்லிய கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

போதிய நித்திரை மற்றும் உணவு ஏதுமின்றி விடிய விடிய ஏடுகளில் இலுப்பெண்ணை விளக்கு வைத்து எழுதிக் கொண்டிருப்பார். இதன் காரணமாக அவருக்குப் பல்வேறு நோய்கள் ஏற்பட்ட போதும் வைத்தியசாலை செல்லாது இடைவிடாது பணிகள் ஆற்றினார்.

பல கிலோ மீற்றர் தூரமுள்ள பருத்தித்துறை, புலோலி போன்ற பகுதிகளுக்கு நடந்து சென்று சொற்பொழிவு ஆற்றினார். மாடுகளைத் துன்பப்படுத்தக் கூடாது என்ற நல் நோக்கத்திற்காக மாட்டு வண்டியில் கூட ஏறுவதற்கு நாவலர் மறுப்புத் தெரிவித்தார்.

நாவலர் தனக்கென வழங்கப்பட்ட மனித வாழ்க்கைக் காலத்தை மிகவும் வருத்தி ஈழச்சைவத்தமிழ்ச் சமூகத்தைக் காப்பாற்ற முயன்றார் என்பதை எண்ணும் போது கண்ணீர் வருகிறது. தனது வாழ்நாளேயே எமது இனத்திற்கும், சமூகத்திற்கும் அர்ப்பணித்த பெருந்தகையாக நாவலர் பெருமான் திகழ்கிறார்.

அவர் அமரத்துவமடைவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தன் மாணாக்கர்கள் முன்னிலையில் "நான் ஒரு பிரம்மச்சாரியாகவிருந்து இந்தச் சமூகத்திற்காக இரவு பகலாக ஓயாது உழைத்ததுடன் எந்தவித உபகாரங்களையும் எதிர்பாராது சேவை செய்தேன். ஆனால், இந்தச் சமூகம் அதனை உணர்வதாக இல்லை. ஆனால், என் உயிர் பிரியும்  வரை என் பணியை நான் செய்து விட்டுப் போவேன். நான் வணங்குகின்ற பரம்பொருளாகிய சிவபெருமான் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென எழுத்தில் வடித்தார்.

தந்தை செல்வா தமிழரைச் சிவபெருமான் தான் காப்பாற்ற வேண்டுமெனக் கூறியதாக எல்லோரும் கூறுவார்கள். ஆனால், சைவத்தையும், தமிழையும், சமூகத்தையும் சிவபெருமான் தான் காப்பாற்ற வேண்டுமென நாவலர் பெருமானே முதன் முதலாகக் கூறியிருந்தார்.

அந்தப் பெருமகானைச் சைவத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்றென்றும் மறக்க முடியாது. மறக்கக் கூடாது.

இந்த நாட்டில் சுதேசிகளுக்காக முதன்முதலாகப் பாடசாலைகள் நிறுவிய பெருமை நாவலரையே சாரும்.  நாவலர் என்ற பெருமகன் இல்லாவிடில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற சைவக் கல்லூரிகள், சைவப் பாடசாலைகள் இந்த நாட்டில் உருவாகியிருக்க மாட்டாது. தேவாரம் பாடிப் பாடசாலைக் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்  வழக்கம் நடைமுறைக்கு வந்திருக்காது.

நாவலர் தனியே சைவத்தையும் தமிழையும் மாத்திரம் கற்குமாறு கூறவில்லை. அவர் முதன்முதலாக எழுதிய பாடத் திட்ட நூலில் பூமி சாத்திரத்தைக் கற்குமாறு கூறுகிறார். இதனால், நாவலருடைய சைவப்பிரகாச வித்திபாடி யாசாலையில் பூமி சாத்திரம் நாவலரால் பாடத் திட்டமாக உருவாக்கப்பட்டுக் கற்பிக்கப்பட்டது. சிலர் நாவலரை ஒரு சைவப் பெரியாராக மாத்திரமே பார்க்கிறார்கள். நாவலரை ஒரு சிந்தனைவாதியாக, இந்தச் சமூகத்தைக் காப்பாற்றிய சுதேசியாக கருதுகின்றவர்கள் தற்காலத்தில் மிகக் குறைவு.

நாவலரால் நல்ல தமிழ் பேசப்பட்டது. நாவலரால் சுதேசியம், பண்பாடு என்பன வாழ்ந்தது தொடர்பில் எம்மவர்கள் சரியான தெளிவில்லாமலிருப்பது மிகக் கவலைக்குரியது. அதனை மாற்றும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்தாண்டும், இந்த ஆண்டும் ஆறுமுகநாவலர் மாநாட்டை நல்லூரில் ஏற்பாடு செய்து புத்தெழுச்சியை உருவாக்கியிருப்பது மிகுந்த பாராட்டுதற்கும், வரவேற்புக்குமுரியது என்றார்.

(தொகுப்பு:- செல்வநாயகம் ரவிசாந்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment