//]]>

Wednesday, December 27, 2017

யாழில் இயற்கை அனர்த்தங்கள் எதுவுமில்லை! (Video)

யாழ். மாவட்டத்தில் இயற்கையாகக் கிடைக்கின்ற புவியியல் நிகழ்வுகள் காணப்படுகிறதே தவிர மக்களை மிக வேகமாகப் பாதிக்கக் கூடிய வகையில் இயற்கை அனர்த்தங்கள் எதுவுமில்லை என யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ச. ரவி தெரிவித்துள்ளார்.

சுனாமிப் பேரலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26) யாழ். தெல்லிப்பழையிலுள்ள சிற்பாலயம் கலைக் கூடத்தில் "மீண்டும் எழுவோம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் 24 மாவட்டங்களில் மேற்பரப்பு நீர்வளம் காணப்படுகின்றது. ஆனால், யாழ். மாவட்டம் மாத்திரம் தான் சிறப்புத் தன்மை வாய்ந்த தரைக்கீழ் நீரை மாத்திரம் மையமாகக் கொண்ட மாவட்டமாகக் காணப்படுகிறது. அந்தத் தரைக்கீழ் நீருக்கான மூல நீர் வளம் வருடத்தில் குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் மாத்திரம் கிடைக்கும் நீராகவேயுள்ளது.

அந்தத் தரைக்கீழ் நீரைச் சரியாக நாம் சேமித்து வைக்க முடியாத பட்சத்தில் அது வரட்சி நிலைமையை உருவாக்கும் பிரதான காரணியாக அமைகிறது. எனவே, மழை நீரைச் சேமிப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வது முக்கியமானது.

எமது மாவட்டத்தில் நீரினைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய பல குளங்களும், கேணிகளும் மூடப்பட்டுச் சீமெந்திலான கட்டடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே குறுகிய காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சியால் வெள்ளம் ஏற்படுகின்றது. இவ்வாறான காரணங்களாலேயே வெள்ள அனர்த்தம் ஏற்படுகிறதே தவிர வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்குப் புவியியல் நிகழ்வு ஒருபோதும் காரணமல்ல எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment