ஈழ ஊடகத் துறையின் அடையாளமாக விளங்கிய அமரர்- எஸ். எம். கோபாலரட்ணத்தின்( கோபு ஐயா) "நினைவழியா நாட்கள்" எனும் தலைப்பிலான நினைவஞ்சலிக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல்-03 மணி முதல் யாழ். நாச்சிமார் கோவிலடியிலுள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் மூத்த ஊடகவியலாளர் எஸ். எம். கோபாலரட்ணத்திற்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இ. தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவஞ்சலிக் கூட்டம் இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர்களான அ. பெருமாள், எஸ். யோகரட்ணம்(இராதேயன்) ஆகியோர் கோபு ஐயாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் க. கானமயில்நாதன் கோபாலரட்ணத்தின் உருவப்படத்தின் முன்பாக நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களான நடேசபிள்ளை வித்தியாதரன், பசீர் காக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்டோர் நினைவுச் சுடர்கள் ஏற்றினர்.
அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி, மற்றும் நினைவுரை நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம்,கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ,மூத்த ஊடகவியலாளர்கள்,ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment