//]]>

Wednesday, December 27, 2017

யாழ்.தெல்லிப்பழையில் 'மீண்டும் எழுவோம்' நிகழ்வு(Video,Photos)


சுனாமிப் பேரலையின் 13  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(26) யாழ். தெல்லிப்பழையிலுள்ள சிற்பாலயம் கலைக் கூடத்தில் நடைபெற்றது.

"மீண்டும் எழுவோம்" எனும் தொனிப் பொருளில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி. ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான வரலாற்றுப் பதிவான சுனாமி சிற்பத்தின் முன்பாக யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிரமுகர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் காலை-09.26 மணியளவில் மெழுகுதிரியேற்றி மெளன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கடந்த- 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம-26 ஆம் திகதி உலகையே அதிரவைத்த சுனாமிப் பேரலை, அதனைத் தொடர்ந்து இடம்பெறும் இயற்கை அனர்த்தங்கள், எதிர்வு கூரப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் அவற்றிற்கு முகம் கொடுப்பது எப்படி?, எம்மைப் பாதுகாப்பது எப்படி?, மீண்டும் எழுவது எப்படி? என்பன சம்பந்தமான ஆய்வரங்கம் துறைசார்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது.

யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் லயன் பொ.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வரங்கம் நிகழ்வில் பேராசிரியர் நா.சண்முகலிங்கன்,  யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச. ரவி, யாழ்.பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க.சிவராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்தினர். இதன் போது மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி. ஆனந்தன் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.

வரலாற்றுப் பதிவான சுனாமி சிற்பம் உட்படக் கடந்த இரண்டு தசாப்த காலமாக மேற்கு நாடுகள் பலவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்ட அமரர் ஏ. வி. ஆனந்தனின் உலகப் புகழ் பெற்ற பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

குறித்த கண்காட்சியை நேற்று மாலை வரை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

அத்துடன் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இந்த நிகழ்வில் வைத்துப் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இவ்வருடப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய ஐந்து மாணவர்களும் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment